உன் பாதங்கள் தரையில் பதிந்து என் இதயத்தில் தடம் பதிக்கும் இதமான நாட்களின் ஊடாக இப்போது நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தூளியிலும், உன் அம்மாவின் மடியிலும் மட்டுமே உறங்குவதும், இயங்குவதுமாக இருந்த நீ இப்போது வானிலிருந்து பூமிக்கு இறங்கிய தெய்வமாக, உன் மென்மலர்ப் பாதங்களை ஊன்றி எழுந்து நிற்கிறாய்.
உன் சிற்றடிகளே, நான் வணங்கும் முருகனின் சிற்றடிகளாக பாவிக்கிறேன் நான். திருப்புகழ் தந்த வேற்குழவி அல்லவா நீ?
நீ இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே எழுந்து நின்றிருக்க வேண்டும் என மெத்தப் படித்த சிலர் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு இந்த வேகமே திக்கு முக்காடச் செய்கிறது. எவ்வளவு சீக்கிரம் வளர்ந்து விட்டாய் நீ? இப்போதெல்லாம் என் தோளின் மீது அமர்ந்து விளையாட நீ விரும்புவதில்லை. என் விளையாட்டுகளை இரசிப்பதில்லை. உன் நெற்றியில் முத்தமிட வரும்போது, விரலை ஆட்டிப் பல்லைக் கடித்து மிரட்டுகிறாய்.
வருத்தம் தான், ஆனால் நீ மனதை மகிழ்விக்கத் தவறவில்லை. மாறிவிட்டாய், அவ்வளவே.
வேலை செய்யும் போது, ஒரு நாளுக்கு நூறு முறை என்னை நோக்கித் தவழ்ந்து வருகிறாய், என் இருக்கையைப் பற்றி, எழுந்து நின்று 'என்னை தூக்கு' என்பதாகக் கொஞ்சுகிறாய். இப்போதெல்லாம், நான் ஊட்டும் உணவை மட்டுமே உண்கிறாய். ஒரு 10 நிமிடம் நான் வாசலுக்குச் சென்று விட்டு திரும்பினாலும், ஏதோ பல வருடங்கள் என்னைப் பிரிந்து இப்போது சந்திப்பது போல, மகிழ்ச்சியில் குதிக்கிறாய். நான் உன் வயதில் செய்த சில பழக்கங்களை இப்போது நீ செய்கிறாய் என உன் ஆச்சி சொல்கிறாள். இதை விட மகிழ்ச்சி வேறு இருக்க முடியுமா?
ஆனால், இவையும் கடந்து போகும் என நினைக்கவும் வலிக்கிறது. நீ இன்னும் வேகமாக மாறி விடுவாய். நான் இவையாவும் மீண்டும் வராதா என்று ஏங்குவேன்.
வளர்ச்சி என்பது இது தான். நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், தெரிந்தும் தெரியாமலும், உன் வளர்ச்சியின் வேகமான மாற்றங்கள் எங்கள் இதயத்தை அவ்வப் போது உடைக்கவே செய்யும். ஆனால், உடையும் போதே, உடைத்ததைச் சேர்க்க ஒரு வாய்ப்பும் உனக்குக் கிடைக்கும். உன் நல்வாழ்க்கையும், சின்னச் சின்ன சந்தோசங்களும், முன்னேற்றமும், அந்த மாயத்தைச் செய்யும். காயங்களை ஆற்றும். நாளடைவில் இது இரசிக்கக்கூடிய ஒரு சுழற்சியாக மாறிவிடும்.
உன்னிடம் நான் சொல்ல விரும்புவது,
உன் வளர்ச்சியின் ஒவ்வொரு நொடியிலும் நானும் உன் அம்மாவும் மகிழ்ந்து திளைக்கிறோம். நீ வளரும் போது, எப்போதோ எனக்குள் வளராமல் நின்று போன என் உயிரின் ஒரு பகுதியும் வளர்வதை உணர்கிறேன். உன் பிஞ்சுக் கால்களை ஊன்றி நீ எழுந்து நிற்கும் போது, எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒரு 'நான்' ,எழுந்து உன் பொன் விரல் பிடித்து எதிர்காலம் நோக்கி நடப்பதை வியக்கிறேன். அந்த எதிர்காலத்தில், இது நித்தமும் தொடரும் என்றே ஆழ விழைகிறேன்.
நிலையில்லாத உலகில், யாரும் நிரந்தரமாக இருக்க முடிவதில்லை, ஆனாலும் கற்பனைகளிலாவது காலத்தின் கட்டுப்பாடுகளை உடைத்து நிலைத்திருக்க ஏங்குவது மனித இயல்பு. ஆனால், இந்த இயல்பு தான் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. உனக்கு மிகவும் பிடித்த ஒரு நொடியை, பொழுதை, காலத்தை நீ கடந்தால் தான், ஆச்சரியங்கள் நிறைந்த மற்றொரு கணம் உனக்குக் கிடைக்கும். அது உன்னை மகிழ்விப்பதும், வருத்துவதும் உன் கையில் தான் இருக்கிறது.
கடந்த காலம் நிகழ் காலத்தைப் பாதிக்கும் அதே அளவுக்கு, எதிர்காலமும் நிகழ்காலத்தை மாற்றும் என்பதை சமீப காலமாக வாழ்க்கையின் போக்கில் உணர்கிறேன். காலம், நேர் கோட்டில் பயணிப்பதில்லை, அதில் நமது எண்ணங்கள் செயல்கள் யாவும் சுழன்று முன்னும் பின்னுமாய் நிகழ்காலத்தில் நாம் அனுபவிக்கும் பொழுதுகளை எதிர்காலத்தில் இருந்தும் செதுக்கும். இப்போது உன்னோடு நான் 24 மணி நேரமும், பொழுதைக் கழிக்கும் இந்த வாழ்க்கை, 7 வருடங்களுக்கு முன்பு நான் வேலையை உதறி விட்டு தனியாக தொழிற்பட முடிவெடுத்ததற்குக் காரணம் என்பது எனது தீர்க்கமான நம்பிக்கை. அதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன, அவற்றைப் போகப் போகச் சொல்கிறேன். நீ மனதில் பதிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை, எதிர்காலமும், கடந்த காலமும், நிகழ்காலமும் ஒன்றோடொன்று ஆழமாகத் தொடர்புடையவை; உன் வாழ்வின் ஒவ்வொரு முடிவும், செயலும், நிகழ்வும் காலத்தில் நீ பயணிக்கும் விதத்தை மாற்றக் கூடியன.
அடுத்த கடிதத்தில் மீண்டும் சந்திப்போம், வளரும் மகளே, என்னை வளர்க்கும் மகளே!
அன்புடன்,
அப்பா.
Comments