குறிப்பு: இந்த சிறுகதை என்னுடைய சொந்த கற்பனை அல்ல. நான் பார்த்த ஒரு யூடியூப் காணொளியின் மேம்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பு மட்டுமே.
முன்பொரு காலத்தில் பதின்ம வயதில் இருந்து வளர்ந்து வரும் ஒரு வீராதி வீரனான இளைஞன் தொண்டை நாட்டில் இருந்தான். சூரியனின் கதிர்கள் பூமியைத் தொடும் போது அவற்றின் முதல் பிரதிபலிப்பு அவனது வாளில் தான் ஒளி வீசும். வாள் பயிற்சியில் அவனுக்கு இருந்த ஈடுபாடு அந்த வாளை அடித்து நிமிர்த்திய சம்மட்டியை விடவும் கனமானதாக இருந்தது.
ஒவ்வொரு நாளும் வைகறை தொடங்கி அந்தி சாயும் நேரம் வரை பல மணி நேரங்கள் தொடர்ந்து வாள் பயிற்சி செய்து உடலும், மனதும் வைரம் பாய்ந்து வளர்ந்து வந்தான் அவன். பயிற்சி முடிந்து வீடு திரும்பும் போது முன்பெல்லாம் பட்டாம்பூச்சிகளையும், அணில்களையும் இரசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்த அவனை தற்போது அவ்வூரின் இளம் கன்னிகளின் கண்கள் இரசிக்கத் தொடங்கியிருந்தன. அவர்களது காந்தப் புன்னகைக்கு பதிலாக கை அசைத்த வாறே அவனது நிமிர்ந்த நடை வீடு நோக்கிச் சென்றது.
வீடு திரும்பினாலும் ஓய்வறியாது அவனது கைகள், கைகால் முகம் கழுவி, உணவருந்தி விட்டு, மீண்டும் வாளைக் கையில் எடுத்து விடுவான். அதன் கூர்மையை சீர் செய்து, அதன் கலைநயமிக்க கைப்பிடியில் கறை நீக்கி, அதன் பளபளப்பை மெருகேற்றி... அவனுக்கு அந்த வாள் தான் எல்லாமே. அப்படி ஒரு நாள், அவன் தனது வாளோடு அளவளாவிக் கொண்டு இருக்கையில் சட்டென்று அவன் முன்னே உதித்தது ஒரு வெள்ளை பூதம்.
அதன் உருவம் அவன் இதுவரை பார்த்திராததொரு புதுமையாக இருந்தது. அவனென்றோ, அவளென்றோ, அதுவென்றோ சொல்ல முடியாத ஒரு தோற்றத்தில் இருந்தது அந்த பூதம். அதன் முகத்தில் எந்த சலனமும் இல்லை. சொல்லப்போனால் அதற்கு முகம் என்ற ஒன்றே இல்லை. திரண்டு மிதக்கும் ஒரு ஒளிப் பந்தாக அது அவன் முன் மிதந்து கொண்டிருந்தது. சட்டென்று வாளை உருவி அதனோடு எதிர் நின்றான் நமது வீரன்.
"யார் நீ"
"..."
"உன்னைத்தான்..."
"நான் காட்சி பூதம்" சலனமில்லாத ஒரு பதில்.
"உனக்கென்ன வேண்டும்?" "எனக்கு எதுவும் தேவை இல்லை.நீ பார்க்க விரும்பும் காட்சிகளைக் காட்ட என்னால் முடியும். அதைக் காட்டவே வந்தேன், சொல், உனக்கு என்ன பார்க்க வேண்டும்?"
அதன் குரலில் அதட்டல் இல்லை, கெஞ்சுவதாகவும் இல்லை. நமது வீரனுக்கு ஏதோ ஒரு சிந்தனை எழுந்தது.
"உலகின் மிகச்சிறந்த வாள் வீரனை எனக்குக் காட்டு" "அப்படியே!" சட்டென்று காட்சி பூதம் தன்னை பெரியதொரு ஓளி வட்டமாக உருமாற்ற அதன் மையத்தில் மெல்லத் தெரிந்தது ஒரு காட்சி. ஒரு வாள் வீரன், அதில் புலப்படலானான். அவன் மத்திம வயதுடையவனாக இருந்தான். அவனது கரங்களும் தோள்களும் மலை திரண்டு நிற்பது போல் இருந்தன. அவனது நெஞ்சம், கேடயத்தை விடவும் உறுதியானதாக இருந்தது. அவன் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது. தற்போது தான் ஏதோ போரில் அவன் பங்கேற்றிருக்க வேண்டும் என்பது போன்றிருந்தது அவன் உடை. அவன் புன்னகையில் வெற்றிக் களிப்பும், பணிவும் விரவி இருந்தது.
