வைகாசி, 09 - புதன்கிழமை
அன்புள்ள உமை, நீ மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறாய். உடல் வளர்வதல்ல, உன் உயிர் வளர்வதைச் சொல்கிறேன். உன் அறிவு விரியும் வேகத்தை வியக்கிறேன்.
இதனை எழுதும் இந்நாளில் உனக்கு வயது 2 ஆண்டுகள் 3 மாதங்கள். சுமார் 6 மாதங்களுக்கு முன்பாக சிறு சிறு வார்த்தைகளை உன் மணிவாயில் அசைந்து பிறக்கும் பேறு பெற்றன. இப்போது, சொற்களில் இருந்து சொற்றொடர்களுக்கு வளர்ந்திருக்கிறாய். வெறும் அடையாளங்களில் இருந்து விவரங்களைப் புனைவதற்கு முன்னேறியிருக்கிறாய். இரண்டு வயதுக்கு முன்பாகவே, வானத்தில் நட்சத்திரத்தைக் காட்டியபொழுது, நான் எதுவும் சொல்லாமலேயே ஒன்று, இரண்டு... பத்து என எண்ணத் தொடங்கினாய். நட்சத்திரங்களை எண்ண வேண்டும் என்பது உன் சிந்தனையில் உதித்தது எவ்வாறு? மனித இனம், எண்ணிக்கை (counting) செய்யத் துவங்கியது சுமார் 10,000 - 50,000 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான். தற்போதைய மனித இனம (Homo Sapiens) பரிணமித்து, ஏறத்தாழ 1,50,000 ஆண்டுகள் கழித்துத்தான் அடிப்படை எண்ணிக்கை நமது சிந்தனையில் உதித்திருக்கிறது என்பது தொல்லியல் ஆய்வு. நீ மண்ணில் பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே மாதிரியான பொருட்களைக் கண்டவுடன் அவற்றை எண்ண வேண்டும் எனச் சிந்தித்ததன் ஆணிவேர் எவ்வளவு பின்னோக்கி இருக்கிறது கண்டாயா?
எண்ணிக்கை மட்டுமல்ல, கற்பனையிலும், கதை சொல்வதிலும் கூட உன் மழலை அறிவு வீரியமாகவே இருக்கிறது. கதைகள் கேட்பதற்கு முன்பாகவே கதை சொல்லத் துவங்கியிருக்கிறாய். கேள்விகள் கேட்கிறாய்.
இது என்ன? அது என்ன? இது என்ன செய்யும்? என்றெல்லாம் நீ கேட்கும் கேள்விகள் உன் அறிவுப் பசி தூண்டப்பட்டு விட்டதென்று சான்று பகர்கின்றன. உன் அறிவுப் பசிக்கு உணவிடுவது, வயிற்றுப் பசியைத் தணிப்பதை விடவும் முக்கியமாகக் கருதுகிறேன். அறிவுப் பசி, வயிற்றுப் பசியைப் போல தணிவதும் இல்லை, இடைவெளி விட்டுத் தோன்றுவதும் இல்லை. அது பற்றிக் கொண்டால் ஒன்று கொளுந்து விட்டெரியும் அல்லது தனலாகவேனும் கனன்று கொண்டே இருக்கும், உன் ஆர்வத்தைப் பொறுத்து.
உன் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு வாழ்க்கைச் சூழலை உருவாக்குவது தான் எனக்கான பணி. உன் அறிவுப்பசி மங்கி விடாமல் காப்பதே என் கடன். இது அவ்வளவு எளிதானதல்ல. மனிதச் சிந்தனையை ஆக்கிரமிக்கவும், ஆர்வத்தைக் கவர்ந்து செல்லவும், அறிவை வைத்து வியாபாரம் செய்யவும் மனிதக் கூட்டத்தின் பெரும்பான்மையும் இடையறாது பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அவற்றுக்கு எதிரோட்டத்தில் தான் மெய்ப்பொருளும், மெய்யறிவும், நீண்ட பயணத்தின் முடிவில் நிலை கொண்டிருக்கிறது.
So, our journey is backwards, towards what's forward.
ஒரு சிறு நிகழ்வைப் பதிவு செய்து இந்தக் கடிதத்தை நிறைவு செய்கிறேன்.
நேற்று இரவு உறங்கச் செல்லும் முன்பாக, நீ சில சில்லறைக் காசுகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாய். அவை, பல வருடங்களுக்கு முன்பாகவே மதிப்பிழந்து போன 25 காசு நாணயங்கள். அவற்றுள் ஒரு நாணயத்தை நான் கையில் எடுத்து அதன் உற்பத்தி வருடத்தைப் பார்த்தேன், 1990. நான் பிறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த நாணயம் புழக்கத்திற்கு வந்திருக்கிறது. இன்று அதற்கு எந்தப் பயனும் இல்லை, மதிப்பும் இல்லை - வெறும் நினைவாக ஒரு பழைய டப்பாவில் அடைபட்டுக் கிடக்கிறது. ஆனால், உன்னிடம் நான் அதன் பயணத்தைப் பற்றி பேசத்துவங்கினேன். எத்தனை மிட்டாய்களை அந்த நாணயம் பெற்றுக் கொடுத்திருக்கும்? எத்தனை பேருந்துப் பயணங்களில் சில்லறையாகக் கைகொடுத்திருக்கும்? எத்தனை சிறு சிறு மகிழ்ச்சிகளுக்கு இந்த நாணயம் காரணமாக இருந்திருக்கும்? எத்தனை கைகளில் தவழ்ந்திருக்கும்? எத்தனை பைகளில் குடிமாறியிருக்கும்? எத்தனை மனிதர்களை அந்த நாணயம், தனது 34 வருட இருப்பில் சந்தித்திருக்கும்? இவ்வாறு நான் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனேன். நீ, ஒவ்வொரு கேள்வியையும் உற்று கவனித்துக் கொண்டே வந்தாய். ஒரு வளர்ந்த மனிதரிடம், ஆழமான ஒரு உணர்ச்சிப் பிரதிபலிப்பு ஏற்பட்டதைப் போன்று ஒரு உணர்வைத் தந்தாய். பின் அந்த நாணயங்களை எண்ணி டப்பாவில் போடுவதும், கொட்டுவதும் என விளையாட்டைத் தொடர்ந்தாய். இதில் வியப்பதற்கொன்றும் இல்லைதான். ஆனால், பேசுவதைக் கவனித்துக்,காது கொடுத்துக் கேட்பது என்பது பொறுமையின் அடையாளம் - உன் தலைமுறையைச் சேர்ந்த பெரும்பான்மையினரிடம் இல்லாத ஒரு திறன். அது உன்னிடம் இருக்கக் கண்டு மகிழ்கிறேன்.
அறிவு என்பது அற்றம் காக்கும் கருவி என்கிறார் வள்ளுவர்.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
அற்றம் அல்லது அழிவு என்பது, ஒரு தனி மனிதியாக உன்னில் தொடங்கி, ஒரு சமூகமாக இந்த மக்கள் கூட்டத்திற்குமான பெரும் அழிவையும் தடுத்துக் காக்கும் கருவியாக அறிவைச் செயல்படுத்த வேண்டும். உன்னைப் பெற்று வளர்ப்பது என் நலனுக்காகவோ, உன் நலனுக்காகவோ அல்ல, இந்தச் சமூகத்தின் நலனுக்காக என்பதை உன் நினைவில் நிறுத்த விரும்புகிறேன்.
மீண்டும் அடுத்த கடிதத்தில்,
அன்பு முத்தங்களுடன்,
அப்பா.
Comentarios