top of page
Writer's pictureJohneh Shankar

முருகன் கொடுத்த வண்டி

இது ஒரு உண்மைக் கதை. புல்லட் வண்டி போயி ஸ்கூட்டி வந்தது டும் டும் டும் என பாடவைத்த கதை.


இதில் முருகனின் இயக்கமும், அவன் உடனிருந்து செயல்களை நடத்தி வைக்கும் பாங்கும், பணத்தின் அருமையும், உயிருக்கான தேவையும், ஆசை எப்படி நம்மை மயக்குகிறது என்பதற்கான அனுபவப் பாடமும் என பல்வேறு சேதிகள் அடங்கியுள்ளன. வாருங்கள், இந்தக் கதையை தெரிந்து கொள்வோம்.


என்னிடம் ஒரு 150 சிசி வண்டி, 9 வருடங்களாக பயன்பட்டு வந்தது. திருமணமாகிக் குழந்தை பிறந்த பிறகு, அந்த வண்டியின் சரிவான சீட் அமைப்பு சற்றே இடர்பாடாக இருந்த காரணத்தினால் புதிய வாகனம் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனக்கு கார் ஓட்டத் தெரியாது, தெரிந்து கொள்ளவும் விரும்பியதில்லை. கார் நடுத்தர வர்க்கத்தின் தேவையற்ற ஆடம்பரம் என நினைப்பவன் நான். பொது போக்குவரத்தில் இருக்கும் நிம்மதி காரை வாங்கி, அதனை குளிப்பாட்டி, பார்க்கிங் தேடி அலைந்து.... கார் வேண்டாம். முடிவாகி விட்டது.


சரி இருசக்கர வாகனத்தில் கொஞ்சம் அடுத்த கட்டத்திற்குப் போகலாம் என முடிவு செய்தேன். 150 சிசி-யில் இருந்து 350 சிசிக்கு பரிந்துரைக்கப்பட்டேன்.


இதனை வாங்கப் போகும் போது, ஓரளவிற்கு முருக பத்தியிலும், பாம்பன் சுவாமிகளின் பாடல்களிலும் மிக சொற்பமாக, இறங்கியிருந்தேன். வண்டி வாங்குவதற்கு 45 கிமீ தொலைவில் உள்ள விற்பனையகத்திற்கு பேருந்தில் பயணம். மூன்று பேருந்துகளை ஏதோ காரணமில்லாமல் தவிர்த்துவிட்டு, சரி போவோம் என்று 4-வதாக வந்த பேருந்தில் ஏறினால் - அந்த வண்டியில் எங்கு பார்த்தாலும் முருக மணம். கண்ணாடியில் வேல், வண்டியின் முன்பக்க போர்டில் திருக்குறளுக்குப் பக்கத்தில் முருகன் படம், யாமிருக்க பயம் ஏன் எனும் வாசகம், முருகர் பாடல், சரி, இந்த வண்டி வாங்க முருகனுக்கு சம்மதமோ அல்லது உத்தரவோ என்று அகமகிழ்ந்து பயணித்தேன். 2.5 லகரம் வாகனத்தின் விலை ஏதோ ஒரு உறுத்தலைக் கொடுத்தது. நான் பெரும் பணக்காரனோ, பண்ணையாரோ, அல்ல. என் உடலுக்கும் உயிருக்கும் இவ்வளவு பெரிய வாகனமும் தேவையும் இல்லை, ஆனாலும் ஆசை யாரை விட்டது?

இது முருகன் நமக்கு அளிக்கும் அருள், இதெல்லாம் எப்ப ஓட்டப் போறோம், வாங்க முடியுது வாங்குறோம், இந்த வண்டியில போனா தான் சொகுசா இருக்கும், கப்பல் மாதிரி போகும், இப்படியெல்லாம் என்னை நானே மூளைச்சலவை செய்து, கொடியில் தொங்கப்போட்டு, கிளிப்பை மாட்டிவிட்டு...


இது தான் நமக்கான வண்டி என்று வாங்கிக் கொண்டு, வடிவேலு போல அந்த புல்லட்டில் வலம் வந்து கொண்டிருந்தேன்.




