அன்புள்ள உமையாள்,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உனக்கு நான் ஆவலுடன் எழுதும் கடிதம். 3 வயது நிறைவடைந்து 4-வது வயதை வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறாய். உனக்கான கல்வி, பள்ளிக்கூடம் குறித்த திட்டமிடல் இப்போது தொடங்குகிறது. நற்பேறாக இது மிகவும் பெரிய தலைவலியாக எனக்கும், உன் அம்மாவுக்கும் இல்லை. நான், தனியார் பள்ளியில் சொகுசாகப் படித்தேன். உன் அம்மாவோ அரசுப்பள்ளியில் பாடுபட்டுப் படித்து முன்னேறினாள். எனவே இரண்டுக்கும் இடையேயான சாதக பாதகங்கள் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி. சரி அது குறித்து பின்பு வேறொரு கடிதத்தில் பேசுவோம். இப்போது படிப்பு குறித்து சிலவற்றை உன்னுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கடிதம்.
கற்றல்
என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த உருப்படியான சில செயல்களுள் ஒன்று, வாசித்தல். மிகவும் இளமையிலேயே, 4-5 வயது இருக்கும் போதே செய்தித்தாள் தொடங்கி, சிறுவர் இதழ் வரை வாசித்தல் எனக்குப் பரிச்சயமாகிவிட்டது. பள்ளிக்கூட படிப்பின் அருமையை உணராமல் நான் கவனம் சிதறியமைக்கும் இதுவே காரணமாகிவிட்டது, அது வேறு விசயம். வாசிப்பே எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்தது. நல்லது சிலவும், அல்லது பலவும். வெறும் வாசிப்பு, அனுபவமின்மை - இது என்னை ஒரு அரைவேக்காடாகவே வைத்திருந்தது என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டும். கல்வி அல்லது படிப்பின் அருமையும், பொருண்மையும் நீ பிறந்த பிறகு தான் எனக்குப் புரியத்தொடங்கியது. பள்ளிக்காலத்தில் படிப்பு ஒரு சுமையாகத் தெரிந்தது. கல்லூரி, அங்கிருந்த கண்டிப்பினால் கசந்தது. பாதியில் விட்ட படிப்பினால் உன் தாத்தாவுக்கு நான் ஏற்படுத்திய நட்டமும் வேதனையும் வெறும் பண இழப்பு மட்டுமல்ல என்பது இப்போது தான் உரைக்கத்தொடங்குகிறது எனக்கு. சுதந்திரமான, கட்டற்ற சுகம் நிறைந்த வாழ்க்கை என் கற்பனையாக இருந்தது. எனவே அது சாத்தியமாககூடிய ஒரு மூன்றாம் தர கல்லூரியைத் தேர்ந்தெடுத்து அங்கே என் பட்டயப்படிப்பை மீண்டும் தொடர்ந்தேன் இந்தப் பருவத்தில், படிப்புக்கே நான் ஒரு சுமையாக இருந்திருக்க வேண்டும். கடமைக்குப் படித்தேன், கட் அடித்தேன், ஆனாலும் தேர்ச்சி பெற்றேன் - துளியும் ஈடுபாடோ ஆர்வமோ இல்லாமல் தான் அதைக் கடந்து வந்தேன். இது முற்றிலும் என் தவறு மட்டுமே இல்லை. உன் தாத்தாவுக்குப் பரிச்சயமானது பொறியியல் துறை, கஷ்டம் தெரியாமல் என்னை வளர்த்ததால், எனக்குப் பிடித்திருந்ததோ கலைத்துறை. இரண்டுக்கும் நடுவே இருந்த ஒரு முரண்வெளியில் என் படிப்பு என்பது புயல்காற்றில் சிக்கிய காகிதமாக அலைக்கழிந்து, ஓய்ந்து தரை இறங்கிய போது, என் அப்பா சேர்த்து விட்ட ஒரு பணிக்கு அரை மனதாய் சென்று கொண்டிருந்தேன். இன்னும் சில ஆண்டுகள் தான் 'அப்பா' என்று கூப்பிடும் தூரத்தில் உன் தாத்தா இருப்பார் என்பது புரியாமல், என் கற்பனைத் தடம் தொடர்ந்தது. அலுவலகம் சென்ற ஆரம்ப நாட்களில், அப்பாடா, இனி வாழ்க்கையில் படிப்பைப் பற்றிக் கவலைப்படத்தேவையில்லை என்று நிம்மதியடைந்திருந்தேன்; அதற்குப் பிறகுதான் வாழ்க்கை எனுப் பெரிய படிப்பு துவங்குகிறது என்ற வாய்ப்பையும், கடமையையும் உணராதவனாய்.
வாழ்க்கையே கல்வி, கல்வியே வாழ்க்கை
ஆமாம். வாழ்க்கை என்பது, ஒரு உயிர் கற்றுக்கொண்டு வளர்வதற்கான ஆகப்பெரிய வாய்ப்பு. இந்த உலகமே ஒரு பள்ளிக்கூடம் தான். அதில் ஏட்டுக்கல்வி, பள்ளி, கல்லூரிக் கல்வி இதெல்லாம் ஒரு மனித உயிருக்கான அதிமுக்கியமான கடமை. இது புரிய எனக்கு 32 வயது ஆகிவிட்டது.
