top of page
Writer's pictureJohneh Shankar

மொழி மனிதனைக் காக்கிறதா? அல்லது மனிதன் மொழியைக் காப்பாற்றுகிறானா?

ஒரு மொழியானது, தானாகத் தோன்றி விடாது. ஒலி வடிவமாக இருந்து, பின்பு மெல்ல மெல்ல எழுத்து வடிவம் பெற்று, சில பல நூற்றாண்டுகள் சமுதாயத்துடன் சேர்ந்து வளர்ந்து, தனக்கான இலக்கண, இலக்கியங்களைச் சேகரித்து முழுமையாக ஒரு மொழி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள பல மனிதர்களின் சிந்தனையும் செயல்பாடும் கடின உழைப்பும் அடிப்படை வகிக்கின்றன. மனிதர்களல்லாது மொழியில்லை, மொழிக்குச் சிறப்பும் இல்லை.


இது உலகில் பேசப்படும் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும், ஆனால் அதன் செறிவும், விரிவும் அளவில் மாறுபடும். இப்போது எனக்கிருந்த நீண்ட நாள் சந்தேகம் - மொழி மனிதனைக் காக்கிறதா? அல்லது மனிதன் மொழியைக் காப்பாற்றுகிறானா? என்பதே. இதற்கு விடைகாண முயற்சித்துச் சிந்தனையை ஓட விட்டேன்.


விடை - இவ்விரண்டுமே உண்மை என்பதே. இரண்டு உண்மைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, ஒரு காகிதத்தின் இரு பக்கங்களைப் போல - ஒன்றுக்கொன்று சார்புடையவை என்பதும் திண்ணம். எப்படி என்பதை விளக்க முற்படுகிறேன்.


தமிழ் மொழியையே எடுத்துக்கொள்வோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக எழுதப்பட்ட சங்க இலக்கிய நூல்கள், திருக்குறள், தொல்காப்பியம் தொடங்கி, திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ், மூவர் தேவாரம் என, தத்துவமும், மெய்ப்பொருளியலும், ஆன்ம அறிவியலும், வாழ்வியலும் போதிக்கும் பல்வேறு பாடல்கள், இந்தக் கணிணி யுகத்தில் வாழும் நம் விரல்நுனிக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்றால் அது நிச்சயம் மனிதர்களின் உழைப்பினாலன்றி வேறெதனாலும் சாத்தியமில்லை. விரல்நுனிக்கு வந்து விட்ட இவ்வனைத்தும் நம் நா நுனிக்கு வருவதற்கு ஒரு பெரும் சமுதாய முன்னெடுப்பு தேவை, அது வேறு. ஆனால் மனிதர்களே தமிழ் மொழியைக் காத்து வந்திருக்கிறார்கள் என்பது திண்ணம்.


இப்போது, மொழி மனிதரைக் காப்பது எங்ஙனம் என விவரிப்போம். மேற்குறிப்பிட்ட அறநூல்களுள் யாதேனும் ஒன்றை, ஒன்றே ஒன்றை ஒரு மனிதன் தனது வாழ்க்கைக்கான அடிப்படையாக வகுத்துக் கொள்கிறான் என வைத்துக் கொள்வோம். உதாரணமாக, திருக்குறள். என் வாழ்க்கை நெறி, திருக்குறளே என ஒரு மனிதன் வாழ நினைத்துவிட்டான் என்றால், அவனது செயல்கள் செம்மையாகும், சிந்தனை தெளிவாகும், அவனது வினைகள் கழன்று கொள்ளும், மேலும் வினைகள் வந்து சேரா, வாழ்க்கை மேம்படும். இங்கே இப்போது மொழி மனிதனைக் காக்கிறது. பிற மொழிகளுக்கும் இது பொருந்தலாம், அந்தந்த மொழியின்கண் உள்ள சான்றோர் படைப்புகளை நோக்குக.


காலந்தோறும் மொழியைக் காக்கும் கடமை அம்மொழியைப் பேசும் மக்களுக்கு இருக்கிறது. போலவே மனிதரைக் காக்கும் அருஞ்செயலை அம்மொழி செய்யத்தவறுவதே இல்லை, காரணம் - அந்த மொழியின் செழுமையைப் பேணிக் காத்த மனிதர்களின் உழைப்பு. இது ஒரு வட்டம் போல.


ஒரு வாகனத்தை அதனுள் இருக்கும் பொறி (எஞ்சின்) நகர்த்துகிறது. அந்தப் பொறிக்கு அந்த வாகனமே தாங்கு கலனாக இருக்குகிறது. இரண்டுக்கும் இடையில் சீரான இயக்கத்திற்கு பல்வேறு கருவிகள், உபகரணங்கள், உழைப்பு இருக்கிறது. போலவே மனித சமுதாயமெனும் வாகனத்தை மொழியே முன் நகர்த்துகிறது. அச்சமுதாயத்தினரின் வளர்ச்சியோடு அந்த மொழியும் வளர்கிறது. பராமரிப்பு இல்லாது போனால் எஞ்சின் பழுதுபடுவது போல மொழி பழுதுபட்டுப் போகிறது. சமுதாயம் முன்நகராமல் துருப்பிடிக்கத் துவங்கிச் சிதைவுக்குள்ளாகிறது.


மொழியைப் பராமரிப்பது மனிதரின் கடமையாகிறது. மொழியின் வளங்கள் மனிதருக்கு உரிமையாகிறது. மொழியைப் பராமரிக்க மனிதன் உழைத்தால், மனிதனைக் காக்க மொழி இயங்குகிறது.

இதில் உங்கள் (நமது) பங்கு என்ன?

  1. நம் மொழியைப் பேசுவதன் பெருமையை உணர்தல் முதல் படி.

  2. அன்றாட வாழ்வில் நம் மொழியில் இருக்கும் உயர்ந்த நூல்களுள் ஏதேனும் ஒன்றை தினமும் வாசித்தல், எழுதுதல், ஓதுதல். (தினம் ஒரு திருக்குறள் - எடுத்துக்காட்டாக)

  3. நம் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பேசும் போது நம் மொழியிலேயே உரையாடுதல்.

  4. குழந்தைகளுக்கு சோதிடம், எண்கணிதம் போன்ற அடிப்படையில் அல்லாமல் தமிழில் பெயர் சூட்டுதல்.

  5. அவர்களது கல்வி முறையோடு சேர்த்தோ அல்லது தனியாகவோ தமிழ்க்கல்வியை அளித்தல்.

  6. பிழை இல்லாமல் தமிழை எழுதுதல், பேசுதல் - இவற்றைத் தாண்டி நம் மொழியில் வேறு என்ன இருக்கிறது என்ற தேடலுக்கான ஆர்வத்தைத் தூண்டுதல்.


இவற்றைச் செய்வதால் சமுதாயம் நிச்சயம் முன்னேறும் - கண்மூடித்தனமான, சமத்துவமற்ற, அசுரவேக முன்னேற்றமல்ல - நிதானமான, விவேகமான, நிலைத்த முன்னேற்றம். பல்லுயிர்க்கும் வளமளிக்கும் முன்னேற்றம். இது தாய்மொழியினால் மட்டுமே சாத்தியம்.


தமிழ் மொழி போற்றுவோம்! மொழியினால் ஒன்றுபடுவோம், உயர்வோம், உய்வோம்!!!

3 views0 comments

Comments


bottom of page