பாடம் 1: மகிழ்ச்சியாக இருக்கும் போது மூளை சலவை செய்வதற்கான அத்தனை தகுதிகளையும் பெற்றிருக்கும். எனவே மகிழ்ச்சியாக இருக்கும் போது எந்த ஆணியும் பிடுங்கக் கூடாது.



வாங்கி ஆறு மாதத்தில் நான் பட்ட சூடுகள்:


1. வண்டி 350 சிசி என்பதால் 15 நிமிடம் ஓட்டினாலே வண்டி ஒரு உருளும் அடுப்பாக மாறிவிடும்.

2. சைலன்சரில் மிக அதிபுத்திசாலி எஞ்சினியர் ஒருவர், இரும்பினால் ஆகப்பட்ட footrest களை பொருத்தி ஹோண்டா கம்பெனியின் பெருமைக்கு பெருமை சேர்த்திருந்தார். மூன்று ஜோடி செருப்புகள் கருகியது தான் மிச்சம்.

3. ஆசையாக வாங்கிய ஒரு லக்கேஜ் பை ஒன்றும் சைலன்சரின் 3 இஞ்ச் இடைவெளியில் இருந்தும் கருகி ஓட்டையாகி, உள்ளிருந்த துணிமணிகளும் கருகி...


சரி, இந்த வண்டியில் இத்தனை பிரச்சினைகள் இருந்தும், ஓட்டும் போது சொகுசாக இருக்கிறதே, அதுதானே முக்கியம் என மூளையை இன்னொரு தடவை அலசிப் பிழிந்து காயப்போட்டு விட்டு மேலும் 6 மாதங்கள் கடத்தினேன். பிறகு தான் புரிந்தது, வண்டியின் சொகுசு அதன் கட்டமைப்பில் இல்லை, சாலையிலும், நாம் ஓட்டும் வேகத்திலும் தான் உள்ளது என்று.


சென்னை சென்றிருந்த போது, ஒரு 100 சிசி 2012 மாடல் ஸ்கூட்டரில் 2 வாரங்கள் குடும்பத்தோடு சுற்றிய பிறகு தான் உரைத்தது, எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்று. நல்ல சாலைகள் இருந்தால் 100 சிசி வாகனமே ஒரு 3 பேர் குடும்பத்திற்கு சொகுசாகத்தான் இருக்கிறது. மோசமான சாலையில், 100 சிசி வண்டியில் உங்கள் பிட்டத்திற்குக் கிடைக்கும் அதே மரியாதையே 350, 400, 600 சிசி வாகனத்திலும் கிடைக்கும். சஸ்பென்சன் எதுக்கு இருக்கு? அதனால் ஒரு 30% நேரடியான impact மட்டுமே குறையும், மற்றபடி, பழுக்க வேண்டியவை எந்த வண்டியிலும் பழுக்கும்.


நல்ல சாலைகள் இல்லாதது ஒரு சமூக அரசியல் பிரச்சினை. இங்கே பணம் படைத்தவர்கள் நல்ல சாலைகளைப் பற்றிக் கவலைப் படாமல் இருப்பதற்குத் தான் அதிநவீன சஸ்பென்சன் கொண்ட வாகனங்கள் விற்பனைக்கு வருகின்றன. நாம் அனைவருக்கும் நல்ல சாலைகள் கிடைக்க சமூகமாக உழைப்பதை விடுத்து, சாலைகள் எப்படியிருந்தாலும் நான் வைத்திருக்கும் வாகனம் சொகுசாக செல்லும், என்பதோடு சுயநலமாக சுருங்கி விடுகிறோம். இதில் உள்ள அரசியல் உங்களுக்குப் புரிகிறதா?

ஊர் திரும்பிய உடனேயே வண்டியை விற்று விடுவது எனும் முடிவுக்கு வந்தேன். விற்பதற்குத் தான் என்னென்ன பாடுகள்? வாங்கும் போது அந்த வண்டி மீதிருந்த அத்தனை அருமை பெருமைகளும் சாணியில் முக்கி செருப்பால் அடித்தது போல கிழிந்து தொங்கியிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, என் உயிரின் பயணத்திற்கு, எளிமையை விரும்பும் என் மனத்திற்கு இந்த வண்டி மிகப்பெரும் ஒரு பாரமாக, வினையாக இருந்தது.


