எனது முந்தைய பதிவு என் நண்பர்கள் சிலரின் வண்டி வாங்கும் முடிவை சற்றே மறு பரிசீலனை செய்ய வைத்திருப்பது மகிழ்வளிக்கிறது. வார்த்தைகள் வாளினும் கூரிய திறம் படைத்தவை என்பது உண்மை.
சில நண்பர்கள், இதில் முருகன் அருள் எங்கு இருக்கிறது bro, என்று அன்புடன் வினவியிருந்தார்கள்.
அருணகிரிநாதர் திருப்புகழ் கந்தர் அனுபூதியின் கடைசி வரியில்
"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்று முடியும். இதனைப் படிக்கும் போதெல்லாம், என் குரு எங்கிருந்து வருவார்? திடீரென்று ஒரு நாள் தெருமுனையில் இருந்து வருவாரா? Flex banner-ஐ கிழித்துக் கொண்டு வருவாரா? கோயம்புத்தூரில் இருந்து பைக்கில் வருவாரா? அல்லது வட இந்தியாவில் இருந்து private jet-ல் வருவாரா என்றெல்லாம் எதிர்பார்த்திருக்கிறேன்.
பாம்பன் சுவாமிகளின் பாடல்களை வாசிக்க வாசிக்க, சித்தாந்த பெருமன்றத்தின் உரைகளைக் கேட்க கேட்கத் தான் புரியத் தொடங்கியது உண்மை. குருவாய் வரும் குகன், வெளியில் இருந்து வரப் போவதில்லை. முதலில் உனக்குள்ளே இருந்து தான் வெளிப்படத் தொடங்குவான். உன் வாழ்க்கையின் முக்கியமான திருப்பங்களில், சிக்கல்களில், நீ எடுக்கும் நிலைப்பாடுகளை வழி நடத்துவான், உனக்குள் இருந்து உன்னுடன் பேசுவான். அதை நீ கவனித்து செயல்பட்டால், பின்னாளில், மனித உருவில் குருவாய் வருவான், not immediately, easily or without any effort.
இந்த கதையின் தொடக்கத்தில், புல்லட் வாங்கப் போகும் போது முருகன் படங்கள் நிரம்பிய ஒரு பேருந்தில் சென்றேன் என சொன்னேன் இல்லையா? அந்த இடத்திற்கு வாருங்கள். அங்கே எனது ஆசை 50%, மகிழ்ச்சி 40%, முருகனின் உத்தரவு 10% தான். முருகன் என்னை அந்த இடத்திலேயே, இந்த வண்டி உனக்குத் தேவையில்லை என்று சொல்லியிருக்கலாமே? அது தானே அருள் என சிலர் கேட்கலாம்.
சொல்லியிருக்கலாம், ஆனால் முருகன் knows his limits. என் சுதந்திரத்தை அவன் தடை செய்ய விரும்பவே இல்லை. நான் செயல் பட்டால் தான் சிந்திக்க முடியும். பட்டுத் திருந்தட்டும் என சில வீட்டில் பெரியவர்கள் சொல்வார்களே,அது போல இது என்று நினைக்க வேண்டாம். இது அதனினும் மேலே. இது கயிலாயம் இல்லை, பூமி, இங்கே மனிதர்களின் செயல்பாடுகளுக்கும், விருப்பங்களுக்கும் தான் first priority. The world is not a simulation, rather more like a sandbox, for our souls to do, learn and evolve at their own will and pace.
கடவுள் நமக்கு அளித்திருக்கும் free will, நாம் செயல் படவே. அந்த செயல் ஒரு புல்லட் வண்டி வாங்கும் அற்ப செயலாகவும் இருக்கலாம், அணு குண்டு தயாரித்து, பூமியை சாம்பலாக்கி விட்டு, செவ்வாய் கிரகத்தில் கிரகப்பிரவேசம் செய்வதாகவும் இருக்கலாம். நானோ, அறிவில் சிறியவன், என்னைப் பற்றி மட்டும் இந்தக் கதை.
அந்த பேருந்தில் ஏறும் போது என் கண்ணை ஆசையும், மகிழ்ச்சியும் மறைத்திருந்தது. முருகனோ என்னைப் பார்த்து "இன்னும் ஒரு வருடத்தில் நீ நல்லதொரு பாடம் படிக்கக் கடவாய், யாம் இருக்க பயம் ஏன்?" என்று என்னைப் பார்த்து ஸ்டிக்கரில் சிரித்துக் கொண்டிருந்தான்.
இந்த ஒரு வருடத்தில் இந்த வண்டியைப் பார்த்து சிலர் ஏங்குவதை நான் ஆழமாக உணர்ந்திருக்கிறேன். அங்கே என் பெருமை உடைந்து சிறுமை பல்லிளித்துக் கொண்டிருந்தது வெக்கமே இல்லாமல். உனக்கு எதுக்கு இந்த வண்டி, ஆடம்பரம் எல்லாம்? என எனக்குள்ளே இருந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது, என் மனசாட்சி அல்ல, முருகனே தான். என் மனசாட்சி தான் ஆசையிலும், மகிழ்ச்சியிலும் மிதந்து கொண்டிருந்ததே?
