top of page
Writer's pictureJohneh Shankar

காலை உணவுத் திட்டம்

சமீபத்தில் இரண்டாண்டு ஆட்சி சாதனைகள் என்னும் மெகா விளம்பரப் பதாகைகள் சென்னை நகரெங்கும் காண நேர்ந்தது. அதில் என் மனதை உறுத்திய ஒரு சாதனையைப் பற்றி உங்களோடு சிந்திக்க விழைகிறேன்.


முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் - ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி ஊக்கம் அளிக்கும் விதமாக, காலை உணவு பள்ளியிலேயே. காமராசர் ஆட்சி என்பது போல தெரிந்தாலும், எனக்கு உடன்பட முடியவில்லை.


இத்திட்டத்தை விமர்சிக்கும் எண்ணம் எனக்கில்லை. ஆனால் என் கருத்தைப் பகிர்ந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். அதன் மூலம் சிந்தனை மேம்பாடு அடைய வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.


ஒரு நகைச்சுவை காட்சி நினைவுக்கு வருகிறது.


'எங்க அப்பாவை மாதிரி பெரிய டாக்டர் ஆகனும்னு ஆசைப்பட்டேன்'


"உங்க அப்பா டாக்டரா?"


'இல்லை அவரும் பெரிய டாக்டர் ஆகனும்னு ஆசைப்பட்டார்'


இதனை அப்படியே திருப்பிப் போடுவோம், காமராசர் சொல்கிறார், 'தமிழ்நாட்டின் எதிர்கால ஆட்சியாளர்களைப் போல நான் ஏழ்மையை ஒழிக்க ஆசைப்படுகிறேன்'


'எதிர்கால ஆட்சியாளர்கள் ஏழ்மையை ஒழித்து விடுவார்களா? '


'இல்லை அவர்களும் என்னைப் போலவே ஏழ்மையை ஒழிக்க ஆசைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்'


இப்படித் தான் இருக்கிறது, காமராஜர் ஆட்சியை அமைப்பதாக சொல்லி வாக்கு சேகரிக்கும் தற்போதைய கட்சிகளின் நிலையும்.


காமராசர் ஆட்சியின் குறிப்பிடத்தக்க ஒரு திட்டம், மதிய உணவுத் திட்டம். அதனைக் கொண்டு வந்தது, கல்வியை ஏழை மக்களுக்குக் கொண்டு சேர்த்து, தரமான ஒரு தலைமுறையை உருவாக்கி ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, ஐயமில்லையே?


ஆனால், மூன்று தலைமுறைகள் தாண்டியும், இவ்வளவு மக்கள் வளமும், மண் வளமும், கொண்ட தமிழ்நாட்டில், இப்போதும் காலை உணவுக்காக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் நிலையில் ஏழ்மை இன்னமும் இளமையாகவே இருக்கிறதா என்பதே எனது கேள்வி.

காமராசரின் நோக்கம் மதிய உணவு கொடுப்பதல்ல. ஏழ்மையை ஒழிப்பது.


ஆனால் அதற்குப் பின் தொடர்ந்த ஆட்சிகளின் போக்கு, அதனை ஒழிப்பதாகப் பாசாங்கு செய்து, இலவசங்களும், உணவுப் பொட்டலங்களும் கொடுப்பதையே சாதனைகளாகப் பறைசாற்றிக் கொள்வதற்காக ஏழ்மையை எப்போதுமே ஒழிய விடாமல் வைத்திருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. இதில் மாற்றுக் கருத்தோ, அல்லது என் சிந்தனையில் தெளிவோ கொடுக்கும் விளக்கம் இருந்தால் தெரிவிக்கவும்.


ஒரு தலைமுறை மதிய உணவுக்குக் கூட வழியில்லாமல், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலாமல் இருந்தது, ஏனெனில் அதற்கு முன்பு இருந்தது அன்னியரின் கொடுங்கோல் ஆட்சி. அந்தத் தலைமுறைக்குப் பிறகு 3 தலைமுறைகள் தமிழ்த் தலைவர்களும், முத்தமிழ் அறிஞர்களும், புரட்சித் தலைவர்களும் ஆட்சி செய்திருக்கிறார்கள். இன்னமும், உணவுக்காகப் பள்ளிக்கு அனுப்பும் நிலையில் 1.5 லட்சம் குழந்தைகள் (திட்டத்தின் நேரடி பயனாளிகள்) மற்றும் அவர்களது குடும்பங்கள் ஏழ்மையில் தான் இருக்கின்றனவா?


இது வெறும் காலை உணவுத் திட்டம் மட்டும் தான், இன்னும் இலவசங்கள், ஊக்கத் தொகை என ஏழைகளுகாகத் திட்டங்களா, அல்லது திட்டங்களுக்காக ஏழைகளா என்று சிந்திக்க வைக்கும் ஏராளமான திட்டங்கள், சாதனைகளாக வரலாற்றில் எழுதப்படுகின்றன.

ஏழ்மையை 75 ஆண்டுகளாகியும் ஒழிக்க முடியாதென்றால் சுதந்திரம் எதற்காகப் பெற்றோம்?


அல்லது, திட்டத்தின் பலன் இன்னும் எத்தனை தலைமுறைகள் கழித்துத் தெரியத் தொடங்கும்? இலவசங்கள் வேண்டாம் என தன்மானத்தோடு மறுத்து, தலைவனைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தமிழினம் எப்போது தலையெடுக்கும்? அரசுப் பள்ளிகள், உணவில் அல்லாமல், கல்வித்தரத்திலும், நல்ல குடிமக்களை உருவாக்குவதிலும், தனியார் பள்ளிகளை எப்போது பின்னுக்குத் தள்ளூம்?


எல்லாவற்றுக்கும் மேலே,

  1. இந்தத் திட்டங்களுக்கு இவ்வளவு விளம்பரமும், தற்புகழ்ச்சியும் தேவையா? இதெல்லாம் கடமைகள் தானே?

  2. சாதனைகள் என்று சொல்ல என்ன இருக்கிறது? வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக அம்மா ப்ளெக்ஸ் பேனர் வைத்து கொண்டாடப் படுகிறாளா?

  3. பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்துவது ஒரு அப்பாவின் ஆண்டாண்டு சாதனையா?

  4. இந்த விளம்பரங்கள் இல்லாமல் சத்தமின்றி செய்வது தானே பயனாளிகளின் கண்ணியத்திற்கு (dignity of beneficiaries) அளிக்கும் மரியாதை?

  5. சொந்தக் காசில் இவர்களுக்கு உதவி செய்வது போல இவர்களுடன் புகைப்படம் எடுத்து அதனை பெரிய பெரிய பதாகைகளாக தொடர்ந்து எல்லா அரசியல் தலைவர்களும் செய்வது மனித உரிமை மீறல் இல்லையா?


இந்தக் கேள்விகள் என் மனத்தை அரித்துக் கொண்டே இருக்கின்றன. பதில் இருந்தால் தெரிவிக்கவும்.


மீண்டும் பதிவு செய்கிறேன், எந்த தனிப்பட்ட மனிதரையோ, குறிப்பிட்ட ஆட்சியையோ விமர்சிக்கும் நோக்கம் எனக்கு அறவே இல்லை. ஒரு கடைநிலைக் குடிமகனாக, சாமானியனாக எனக்குள் பல வருடங்களாக இருக்கும் கேள்விகளே இந்தப் பதிவு. தக்க பதில்கள் மூலம் என் கருத்தை மாற்ற முடியுமானால், மகிழ்ச்சியே.

14 views0 comments

Comments


bottom of page