பெருத்த நட்டத்தோடு இந்த வாகனத்தை விற்ற பிறகு, எனக்குள் எழுந்த சில குற்ற உணர்வுகள்:


1. பணம் இருக்கிறது என்று இப்படிப்பட்ட ஒரு பிழையைச் செய்தோமே, இந்தப் பணத்தை அறத்திற்கு அல்லவா செலவிட்டிருக்க வேண்டும்?

2. பணம் இல்லாத நாட்களில் இப்படி ஒரு அடாவடியான, அவசரமான முடிவை நான் எடுத்திருப்பேனா?

3. இதில் நட்டமான பணம் என் பணமா? இல்லை, என் உழைப்பின் மூலம் யாருக்காவது உதவி செய்ய முருகன் கொடுத்த அவன் பணம். என் மகளுக்கு எதிர்காலத் தேவைக்கான பணம். கனவுகளை ஒதுக்கி வைத்து விட்டு, வேலைக்குச் செல்லாமல் என்னுடன் இல்லறம் நடத்தும் என் மனைவியின் பணம். நிச்சயமாக என் பணம் அல்ல.


எவ்வளவு பெரிய குற்றம்? அறநூல்களையும், முருக பத்தி நூல்களையும், திருக்குறளையும் வாசித்திருக்காவிட்டால்,இது என் வாழ்க்கையில் just another incident. உலகில் யாரும் செய்யாதவற்றையா செய்து விட்டோம்? ஒரு வண்டி வாங்கினோம், பிடிக்கவில்லை, வேறு வண்டி வாங்குகிறோம், இதில் என்ன தவறு, குற்றம், பழி, பாவம்? என்று நகர்ந்திருப்பேன். என்னுடைய vantage point இப்போது என்னுடன் பயணிக்கும் அனைத்து ஆன்மாக்களுடனும் இணைந்தே என் வாழ்க்கைப் பயணம் இருக்கிறது என்பதை விரிவாக காட்டுகிறது.


ஆக, வண்டியை விற்றாகி விட்டது. புதிய வாகனம், நிச்சயமாக ஒரு எளிமையான வண்டியாக இருத்தலே போதும் என்று நினைத்தேன். ஸ்கூட்டி வகை வாகனங்கள், 90,000 ரூபாயில் இருந்து தொடக்க விலையில் கிடைக்கின்றன. புல்லட்டை விற்றதில் நட்டம், என் உபயோகம் போக 70,000. இதனை என் மகளிடமும், மனைவியிடமும் பட்ட கடனாகவே நான் கருதினேன். இதனை ஈடு கட்ட வேண்டுமானால் இனி வாங்கும் வாகனத்திற்கு என்னிடம் இருக்கும் பணமோ, 45-55000 ரூபாய். பழைய வாகனங்கள் விற்கும் சந்தையை அணுகினேன். 30-60 ஆயிரம் கிமீகள் ஓடிய ஸ்கூட்டர்கள் 40 ஆயிரம் ரூபாயில் இருந்து விற்கிறார்கள். இவ்வளவு பழைய வண்டியை நம்பி வாங்கலாமா? பாதுகாப்பாக இருக்குமா என்று பெரும் குழப்பம்.


இடைப்பட்ட ஓரிரு வாரங்கள், வாகனமே இல்லாமல் நகர்ந்தது. நன்றாகத் தான் இருந்தது. மினி பஸ்சில் சந்தைக்குச் செல்வது, நடந்தே ஊர் சுற்றுவது, கடைகளுக்குச் செல்வது என ஒரு நிதானமான வாழ்க்கை கிடைத்தது. ஒரே ஒரு சிக்கல், தென்மலையில் இருக்கும் அப்பன் குமாரசுவாமியைத் தரிசிக்க நிச்சயம் வண்டி தேவை.பேருந்தில் சென்று இறங்கினாலும் 2 கிமீ தூரம் நடந்து பின் மலை ஏற வேண்டும். மாத சஷ்டி நிச்சயம் முருகனை தரிசனம் செய்வது உண்டு, அன்று தான் என் மகள் பிறந்தாள். வேறு வழியில்லாமல் பக்கத்து வீட்டு வாகனத்தை கடனாகப் பெற்றுக் கொண்டு கோயிலுக்கு தாமதமாக சென்றேன்.


