"நான் கல்லில் சிறைப்பட்ட தேவனைப் பார்த்தேன்; அவனை விடுதலை செய்யும் வரை அந்தக் கல்லைச் செதுக்கினேன்." - மிக்கேல் ஆஞ்சலோ
கல்லும் கல்வியும்
கல்லில் ஒரு உருவத்தைச் சிற்பி காண்கிறான். மற்ற எவரும் காணும் முன்பாகவே அவன் அதைக் காண்கிறான். ஒவ்வொரு மனிதனும் தன்னைக் கல்லில் அகப்பட்டுள்ள தேவனாகக் காண வேண்டும். அவனை மீட்டெடுக்கும் வரை, தன்னைத்தானே செதுக்கிக் கொள்ள வேண்டும். அந்த முயற்சி, அயராது, தொடர்ந்த முயற்சியாக இருக்க வேண்டும். அதற்குப் பெயர் - கல்வி.
கல்லும் இருக்கிறது, அதற்குள் கடவுளின் நகலாக நாமும் இருக்கிறோம். கல்வி நம்மைச் செதுக்குகிறது. கல்வி என்றால் ஏட்டுக் கல்வி மட்டுமா? இல்லை, அனுபவக் கல்வி, வாழ்க்கைக் கல்வி - அவற்றைச் சரிவரப் பயில ஒரு கருவியாக ஏட்டுக் கல்வி.
கல்லுக்குள் இருக்கும் கடவுள் கடந்த காலத்தின் எச்சம் அல்ல... எதிர்காலத்தின் உறுதிப் பொருள், மெய்ப்பொருள். கல் > கல்வி > கடவுள். இதுதான் சூத்திரம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது...
வெறும் கல் தான்,
நீ இருக்க நிழல் தருகிறது,
வீடு என்கிறாய்.
நீ உறங்க இடம் தருகிறது,
திண்ணை என்கிறாய்,
நீ ஆட இடம் தருகிறது,
மேடை என்கிறாய்!
அதே கல் தான்
ஒருவனுக்கு நிம்மதியும், ஆறுதலும், நம்பிக்கையும் தருகிறது,
அவன் அதைக் கடவுள் என்கிறான்...
சொல்லிவிட்டுப் போகட்டுமே? என்ன கெட்டுப் போகிறது?
ஆனால், அந்தக் கல்லைக் காட்டி
அவனை ஒருவன் ஏய்க்கப்பார்க்கிறான்.
அந்தக் கல்லைத் தீண்டும் உரிமை
எங்கள் பிறப்புக்கே உரியது என்கிறான்.
அந்தக் கல்லோடு பேசும் பாடை
எனக்குத் தான் தெரியும் என்கிறான்.
நிம்மதிக்கும், ஆறுதலுக்கும், நம்பிக்கைக்கும் அந்த ஏழை மனிதனுக்கும்
இடையே கடை விரிக்கிறான், உழைக்காமல் உண்டு பெருக்கிறான்.
இந்தச் சமூகமெனும் விவசாயத்தில்.
செறிவார்ந்த, மனிதக் கூட்டத்தை
அறுவடை செய்ய வேண்டுமென்றால்,
அவனைத் தான் களைய வேண்டும்.
நம்பிக்கையில் தெளிவு வேண்டும்.
கண்மூடிப் பழக்கங்கள் களையப்பட வேண்டும்.
மனிதருக்குள் விகற்பம் ஒன்றே தெய்வ குற்றம்,
தெய்வம் மன்னிக்காத ஒரே குற்றம்.
கல் கடவுளாக இருப்பதும், கடவுள் கல்லாக இருப்பதும்,
வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல... அறிவுத் தெளிவின் அடிப்படையில்
கல்லைச் செதுக்கினால் கடவுள் உருவம் வெளிப்படும்,
கல்வியைக் கொண்டு தன்னைத் தானே செதுக்கினால்,
கடவுளே வெளிப்படுவார்...
தமிழர்க் கடவுள் கோட்பாடு
தமிழரின் கடவுள் கோட்பாடு, முழுக்க முழுக்க அறிவு சார்ந்தது. முருகனின் வேலும், பிள்ளையாரின் ஆனை முகமும், அறிவைப் பற்றிய தத்துவங்களே. இதைப் பற்றி மேலும் இந்தப் பதிவில் காண்போம்... அடுத்த வாரம்.
Comments