ஆனால் உனக்கு அப்படியல்ல - 3 வயதிலேயே படிப்பின் அருமை புரியாவிட்டாலும், படிக்க வேண்டும் என்ற ஆசையை உனக்குள் விதைக்க என்னாலான அத்தனை முயற்சிகளையும் நான் செய்கிறேன்.
வீட்டில் நூலகம் அமைத்தேன். உன் கண்கள் படும் இடமெல்லாம் பொம்மைகளை விட அதிகமாகப் புத்தகங்களால் நிறைக்கிறேன். உணவு அருந்தும் நேரத்தில் வாசிப்பது எனக்குக் குழந்தைக் காலத்துப் பழக்கமாகிவிட்டது. அதன் தாக்கம் உன்னிலும் இருக்கிறது. சின்ன குழித்தட்டில் ஒரு இட்லியைப் பிட்டு, சட்டினியில் குழைத்து வாயில் போடும் போது இப்போதெல்லாம் நீயும் ஏதோ ஒரு புத்தகத்தைத் தூக்கி வந்து பக்கத்தில் வைத்துக் கொள்கிறாய். படிப்பது போல நடிக்கிறாய் என்கிறாள் உன் அம்மா. ஆனால் யாரைவிடவும் நீதான் உண்மையாகப் படிக்கிறாய் என்கிறேன் நான்.
எனவே படிப்பை ஒரு சுமையாகவோ, முள்ளாகவோ நீ பார்க்கக்கூடிய வாய்ப்பு கணிசமாகக் குறைந்துவிட்டது என்று நம்புகிறேன். சரி, இப்போது படிப்பு என்றால் என்ன? அது எதற்கு, எப்படி? போன்ற சில கேள்விகளுக்கு, என் சிற்றறிவுக்கு எட்டிய சில விடைகளை இங்கே வரைகிறேன்.
குழந்தைப்பருவம் முழுவதும், அதற்குப் பின் நீளும் மாணவப்பருவத்திலும், உன்னை வளர்ப்பது பெற்றோராகிய நாங்கள் மட்டும் அல்ல. உன்னைச் சுற்றி இயங்கும் இந்த சமூகமும் தான். இதை நன்றாக நினைவில் நிறுத்திக் கொள்.
உன் வாழ்க்கையில் உனக்குக் கிடைக்கும் இன்பமும், சுகமான இந்த மாணவப்பருவமும், ஓரிருவரால் மட்டுமோ, அல்லது பணத்தாலோ, பொருளாலோ மட்டுமோ சாத்தியப்படுவதல்ல. அது பல மனிதர்களின் பிழைப்பு, உழைப்பு, தியாகம், வலி, ஆர்வம், அன்பு, என்ற பலவற்றால் சாத்தியப்படுவதாகும். எனவே மனிதர்களை நீ நேசிக்கவும், மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். நம் வீட்டில் குப்பைகளைச் சேகரிக்கும் தூய்மைப் பணி செய்யும் அத்தைகள் தொடங்கி, தபால் தாத்தா, பொருட்களைச் சேர்க்கும் மாமா, மின்சாரக்கணக்கு எழுத வரும் அத்தை, தண்ணிர்த் தொட்டி திறப்பவர், பூக்கள் கொண்டு வரும் அத்தை என தினமும் நீ சந்திக்கும் அத்தனை மனிதர்களுமே உன்னை வளர்க்கிறார்கள். உன் நலன் அவர்கள் நலத்தைச் சார்ந்திருக்கிறது. எனவே ,
‘படிப்பு என்பது உன்னை வளர்க்கும் இந்தச் சமூகத்தை, நீ நாளை பேணி வளர்க்க உனக்கு ஆற்றல் வழங்கும் ஒரு கருவி’
இது ஒருவர் வாழ்க்கையில் ஒரு முறை நடக்க வேண்டிய சம்பிரதாயம் அல்ல, ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறையோடு இணைக்கும் பாலம், தொடர்ந்து மேலெழும்பிக்கொண்டேயிருக்க வேண்டிய தூண்களால் ஆன பாலம்.
என்னுடைய மற்றும் எனக்கு முந்தைய ஓரிரு தலைமுறைகளில் ஏற்பட்ட புரிதல் பிழை என்னவென்றால் படிப்பு என்பது பணம், பொருள் சேர்த்து வாழ்க்கையில் ஒரு ஓரமாகக் கரை ஒதுங்கிச் சுகமாக வாழத் தேவையான ஒரு தோணி என்பது. நம் நாட்டின் அரசியல், சமய, சமூகத்தத்துவ சூழல் இரண்டு நூற்றாண்டுகளாக இவ்வாறான ஒரு இருள் படர்ந்த எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இதோ, உன் வாழ்க்கையில், உனது தலைமுறையில் அதற்கான ஒளி பிறந்து விட்டது. கல்வி பற்றிய தெளிவான புரிதல் சமூகத்தில் பரவலாக வளர்ந்து கொண்டிருக்கிறது. நன்றாகப் படித்தால் நல்ல சம்பளம், படிக்காவிட்டால் குறைந்த சம்பளம் என்று பணத்தை வைத்து மட்டுமே படிப்புக்கு எழுதப்பட்ட நேர்க்கணக்கு ஆட்டம் காணத்தொடங்கியிருக்கிறது.