பலரும் வண்டி என்பதில் இவ்வளவு overthinking தேவையா என கேட்கிறார்கள். I am, therefore, I think. சிந்திப்பது என் உரிமை மட்டுமல்ல, அது என் பழக்கமும் கூட. அனிச்சையாக நிகழ்வது. இந்த வாழ்க்கையில் கூடிய விரைவிலோ அல்லது வேறொரு பிறவியிலோ நிச்சயம் நீங்களும் இந்த நிலைக்கு வருவீர்கள். முருக பத்தி கொஞ்சம் accelerated ஆக இந்த நிலைக்கு உங்களை இட்டுச் செல்லும். அது தான் குருவாய் இருந்து உங்களை நகர்த்துவது.
The miracle: as it happened
சரி, இந்த வண்டியை விற்றபின் ஒரு ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினேன் இல்லையா? அதற்குப் பூசை வைக்க தென்மலைக்குச் செல்லலாம் என நினைத்தேன். கோயில் பூசாரி ஐயாவிற்கு போன் செய்து கோயிலுக்கு வரலாமா என்று கேட்டேன். "இல்லை, நான் கிளம்பிவிட்டேன், 10 மணிக்கு வேறொரு இடத்தில் வேலை இருக்கிறது" என்றார். சரி, அப்ப நான் தோரணமலைக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பத்து நிமிடம் கழித்து, மனதில் ஏதோ ஒரு உறுத்தல், தென்மலையானைப் பார்க்காமல் வண்டியை வேறு எங்கும் எடுக்கக்கூடாது என்று ஒரு எண்ணம். அவசரம் அவசரமாக குளித்து வேட்டிச் சட்டை அணிந்து, திருநீறடித்துவிட்டு, மறுபடியும் ஒரு போன், "ஐயா, வண்டி ஒண்ணு வாங்கிருக்கேன், கண்டிப்பா சாவியை முருகன் கிட்ட கொடுத்து வாங்கனும். எனக்காக ஒரு அரை மணி நேரம் காத்திருக்கலாமா?"
'சரி வாங்க! நான் போக வேண்டிய இடத்துக்கு கொஞ்சம் தாமதமா போயிக்கிறேன்'
விட்டேன் வண்டியை தென்மலைக்கு.
எனக்காக முருகன் காத்துக் கொண்டிருந்தானோ அறியேன்? ஆனால் அவன் என்னைப் பார்த்து வா என்றழைப்பது போலத் தான் இருந்தது. 30 நிமிடங்களுக்கும் மேலே, பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பாடல்கள் அனைத்தையும் கல்நெஞ்சு சற்றும் உருகாத படி, போலியாக பாடி முடித்துவிட்டு, சாவியை முருகன் கையில் கொடுத்து வாங்கும் போது, தட்டில் காணிக்கை வைக்க ஒரு எண்ணம். இந்த ஐயா கோயிலுக்கு உண்மையாக உழைப்பவர், பணத்தை மதியாதவர். முருக பத்தி தழைக்க வேண்டும் என்று பாடு படுபவர், வெறுமனே பத்தி என்றில்லாமல் பாடல்களும், இலக்கியமும் மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என விரும்புபவர், சராசரி கோயில் ஐயர் கிடையாது.
எப்போதும் கோயில் பணிகளுக்கு மட்டுமே வரும் காணிக்கையை செலவு செய்து தான் மெலிந்து உழைப்பவர். எனவே நூறு ரூபாய் எப்போதும் வைப்பதுண்டு. ஆனால் மனதில் திடீரென்று ஒரு காட்சி, அவர் முருகனிடம் 500 ரூபாய் ஏதோ ஒரு நல்ல காரியத்திற்கு குறையாக இருப்பதாக வேண்டுவதாகவும், நான் 500 ரூபாய் வைப்பதாகவும் ஒரு கண நேரத்தில் தோன்றி மறைந்தது அந்தக் காட்சி. பர்சில் இரண்டு 500 ரூபாய் தாள்களும், மூன்று 100 ரூபாய் தாள்களும், சில்லறையும் இருந்தது. 500 ரூபாயை வைத்தேன், சாவியை எடுத்துக் கொண்டேன்.
கோயில் பூட்டும் நேரம் ஆகிவிட்டது, உள்ளே சென்று விளக்குகளை அணைத்து விட்டு வருகிறேன் என்று சென்றவர், வரும் போது பனித்த கண்களோடு, கண்ணீரோடு வருகிறார்.
"எப்பவும், 100 ரூபாய் நீ தட்டில் காணிக்கை வைப்பதுண்டு, எனக்குத் தெரியும். இன்னைக்கு நான் ஒரு அன்ன தர்ம காரியம் ஒண்ணு செய்யத்தான் கிளம்பிக் கொண்டிருக்கேன், அதுக்கு ஒரு 500 ரூபாய் தட்டுப்பாடா இருக்கு, 500 ரூபாய் தட்டில் வைப்பியோனு முருகனை நினைச்சேன் நீ அப்படியே செய்திருக்க..."