"இப்படி ஒரு வீரனாக நான் வளருவேன்" தனக்குள் தானே சொல்லிக் கொண்டான் நமது வீரன். ஒரு சில நிமிடங்களில் அந்தக் காட்சி புகை கலைந்தாற் போல கலைந்தது.
"வேறு என்ன பார்க்க வேண்டும்"
"உலகின் மிகச்சிறந்த போர்க்களத்தை எனக்குக் காட்டு" மீண்டும் ஒரு காட்சி, முன்னர் பார்த்த போர்வீரன் பங்கெடுத்த ஒரு போர்க்காட்சி. பேருவகையோடு அந்தப் போரையும் அதில் இவனது அபிமான வீரனின் வாள் வீச்சையும் இரசித்துக் கொண்டிருந்தான் நமது வீரன். சில நிமிடங்கள் கரைந்தன.
"இப்படி நானும் போரிடுவேன்" மனதுக்குள் ஒரு வைராக்கியம்.
"வேறென்ன பார்க்க வேண்டும்?"
தன்னை நோக்கி கையசைத்துப் புன்னகைக்கும் ஊர்க் கன்னிகளின் நினைவு வந்தது நமது வீரனுக்கு.
"உலகின் மிகச்சிறந்த அழகியைக் காட்டு"
கூரிய கண்களும், பவளம் போன்ற மேனியும், மந்திரப் புன்னகையும், வாளிப்பான உடலும், மென்மையான ஆடைகளும் அணிவகுத்து நின்ற ஊர்வலம் போல் ஒரு பெண் தோன்றினாள். சில பல நிமிடங்களை மெய்மறந்து கடந்தான் நமது வீரன். தன் ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் இவள் அழகில் நூறில் ஒரு பங்குக்கு ஈடாவார்களா என்று நினைத்துக் கொண்டான். சட்டென்று சுயநினைவுக்கு வந்தவனாய்,
"போதும். பார்க்கவேண்டியவற்றை பார்த்தேன், இங்கிருந்து போய்விடு"
"உங்களுக்கு என்னால் தொந்தரவு ஏதும் இருக்காது. இந்த அறையின் ஒரு மூலையில் உங்கள் உத்தரவுக்காக நான் காத்திருப்பேன். உங்களுக்கு எப்போது என்ன பார்க்க வேண்டுமோ, என்னைக் கேட்கலாம்"
அந்த பூதத்தினால் ஆபத்து ஒன்றும் நேர்ந்து விடவில்லை, அதன் தோற்றமும், அச்சுறுத்தலாக இல்லை.
"சரி. இருந்து கொள்"
பொழுது விடிந்தது, அறையின் ஒரு மூலையில் அந்த ஒளி வட்டம் மங்கலாக மிதந்து கொண்டிருந்தது. அதைக் கண்ணுற்றவனாக நாளைத் தொடங்கி, பயிற்சிக்குச் சென்றான் வீரன். அந்தி சாய்ந்தது.
முன்னை விட வேகமாகவும், அவசரமாகவும் வீடு நோக்கி தடம் போட்டன அவனது கால்கள். காட்சி பூதத்திடம் என்னென்ன பார்க்க வேண்டும் என மனதுக்குள் ஒரு பட்டியல் போட்டு வைத்திருந்தான் நமது வீரன்.
"காட்சி பூதமே! உலகின் தலைசிறந்த வாள்வீச்சைக் காட்டு" "அப்படியே"
"நாட்டின் மிகப்பெரும் கோட்டையைக் காட்டு"
"இதோ"
"..."
"உலகின் தலைசிறந்த அழகி....
...
...
...
... குளிப்பதைக் காட்டு"
"தங்கள் சித்தம்"
"..."
தன் முன் இருந்த அந்த தோற்றத்தில் மெய்மறந்தான். வழக்கமாக சில நிமிடங்களில் கரைந்து விடும் அந்தத் தோற்றம், நீண்டு கொண்டிருந்தது. அது நீள வேண்டும் என அவன் ஆழமாக விரும்பினான்.
இரவு அவன் களைப்புக்கு மருந்திடுவது போல் கண்களை மெல்ல வருடித் தூங்கச் செய்தது. அவனுக்கு அன்று என்னென்ன கனவுகள் வந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.
Comments