too late. கோயிலில் யாரும் இல்லை, பூட்டப்பட்டிருந்தது. நமக்கு மலையே முருகன் தான் என்று உச்சியில் உள்ள பாறை வெளியில் சென்று அமர்ந்தேன். பாராயண பாடல்களை பாடினேன். மனதில் குற்ற உணர்ச்சி பீறிடுக் கொண்டே இருந்தது. புல்லட்டில் பாந்தமாக, இதே முருகன் கோயிலுக்கு பல முறை சென்று பெருமிதப்பட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் சொன்னது போல, இந்த வண்டி, எனக்கு முருகனால் அருளப்பட்டது என்றே நினைத்திருந்தேன். ஆனால் எனக்கான அனுபவம் புல்லட்டில் இல்லை. அதை வாங்கியதிலும், பயன் படுத்தும் போதும், விற்றதிலும் என்னை நான் பக்குவப்படுத்திக் கொள்ளக் கிடைத்த இந்த பாடங்களில், கேள்விகளில், குற்ற உணர்வுகளில் இருந்திருக்கிறது.


முருகா, என்னை மன்னித்து விடு.


25 வருடம் பழைய வாகனத்தில் வீடு வீடாக சென்று வியாபாரம் செய்யும் ஒருவரின் வண்டியைப் பார்க்கிறேன். 3 பேர் பயன் படுத்தி சக்கையாகப் பிழிந்தெடுத்த ஒரு ஹோண்டா பைக்கில் தினமும் 100 கிமீ சுற்றி Swiggy/zomato வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞனைப் பார்க்கிறேன். 2010 மாடல் 100 சிசி Splendour பைக்கில் நான் புல்லட்டில் செல்லும் அதே தூரத்தை கடக்கும் ஒரு சக பயணியைப் பார்க்கிறேன்.


இங்கே பணத்தால் கிடைக்கும் வசதிக்கும், அதன் இன்மையால் இருப்பதைக் கொண்டு இயங்கும் திறத்திற்கும் இடையே தான் ஒட்டு மொத்த மனித இனத்தின் அரசியல் பிழைகளும் பிழைத்திருக்கின்றன என்பது திண்ணம். இல்லாதவர்கள் இருப்பவர்கள் நிலைக்கு வர உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இருப்பவர்களோ,இல்லாதவர்களை விட தாம் ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தவர்களாக நினைத்துக் கொண்டே மயங்கி இருக்கிறார்கள். இரண்டுக்கும் நடுவே ஒரு நரிக் கூட்டம் தின்று பெருத்துக் கொண்டே இருக்கிறது.

உங்களுக்கு என் சிந்தனை பித்துக்குளித்தனமாகவோ, சிரிப்பாகவோ கூட தோன்றலாம். ஆனால் எனக்குப் புரிந்தது அதே ஆழத்தில் உங்களுக்கும் புரிய வேண்டும் என்பது அவசியமல்ல. வருடத்திற்கு ஒரு வாகனத்தை லோன் போட்டு எடுக்கும் இளைஞர்கள் கொண்ட தலைமுறையில் நான் பிறந்திருக்கிறேன். ஆனால் இதே தலைமுறையில் தான் மேற்சொன்ன இளைஞர் வகையறாக்களும், வியாபாரிகளும் கூட இருக்கிறார்கள். சொற்ப வருமானம், அதிலும் பாதி கடன் தவணைக்கு, தண்டலுக்கு, சின்ன சின்ன இன்பங்களுக்கு, சேமிப்பை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களின் ஏக்கப்பெருமூச்சை ஏற்படுத்தும் ஒரு பொருளை நான் வாங்கி விட்டேன் என்பது ஒரு மனிதனாக, என்னுடைய தோல்வியையும், சிறுமையையுமே காட்டுகிறது.


மேலும் கீழுமாகவே நின்று துருப்பிடித்துப் போன இந்தச் சமூகத்தின் தராசில், கீழே இருப்பதனாலேயே கனமானதாக தெரியும் தங்கத்தட்டாக, வசதியான, ஆடம்பரமான வாழ்க்கையை விடவும், துருப்பிடித்த, எளிமையான இரும்புத்தட்டில் தான் வாழ்க்கை என்றால் என்ன எனும் தங்கத்தை விடவும் சிறந்த பாடங்கள் கிடைக்கின்றன. அதனால் தானோ என்னவோ, அது மேலே இருக்கிறது, கனம் குறைந்திருப்பதால் மட்டும் அல்ல.