"..."
இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
உடல் சிலிர்த்தது. மகிழ்ச்சியில் நனைந்தது. தென்மலை குமாரசுவாமி என்னோடு பேசினானா? எனக்குள் இருந்து நிகழ்த்தினானா?
நான் 10 ரூபாய் வைத்தாலும், 100 ரூபாய் வைத்தாலும், அவர் அதனைக் கொண்டு என்னை உயர்வாகவோ தாழ்வாகவோ நடத்தியது கிடையாது. இதனை மனதில் கொள்க. சில கோயில்களில் சில்லறை வைப்பவர்களுக்கு விபூதியை கைபடாமல் போடுவார்கள், 100 ரூபாய் வைத்தால் மாலை அணிவிப்பார்கள், 500 வைத்தால் நைவேத்தியப் பிரசாதத்தை பார்சல் செய்து கையில் கொடுத்து, பரிவட்டம் கட்டுவார்கள். இங்கே அப்படியெல்லாம் இல்லை.
இப்ப அப்படியே rewind. நான் பேருந்தில் அந்த புல்லட்டை வாங்குவதற்கு சென்று கொண்டிருக்கிறேன். அது 11 மாதங்கள் கழித்து எனக்கு கொடுத்தவை, கீழ் வருமாறு:
1. என் ஆசைக்கும் தேவைக்கும் உண்டான வித்தியாசம் புரிந்தது.
2. பணம் நம்மை தேவையில்லாதவற்றை செய்ய வைக்கும் வலிமை கொண்டது என புரிந்தது.
3. வாழ்க்கையில் ஒரு வாகனம் என்பது எப்படி பல்வேறு நிலைகளில், பலரின் கனவாகவும், சிலரின் நனவாகவும், இருந்து வினையாற்றுகிறது எனப் புரிந்தது.
4. நான் சம்பாதித்த பணம், எனும் அகங்காரத்தை நீக்கியது. ஒரு தகப்பனாக என்னை பக்குவப்படுத்தியது, ஒரு மனிதனாக என் ஆசையை அறுத்தது.
5. எளிமையின் அருமையை அனுபவமாக, ஆழப் புரிய வைத்தது.
எல்லாவற்றிற்கும் மேலே, முருகன் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை ஆணி அடித்தது போல உணர வைத்தது. அன்று நான் அந்த புல்லட் வாங்கும் போதே தடை ஆகியிருந்தால், இந்த அனுபவங்கள், புரிதல்கள் எனக்கு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. வேறொரு வாகனத்தை வாங்க முயற்சி செய்து கொண்டு இன்னமும் சில நாட்களை வீணாக்கியிருப்பேன்.
புல்லட் வண்டியே வாங்காதீங்க, எல்லாரும் ஸ்கூட்டர் ஓட்டுங்க என்பது இந்தக் கதையின் நீதி கிடையாது. இது எனக்கான ஒரு அனுபவம், புரிதல். என் கைரேகையைப் போன்று ஒரு unique experience. இதில் எனக்குப் புரிந்த பாடங்கள், சிலருக்கு இதே முட்டாள்தனத்தை செய்யாமல் இருக்க தொடக்கத்திலேயே பயன் படலாம். சிலர் இதனைப் படித்த பிறகும் இந்த தவறை செய்து பின் வெளிவரலாம், மோட்டார் அமைவதெல்லாம், அவரவர் செய்த வினை.
இங்கே முருகன், குருவாய் வந்து அருள் புரிவதன் விதம் உங்களுக்குப் புரிகிறதா? மனதின் ஆழத்தில் உள்ள வேட்கைகளை,அதற்கான முயற்சி உங்களிடம் இருக்கும் பட்சத்தில், உண்மையாக்கி, அதில் உங்களை செயல்பட வைத்து, சிந்திக்க வைத்து, ஆபத்தில்லாமல் காத்து, தெளிவைக் கொடுப்பவன் முருகன். இதைத்தான் இந்தக் கதையில் உங்களுக்கு நான் சொல்ல வந்தது.
புராண கதைகளில் வரும் கடவுளின் செயல்பாட்டை விட, வாழ்க்கையில் எதார்த்தமாக நடந்த ஒரு நிகழ்வில் கடவுளின் செயல்பாடு எப்படி இயங்குகிறது, நம்மை இயக்கித் தெளிவிக்கிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதும், இந்த புல்லட் வாங்கும் படலத்தின் தொடக்கத்தில் நான் சற்றும் கற்பனை செய்திராத ஒரு விசயம் தான். இன்னும் எத்தனை நாட்களுக்கு புராணக் கதைகளை கேட்டுவிட்டு, கடவுளை அண்ணாந்து பார்த்தே வாயைப் பிளந்து கொண்டிருப்பது? எதார்த்த வாழ்வில் கடவுளை உணர முயற்சிப்போம்.
முருகன் அருள், முருகன் அருள்.
மீண்டும் ஒரு நல்ல பதிவோடு உங்களை விரைவில் சந்திக்கிறேன்.
மயக்கம் தெளிந்தது.
நன்றி🙏