top of page
Writer's pictureJohneh Shankar

குப்பைக்காரனாகிய நானும் தூய்மை தேவதையும்

கடவுளோடு நான் உரையாடுவதற்கு தனிமையே சிறந்த மொழியாக இருந்திருக்கிறது. எப்போதெல்லாம் எனக்கும் கடவுளுக்கும் ஒரு பேச்சுவார்த்தை தேவையோ அப்போதெல்லாம் கோயிலுக்குச் செல்வதை விட தனிமையாக எங்கேனும் செல்வதே சிறப்பாக இருக்கிறது. அப்படி என் வாழ்விடத்தைச் சுற்றி பல இடங்களை அறிந்து வைத்திருக்கிறேன். அதில் ஒரு இடம், வீட்டருகில் இருக்கும் பூங்கா. வார இறுதி நாட்களிலும், பள்ளி விடுமுறைக் காலங்களிலும் தவிர பெரும்பான்மையான நேரம் என் தனிமைக்கு மாளிகையாக இருப்பது இந்த பூங்கா தான். ஆளில்லாத பிற்பகல் வேளைகளில் அங்கு சென்று சிந்தித்திருப்பேன், ஊஞ்சலில் ஆடிக் கொண்டே என்னை நானே எடை போட்டுக் கொண்டிருப்பேன். உடல் ஊஞ்சலில், மனமோ தராசுத் தட்டில்.


இவ்வாறான ஒரு இளவெயில் மாலை நேரத்தில் என் தனிமை இரயிலை தடம் புரளச்செய்வது போல யாரோ பூங்காவில் நுழைந்தாள் ஒருத்தி. கருத்த உடல், மெலிந்த தேகம், வெளுத்த நகை, தலையில் ஒரு முண்டாசு, பச்சை நிறத்தில் ஒரு மேலாடை, கிழிசலாக ஒரு புடவை இதுவே அவளது தோற்றம். தூய்மைப் பணியாளர் என்பது சில வினாடிகளில் மனம் கணித்து விட்டிருந்தது, இவளால் பெரிதும் இடரேதும் இல்லை, நீ உன் தனிமையை தொடர்ந்து ஆள்வாயாக என்பதாக மனம் மூளைக்கு செய்தி அனுப்பியது.


ஆனால் இடர் ஏற்பட்டது. மனித மனங்களை யார் தான் கணிக்க முடியும்?


"யாரு தனியா ஊஞ்சலாடிக்கிட்டு? வெய்ய உரைக்கலையா?" கேட்டது அவளே தான்.


"..." என்ன சொல்ல என்று என் வாய்க்கு சரியான உத்தரவு வரவில்லை.


சில விநாடிகள் புன்னகை மட்டும் பேசிக் கொண்டிருந்தது. "சும்மா தான் அக்கா. எப்பவும் இங்க இந்நேரம் வேலை ஓயும் போது வந்து உலாவிகிட்டிருப்பேன்"


"சரிதான். அதுக்குன்னு இந்த வெயிலுக்குள்ளயா?"


"எப்ப நேரங் கிடைக்கோ அப்ப!" விளக்கம் கொடுத்தேன். "நீங்கதான் இங்க துப்புரவு பாக்கீங்களா?"


"நான் திங்க, புதன், வெள்ளி மட்டும் பாப்பேன்! இன்னொரு அண்ண, மீதி நாள் பாப்பாக!" சொன்ன படியே மும்முரமாக தன் வேலையை செய்து கொண்டிருந்தார்.


பூங்கா முழுதும் அங்கும் இங்குமாக சிப்ஸ் பாக்கெட்டுகள், ஸ்டைரோபோம் தட்டுகள், கேக் பொட்டலங்கள், சாக்லேட் தாள்கள் என மனித இனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையின் சாதனைகள் இறைந்து கிடந்தன. இந்த நிலைக்கு வர மனித இனம் 200 ஆண்டுகள் உழைத்திருக்கிறது என நினைக்கும் போது புல்லரித்தது.

இது யாருடைய பூங்கா? அரசு பூங்கா. அப்படியென்றால் என்னுடையதும் தான். இதை ஒரு சமூகம் குப்பையாக்குகிறது. ஒரு பணியாளர் தனியாக தூய்மைப்படுத்துகிறார். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுருக்கென்று இருந்தது. ஊஞ்சலில் இருந்து இறங்கினேன். என் பங்குக்கு சில குப்பைகளை சேகரித்தேன். அவரது கையில் இருந்த கூடையில் கொண்டு சேர்த்தேன்.


"நீங்க எதுக்கப்பு செஞ்சிகிட்டிருக்கீக! விடுங்க. நான் தூத்து அள்ளிக்கிடுவேன்" தன் கடமையை காப்பாற்றிக் கொண்டாள் அவள்.


"ஏதோ என்னால முடிஞ்சதுக்கா..." என் கடமையை செய்துவிட்டதாக மனம் கொக்கரித்தது, அடக்க முயற்சித்தேன்.


மாதம் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் பலரும், அந்தக் குப்பைகளின் சொந்தக்காரர்கள். நானும் கூட இருக்கலாம், தெரியாமல். சில ஆயிரம் சம்பளத்துக்காக தினமும் தெருத் தெருவாய் அலைந்து மறுநாள் குப்பை போடுவதற்கு ஏதுவாய் நிற்கும் இந்த ஊரின் தூய்மைக்குச் சொந்தக்காரி அவள்.

வீடு நோக்கி நடந்தேன், அடுத்த குப்பைக் குவியலை நோக்கி நடந்தாள் அவள்.


எங்கள் இருவருக்கும் சமமாய் வெயில் காய்ந்து கொண்டிருந்தது.



7 views0 comments

Comments


bottom of page