Age of Information என்று இந்தக் கணிணி யுகத்தை சகத்தோர் அழைக்கிறார்கள். ஆனால் இது உண்மையில் Age of Education ஆகும். கல்வி அசுரவேகம் எடுக்கத் துவங்கியுள்ள காலத்தில் நீ பிறந்திருக்கிறாய். இதில் தீமைகளும் இல்லாமல் இல்லை.
கைக்குள் அடங்கி விட்ட தொழில்நுட்பமும், மனிதக்கூட்டத்தின் மூளைகளில் அது தொடர்ந்து கொண்டு சேர்க்கும் கல்வியும், முன்பு சொன்னது போலவே, நல்லது சிலவும், அல்லது பலவுமாகவே இருக்கிறது. இது இந்த உலகின் இயல்பு.
நன்மை என்பது, தானும் கெடாமல், தன்னைச் சேர்ந்ததையும் கெட்டு விடாமல் காக்கும் நிலையான தேன் துளியை, நிலையற்ற பல ஆயிரம் வாடி உதிரும் மலர்களில் இருந்து அதனைச் சேகரித்துப் புசிப்பது போல, பெரும் உழைப்பின் பயனாகும். அது மலிவாகக் கிடைக்கும் அளவுக்கு இந்த உலகம் இன்னும் முதிரவில்லை.
தொழில்நுட்பம் தொடர்ந்து வீரியமடைந்து கொண்டே வருகிறது. எனவே இது பொன்னான வாய்ப்பு மட்டுமல்லாது, உன் தலைமுறையின் கவனத்திற்கான கடுமையான அறைகூவலும் கூட என்பதை நீ புரிந்து கொள்ளவேண்டும். எதை உள்வாங்குகிறாய், எதை வெளிப்படுத்துகிறாய் என்பதைக் கவனமாகக் கையாள வேண்டும்.
கொட்டிக்கிடக்கும் அல்லனவற்றில் இருந்து நல்லனவற்றைத் தரம் பிரித்துச் சேகரித்துக் கொள்ளும் திறன் உனக்கு அவசியம். அதை உன்னிடத்தில் விதைத்து வளர்த்துத் தருவது என்னுடைய கடமை. அதன் பயனை அறுவடை செய்து, நீ வளரும் சமூகத்திற்குப் பகிர்ந்தளித்தல் உன்னுடைய கடமை.
இன்னும் ஓரிரு மாதங்களில் பள்ளி செல்ல இருக்கும் உனக்கு நான் சொல்லத்துடிக்கும் அனைத்தையும் இந்தக் கடிதத்தில் கொட்டியிருக்கிறேன். நன்றாகப் படி, உன் நலத்திற்காக அல்ல, உன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்காக, அதில் உழைக்கும் மனிதர்களின் நலத்திற்காக, உன் கூட்டத்தின் வளர்ச்சிக்காக, நன்றாகப் படி என்று உன் பிஞ்சுப்பொற்பாதங்களை முத்தமிட்டு இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்தடுத்த கடிதங்களில் உன் பள்ளி வாழ்க்கையைப் பற்றியும், உன் கல்வி வளர்ச்சியைப் பற்றியும் தொடர்ந்து எழுதுகிறேன்.
பல தலைமுறைகளாய் மனிதக்கூட்டம் செய்த தவறுகளைத் தனிமனிதன் மாற்றிவிட முடியாது. ஆனால், அடுத்த சில தலைமுறைகளைச் சரியாக நெறிப்படுத்துவதன் மூலம் பயணத்தின் திசையை மாற்றலாம். அப்படி வழிதிரும்பும் தலைமுறைக்கப்பல்களின் முதல் கப்பலில் ஒருத்தியாக நீயும், உனக்கான திசைகாட்டியாக உன் படிப்பும், கலங்கரை விளக்கமாக நம் முன்னோர் வகுத்த அறமும் இருக்கும் என்ற கருத்துடன் இந்தக் கடிதத்தை நிறைவு செய்கிறேன்.
அன்பு முத்தங்களுடன்,
அப்பா.

நா. முத்துக்குமார் அவர்கள் தன்னுடைய மகனுக்கு கடிதம் எழுதினார். நீங்கள் தங்களுடைய மகளுக்கு கடிதம் எழுதுகிறீர்கள். சிறப்பு உங்களுக்கு என்னுடய வாழ்த்துக்கள். இப்படிக்கு உங்கள் தோழன் ஸ்ரீ அஹிலேஷ்