சொல்லப்போனால், பணம், பதவி, புகழ் இவையெல்லாம் வல்வினையே. இவற்றின் கனம் உங்களைத் தராசில் கீழே இறக்கிக் காட்டும், ஆனால் அது ஆன்மலாபத்திற்கு உகந்ததல்ல.


இவ்வாறான சிந்தனைகள் செதுக்கிய பின்னர், புதிய வாகனம் வாங்குவதில் ஒரு லட்சத்தைப் போடும் எண்ணத்தை அறுத்தெறிகிறேன். ஓரிரு மாதங்கள், கோயிலுக்குச் செல்ல முடியாததைத் தவிர, வேறு எந்த துன்பமும் இதனால் இல்லை, எனவே பிறகு பயன்படுத்திய வாகனம் ஒன்றை பொறுமையாக வாங்கிக் கொள்ளலாம் எனும் முடிவுக்கு வந்தாயிற்று.


நேற்று, ஏதோ ஒரு வேளையாக எங்கோ ஒரு ஊருக்குச் செல்லக் கிளம்பிய நான், பேருந்து நிறுத்தத்தில் அரை மனதாக நின்று கொண்டிருந்தேன். 20 நிமிடங்கள் கடந்தும் பேருந்து வரவில்லை, அடுத்த ஊருக்குச் சென்றால் அங்கிருந்து நிறைய பேருந்துகள் வரும் என அறிந்து அங்கு சென்றேன். அங்கும் 30 நிமிடங்களாக நான் எதிர்பார்த்த பேருந்து வரவில்லை. சரி, முருகன் உத்தரவு, வீட்டுக்கே செல்வோம் என மனதை மாற்றி திரும்பும் வழியில், பழைய வாகனங்கள் விற்கும் அந்த கடை வாசலில் பளபளப்பாக நின்று கொண்டிருந்தது ஒரு புது ஸ்கூட்டி. 3000 கிமீ கூட ஓடாமல், புத்தம் புதியதாக இருந்தது. தற்போது ஷோரூம் விலை,97,500 உரூபாய் உள்ள மாடல். நிச்சயமாக 80,000-ற்கு குறைவாக கிடைக்காது என்று முடிவு செய்து கொண்டே தான் அணுகினேன்.


முருகா,இந்த வண்டி ஒரு 50,000க்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே.வண்டியைப் பற்றிய தலைவலி இன்றோடு முடியும். கிடைக்குமா? கிடைத்தது. 55,000. ஓட்டிப் பார்த்தேன், ஒரு குறையும் இல்லை.கையோடு அட்வான்சைக் கொடுத்துவிட்டு மாட்டைக் கட்டிக் கொண்டு வருவது போல் ஓட்டி வந்து நிறுத்திவிட்டேன். இங்கே பணம் நட்டமடைந்தது, பின் குறைந்த விலைக்கு ஒரு நல்ல வண்டி கிடைத்தது என்பதில் இல்லை என் முருகனின் அருள்.


இனி என் வாழ்வில், நான் சம்பாதிக்கும் பணத்தை என்னுடைய பணம் என்று நினைக்க மாட்டேன் எனும் புரிதலில் இருக்கிறது அவன் அருள். இதில் மேலும் ஒரு அற்புதம் நடந்தது,அதனை அடுத்த பதிவில் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.


என் வாழ்வின் இந்த அற்ப நிகழ்வை எழுத்தாக உங்களோடு பகிர்ந்து கொள்வதல்ல என் நோக்கம். அதில் பொதிந்திருக்கும் எனது பாடங்கள் நிச்சயம் புது வண்டி வாங்க வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்குப் பயன் படும், அவர்கள் மயக்கத்திற்கு ஆட்படாமல், சிக்கனமான ஒரு வாகனத்தை வாங்கி, வாழ்வில் இன்பமாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.


உங்கள் கருத்து என்ன? பதிவிடுங்கள்.அடுத்த பதிவில், முருகன் என்னை சிலிர்க்க வைத்த அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.








28 views0 comments

Comments


bottom of page