உனக்காக நான் எழுதவிருக்கும் பல தமிழ் கடிதங்களில் இது முதல். உன் அறிவின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை ஆங்கிலத்திலும், உனக்கான என் அன்பை வெளிப்படுத்த மற்றும் உன் வாழ்விற்கான அறத்தை அமுதூட்ட, தமிழிலும் எழுதுகிறேன்.
ஆங்கிலத்தில் அன்பு வராதா? தமிழில் அறிவு வராதா? என்று கேட்க உனக்கு முழு சுதந்திரம் உண்டு.
கேள்விகளே ஞானத்தின் திறவுகோல். ஆர்வமே அறிவின் தோற்றுவாய். நீ வாய் திறந்து வார்த்தை பேசும் நாட்களை விட, கேள்விகள் கேட்கத் தொடங்கும் நாட்களையே பெரிதும் எதிர்பார்த்திருக்கிறேன்.
நிலைத்த உண்மைப் பொருளைப் பற்றிப் பேசும் தகுதி வாய்ந்த ஒரு மொழி உனக்கும் எனக்கும் தாய்மொழியாக கிடைக்கப் பெற்றிருக்கிறது. பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் தாய்மொழி தவிர்த்த பிற மொழிகள், நிலையில்லாத உலகப் பொருட்களைப் பற்றி தம் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே, மனித வாழ்விற்கு தேவை. அன்பும், அறமும் உயிரை நிலைத்திருக்கச் செய்வன. பொருளும், போகங்களும் உடலுக்குச் சில காலம் துணை செய்ய வந்தன.
அறிவு புறத்தில் விளங்குவது, அன்பும், அறமும் அகத்தில் விளைவது. எனவே ஆங்கிலம் அறிவுக்கு, தமிழ் அன்புக்கும், அறத்திற்கும்.
இன்னுமொரு உதாரணம் சொல்கிறேன். நீ உருப்பெறும் முன்பாக, கருவறையில் இருக்கும் போது, உன்னைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் உன் அம்மாவிற்கோ, நீ உதைப்பது முதல், உனக்குப் பசி எடுப்பது வரை அத்தனையும் உணர்த்தப்பட்டதை வியந்திருக்கிறேன். அது தான் தாய்மை, அது போன்றது தான் தமிழ் அல்லது தாய்மொழி. நீ வெளியே ஒரு பருப்பொருளாக, கண்ணுக்குப் புலப்படும் உடலாக வெளிவந்த பிறகு தான் உன் அசைவுகள், உணர்ச்சிகள், இவற்றுக்கான அர்த்தங்களை நான் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். இதுவே புற அறிவு, ஆங்கிலம் அல்லது பிற மொழி போன்றது.
இதனை நான் எழுதும் போது, உனக்கு மிகச்சரியாக ஒரு வயது. 10 வயதுக்கு முன்பாகவே நீ இந்தக் கடிதங்களைப் படிக்கவும், புரிந்து கொள்ளவும் உனக்கான அறிவுத் தெளிவைக் கொடுக்க வேண்டியது என் முதல் கடமை எனக் கருதுகிறேன்.
உனக்குத் தெரியுமா? நீ பிறக்கும் முன்பாகவே உன் பெயரை மனதில் தீர்மானித்து வைத்திருந்தோம், நானும் உன் அம்மாவும். உமையாள் எனும் பெயர், உனக்கு நீ கருப்புகும் முன்னரே நிச்சயிக்கப்பட்டது. அம்மையப்பரின் திருவருளாலும், திருவேரகத்துக் குமரனின் பெருங்கருணையினாலும் எங்களுக்குக் கிடைத்த வரம் நீ. எனக்கு 30 வயதில் படிக்கத் தோன்றிய திருப்புகழும்,தேவாரமும், நீ கருவில் நிலைத்த நாள் முதலாய் கேட்டுக்கொண்டிருக்கிறாய். ஒரு வயதாகும் உன் மழலைச் சொல் மாலையில் முதலில் மலர்ந்தது 'முருகா' (ம்ருகா) எனும் சொல்லே என்பதை என்னவென்று சொல்ல? தமிழுக்குத் தலைவனாம் கந்தனின் கருணையால் விளைந்த வித்து நீ என்பதாலும் தமிழை உனக்குப் பிழையில்லாமல் கற்பிக்க வேண்டியது என் இரண்டாவது தலையாய கடமை.
