அன்புள்ள உமையாள்!
3 வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறாய் நீ. உன்னை உள்ளங்கைகளில் ஏந்தியது நேற்றைப் போலவே இருக்கிறது, அதற்குள் 34 மாதங்கள் ஓடிவிட்டன. காலம் இவ்வாறானதே. நின்று பார்த்தால் மலை போலத் தெரியும், கடந்த பின்னர் சிறு துகளாகக் கூட பாவிக்க இயலாது. எனவே காலத்தின் அருமையை உணர்ந்து நடக்க நீ பழகிக்கொள்ள வேண்டும். என் வாழ்வில் 30 வருடங்களை வீணாகக்கழித்து விட்ட பிறகே எனக்கு இந்த ஞானோதயம் பிறந்திருக்கிறது. ஆனால் நீ 3 வயதிலேயே காலத்தைப் பொன் போலக் கருத வேண்டும் என எனக்கு ஒரு பேராசை. பொன் போன்றதானாலும், காலத்தை நம்மால் சேமிக்க முடியாது. நினைவுகளையும், வடுக்களையும் மட்டுமே காலம் என்னும் பொன் கொண்டு நாம் உருவாக்கி மனதில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். அப்படி நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் எப்படிப்பட்ட நினைவுகளை நாம் உருவாக்கிக் கொள்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.
காலத்தைப் பற்றிய புரிதல் ஒரு மனிதனுக்கு வருவதற்கு 3-5 வயது வரைதான் தேவைப்படும். உன் வயதொத்த குழந்தைகளும், நீயும் 'இப்போ', 'அப்புறம்', 'நேற்று', 'நாளைக்கு' என காலத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டீர்கள். உனக்கு நிகழ்காலமும், எதிர்காலமும், கடந்த காலமும் எல்லாமே 'நாளைக்கு' தான்! 'எப்போ கீழே விழுந்த?' - 'நாளைக்கு' - உன்னளவில், இந்த ஒரு சொல் முக்காலத்தையும் உள்ளடக்கியது.
ஆனால், வளர வளர, நீ காலத்தை அளக்கக் கற்றுக் கொள்வாய். அதன் அடிப்படையில் நிகழ்வுகளைக் கணிக்கவும், எதிர்கொள்ளவும் உலகம் உன்னை வழிப்படுத்தும். ஆனால், வளர்ந்த பின், கவனமாக இல்லாவிட்டால், காலத்தை நீ அளப்பதை விட, காலம் உன்னை அளவெடுக்கத் தொடங்கிவிடும், உன் ஆற்றலை மட்டுப்படுத்தத் தொடங்கி விடும். ஒரு குழந்தையாக உனக்கு இயல்பாகக் கைவந்த வித்தை, நிகழ்காலத்தில் நிலைத்து இருப்பது - கடந்த காலத்தைப் பற்றிய எண்ணமும் உனக்கு இல்லை, எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ, பயமோ, திட்டமிடலோ எதுவும் இல்லை. வளர்ந்த மனிதர்கள் இந்த வித்தையைக் கற்றுக் கொள்ள எவ்வளவோ முயற்சிக்க வேண்டியுள்ளது. Living in the moment என்று இதற்குப் பெயர். ஆனால் இதில் கற்றுக்கொள்வதை விட அதிகமாக கற்றதில் தேவையற்றதை மறக்க வேண்டியதே தேவைப்படுகிறது. To unlearn a few things.
எனக்கு இப்போது புரிந்த அளவில் காலத்தைப் பற்றி ஒரே ஒரு பாடத்தை மட்டும் உன்னுடன் இந்தக் கடிதத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இன்று காலை, நீயும் நானும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது தூரத்தில் ஒரு வயதான பெண், கையில் 3 பெரிய பைகளைத் தூக்க முடியாமல் தவித்துக் கொண்டே எதிருற்றார். அதைக் கண்ட நீ என்னிடம் சொன்ன வார்த்தைகள், நம் தமிழ் மரபின் பல்லாயிரம் ஆண்டு பண்பாட்டு முதிர்ச்சியின் இயல்பான வெளிப்பாடாகும்.
'அப்பா, அந்த அத்தைக்கு உதவி செய்'
அவர்களிடம் இருந்து ஒரு பெரிய மூட்டையை நான் தூக்கிக் கொள்ள, நாம் இருவரும் அவரது வீடு வரை சென்று அதைக் கொடுத்துவிட்டு வந்தோம்.
இது தான் காலத்தின் பயன். இது தான் பிறந்ததன் பயன். பிறருக்கு உதவுவது. பிறருக்குப் பயன்படுவது. நம்மை இழந்து பிறருக்கு ஒரு சிறு துயரேனும் நீக்குவது. இதனை நான் படிக்க மட்டுமே செய்திருக்கிறேன், உன்னால் இப்போது செய்தும் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன்.
உயரங்களுக்குச் செல்லச் செல்ல, உனக்குக் கீழே இருப்பவருக்குக் கை கொடுக்கும் வண்ணம் உன் தோள் தாழ்ந்தே இருக்க வேண்டும். அப்போது நீ இறைவனின் முன்பாகத் தலை நிமிர்ந்து நிற்கலாம். இங்கே யாருக்கும் தோள் கொடுக்காமல், நீ மட்டும் முன்னேறிச் செல்வதை விட காலத்தின் விரயம் வேறொன்றும் இல்லை. அப்படி ஒருவன் வாழும் ஒரு வாழ்க்கையின் முடிவில், நிச்சயமாக இறைவன் முன்னிலையில் அவன் கூனிக் குறுகித் தான் நிற்க வேண்டியிருக்கும்.
எனவே, உதவி செய் - உனக்கு வழங்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான செல்வம் - காலம். அதை உனக்கு மட்டுமின்றி உன்னைச் சுற்றியிருக்கும் உலகோர் நன்மைக்காகவும் திட்டமிட்டு செலவு செய்.
Keep it up, அன்பு மகளே! நான் உன்னை வளர்ப்பதைக் காட்டிலும், நீயே என்னை அதிகம் வளர்த்தெடுக்கிறாய்.
அடுத்த கடிதத்தில் சந்திப்போம்!
Commenti