வங்கிகள் பற்றிய புதுக்கவிதை - சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர்,எழுதிய கவிதை - அப்போதெல்லாம் இலுமினாட்டி, உலக சதிக்கோட்பாடுகளில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தேன். இப்போது அதன் மீதுள்ள ஈடுபாடும் நம்பிக்கையும் தொய்வடைந்திருந்தாலும், தீதும் நன்றும் பிறன் தர வாரா எனும் கோட்பாட்டில் கிடைத்த தெளிவினால் பார்வை பக்குவம் அடைந்திருக்கிறது. எனினும், கவிதை இன்னமும் relevant ஆகவே இருக்கிறது... படிக்கவும்!
இன்று,
ATM என்றார்,
PayTM என்றார்,
இணையத்திலேயே உன் பணமெல்லாம் இருக்கட்டும் என்றார்!
அன்று,
வங்கி என்றார்,
locker என்றார்,
இரும்புப் பெட்டிக்குள்ளே உன் உழைப்பெல்லாம் பத்திரம் என்றார்!
என்றும்,
பணத்தைப் பத்திரப்படுத்தவே
பணம் சம்பாதிக்க வேண்டிய நிலையில்,
மாயச்சுழலொன்றை உருவாக்கிவைத்தார்!
என் உழைப்புக்கும் வியர்வைக்கும் விலை ஒன்றை வைத்தார்,
அதைப் பணமென்றும் காசென்றும் என் தலையில் அரைத்தார்!
விலை வைத்தே
என்னை Human Resource என்றார்,
என் மண்ணை Natural Resource என்றார்!
பட்டிக்காடென்றார்... படிடா என்றார்...
கடன்கள் கொடுத்தார்... கல்வியென திணித்தார்..
படித்தேன் முடித்தேன், வட்டிக்காடும் குரங்காய் ஆனேன்!
கிரெடிட் காடென்றார், டெபிட் காடென்றார்...
கான்கிரீட் காடெங்கும் கிளைகள் திறந்தார்!
வயற்காடென்றார், வளைத்துப் போடென்றார்,
விளைநிலமெல்லாம் விலை நிலமாக்கினார்!
விதவைப் பெண் விலை மாதாய் ஆனதொரு கதையாய்,
விவசாயத்தை இழந்த நாம் விலை பொருளாய் ஆனோம்!
நீ சுகித்திருக்கும் பொருட்களுக்கு,
பணமல்ல பொருளல்ல,
உன் வாழ்வாதாரமே விலை என்பார்,
ஆனால் பொருளாதாரம் என்றே வஞ்சகமாய் திரித்துரைப்பார்!
உழைப்பென்றால் உழைப்பில்லை
உட்கார்ந்தே உயிர் விடுவதென்பார்!
வேலைவாய்ப்பென்பார், வளர்ச்சித் திட்டமென்பார்!
வளர்வதெல்லாம் கட்டிடங்கள்,
உன் சொர்க்கத்தைப் பார் என்பார்!
உன் உழைப்பிற்கும்
உழைப்பின் பயனுக்கும்
நடுவே காகிதத்தால்
குழி பறிப்பார்!
அக்குழியைத் தாண்டிடவே
காசேதான் கப்பல் என்பார்!
அக்காகிதத்தைப் பேணுவதே
உன் பிறவிப் பயனென்பார்!
வட்டியென்பார் கிஸ்தியென்பார்,
உன் உழைப்புக்கு காலம் கொடுக்கும் கூலி என்பார்!
மயங்கி நீ நிற்கும் போது
இந்தா உன் passbook என்பார்!
வங்கியெனும் வஞ்சக நரி,
வட்டியென்னும் வாய் திறந்தால்,
அதில் பணமென்னும் பல் இருக்கும்,
உன்னை மென்று தின்ன
காத்திருக்கும்!
இன்று
ATM என்பார்,
PayTM என்பார்,
இணையத்திலேயே உன் பணமெல்லாம் இருக்கட்டும் என்பார்!
நாளை,
Air swipe என்பார்,
Cloud Bank என்பார்,
உன் பணத்தாலே அங்கே
ஆயுதங்கள் செய்வார்!
உன் உழைப்பாலே இங்கே
உன் பூமியைக் கொல்வார்!
நன்றி வணக்கம்!
~ழ~
(பின்குறிப்புக் கவிதை:
அவரென்றால் யாரென்று
ஆழ்மனதில் குரல் ஒலிக்கும்,
அவர் என்றால் அவர் அல்ல,
அவர்கள் பலரென்னும் பதில் கிடைக்கும்!
Secret society என்றால் சிரித்திடுவாய்,
Illuminati என்றால் இல்லை என்பாய்!
கடவுளையும் நம்பிடுவாய், நம்பாமல் மறுத்திடுவாய்,
ஆனால் ஆறறிவின் வஞ்சகத்தை, கட்டுக்கதை என தவிர்த்திடுவாய்.
நீ நம்புவதற்காய் அவர்கள் காத்திருக்கவில்லை,
அவர்கள் வங்கி நோட்டுக்கு நீயும் நானும் தான் காத்திருப்போம்!
சரி என்னதான் தீர்வென்பாய்,
வெறுத்துப்போய் வெடித்திடுவாய்!
உன்னை அறிதலும், உழைப்பைச் சார்தலுமே தீர்வென்பேன்,
இயற்கை வாழ்வியலும், அன்பும், அறமும், எளிமையும் தான் வழி என்பேன்!
பெயரில்லா இறையும், packing இல்லாத இரையும் தான் நம் மரபு என்பேன்!
கேட்பாயா நீயும் என்றால் பகுத்தறியக் கிளம்பிடுவாய்.
பகுத்தறிந்து தெளிந்திடுவாய்,
என நானும் நம்பி நின்றால்,
நிலையில்லாப் பொருளை எல்லாம்
நிலைத்திடவே ஏங்கிடுவாய்!
உண்மை கேள் தோழா,
வணங்குதலும் போற்றுதலும்
எதை நோக்கி இருக்கிறதோ
அதுவாகவே நீ மாறிடுவாய்!
அதனோடே கலந்திடுவாய்!
கடவுள் இல்லைதான் என்றால்,
இல்லாததை வணங்குவதே
இல்லாமல் போகத்தான்!
பிறவி இல்லாமல் போகத்தான்!
கடவுள் உண்டுதான் என்றால்,
வியாபகமாய் அவன் உண்டு,
அவன் வியாபகத்தில் நாம் உண்டு!
இது அறிவியலுக்கெல்லாம் அறிவியல்,
ஆற்றலுக்கெல்லாம் ஆற்றல்.
எனவே,
இயற்கைதான் அன்னையென்பேன்,
உழைப்புதான் தந்தை என்பேன்!
கடவுள்... இருக்கட்டும்,
பார்க்கலாம் என்பேன்!
எல்லாமே உண்டு உன் ஆசைக்கு,
ஏழைக்கு எதுவுமே இல்லை,
நன்றி உன் பேராசைக்கு!)
Comments