உனக்கான இந்தக் கடிதங்களில், நீ வந்த அற்புதத்தை அவ்வப்போது விவரிக்கிறேன். அதற்கு முன்பாக, உன் வாழ்க்கை குறித்து எனது கனவுகளை உன்னோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் என்னவெல்லாம் ஆக ஆசைப்பட்டேனோ, அதெல்லாம் நீ ஆக வேண்டும் என்று உன்னிடம் என் விருப்பங்களைத் திணிக்கப் போவதில்லை நான். ஆனால் நான் என்னவெல்லாம் அறிந்து கொள்ள நினைத்தேனோ, கற்றுக் கொள்ளத் தவறினேனோ, உணர மறுத்தேனோ, அவையெல்லாம் உனக்கு கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்குமாறு ஒரு வாழ்க்கைத் தளத்தை ஏற்படுத்துவது என் பொறுப்பு.
இந்த உலகம், போலிகளாலும், புனைவுகளாலும், வெற்று வார்த்தைகளாலும் நிரம்பியிருக்கிறது. அவற்றுள் ஆங்காங்கே உண்மை ஆரவாரமில்லாமல், அமைதியாய் புதைந்து கிடைக்கிறது.
சந்தையில் மின்னும் நொறுக்குத் தீனிகள் போன்றவை பொய்கள், உன்னை எளிதாகக் கவர்ந்து விடும். உன்னை மயக்கும்,உன் நேரத்தையும், ஆரோக்கியத்தையும் களவாடிச் சென்று விடும்.
உனக்கான நல்ல உணவு போன்றவை உண்மைகள்; ஆரம்பத்தில் பிடிக்காது, அதற்கான தேவை உனக்குள்ளாகவே பசியாக எழும் போது அது உன்னைத் தேடி வந்து, உன் சின்னஞ்சிறு வயிற்றை கதகதப்பாக்கி ஊட்டமளிப்பது போல, உன் உயிருக்குத் துணை செய்யும். நீ செய்ய வேண்டியதெல்லாம், விழித்திரு, பசித்திரு, இயங்கிக்கொண்டே இரு.
ஒரு மனிதனாக, என்னை ஈன்று பேணி வளர்த்தவள் முதல் தாய். இல்லறத் துணைவி, இரண்டாம் தாய். எனக்கு மூன்றாவது தாய் நீ.
உன்னைத் தொட்டிலில் ஆட்டும் நேரங்களில் எல்லாம் வாழ்க்கையின் பெரும் தத்துவங்களை பேசாமலேயே கற்றுக் கொடுக்கிறாய் நீ. எனவே நீ ஒரு ஆசிரியையாக வருவாய் என்று நினைத்துக் கொள்வேன். விரலை ஆட்டி அதிகாரம் செய்து, பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்தை வெளிப்படுத்தும் போது, ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக வருவாயோ என மகிழ்கிறேன். என் தோளில் அமர்ந்து கொண்டு நீ காட்டும் அதிகாரத் தோரணையைக் கண்டு, நீ ஒரு மாசற்ற அரசியல் தலைவியாக வருவாயோ என்றும் கற்பனை செய்கிறேன். நீ வளரும் போது, உனக்கான குறிக்கோளும் உயரும்.
எப்படியோ, உனக்கான ஒரு நல்ல சமூகத்தைப் பரிசாக கொடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால், சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதியாக உன்னைக் கொடுப்பதில் என்னால் இயன்ற அனைத்தையும் தவறாமல் செய்யக் காத்திருக்கிறேன் நான். நீ உலகை மகிழ்வித்து மகிழ வந்தவள் என்பதை நான் உணர்ந்த தருணங்கள், இந்த ஒரு வருட காலத்திற்குள்ளாகவே அனேகம் உண்டு.
அவற்றை அடுத்தடுத்த கடிதங்களில் பகிர்ந்து கொள்கிறேன்.
வா மகளே, சேர்ந்தே வளர்வோம்.
என்றும் அன்புடன்,
அப்பா.
Comments