'உறங்குவது போலுஞ் சாக்காடு' என்பது வள்ளுவர் வாக்கு.
உறங்குவது போலும் சாக்காடு - மேனி காய்வது போலும் முதுமை
வள்ளுவன் வாக்கோடு, என்னுடைய அனுபவத்தை கலந்து ஒரு குறள் வெண்பா.
சமீபகாலமாக சென்னை மற்றும் சென்னையில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்குப் பரவும் நவீன, உருமாறிய, ஆதாருடன் இணைக்கப்பட்ட ஒரு வைரசு காய்ச்சல் என்னை வைத்து செய்ததால்....
என்னுடைய காய்ச்சல் அனுபவங்கள் இந்தப் பதிவாக...
காய்ச்சலும், முதுமையும் ஒன்னுங்கறேன். அதாவது, 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் நம்மிடம் புலம்பும் போது எரிச்சலூட்டுகிற முதுமையின் அனைத்து சிக்கல்களுக்கும் இளமையிலயே ஒரு teaser, trailer தான் இந்த காய்ச்சல். மூட்டு வலி, முதுகு வலி, எழுந்து நிற்க முடியாத சோர்வு, உடலின் கழிவு நீக்கத்தில் இடைக்கால தடை, பேச்சில் குழறல், இராத்திரி பூரா அனத்தல், இருமல், கண்ணெரிச்சல், தலை வலி... போதும், போதும் ரொம்ப லெங்த்தா போயிகிட்டிருக்கு... அப்படின்னு சொன்னா இந்த வைரசு நிறுத்துதா என்ன? மேற்கொண்டு, வயிற்று வலி, வாய் உலர்தல், பசியின்மை எல்லாத்தையும் ஒரே நேரத்துல உடம்புக்குக் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது. இந்த மூளை, எதை முதலில் சரி செய்யுறதுன்னு இருக்கற வெள்ளை அணுக்கள் ஆர்மி ஜெனரலை கூப்பிட்டு உச்ச கதியில் அவசர நிலைப் பிரகடனம் செய்து...
"மிஸ்டர். பிரெசிடெண்ட். நீங்க பிரச்சினையா பாக்குற இத்தனை விசயங்களையும் முடுக்கி விட்டது நாங்க தான்"
"என்னது? நீங்களா?"
"ஆமாம். எங்களுடைய போர் முறை இது தான். இப்படித்தான் நீண்ட நாட்களுக்கு இந்த வைரசு மறுபடியும் தலை காட்டாத மாதிரி பிடரியில அடிச்சு விரட்ட முடியும்"
"இந்த வெளியுறவுத் துறை என்னவோ பாரசிட்டமால் போட்டா உடனே சரி ஆயிடும்ங்கறானே. ஏற்பாடு பண்ணிடலாமா?"
"நாசமாப் போச்சு! அப்படி பண்ணீங்கன்னா நம்ம வெள்ளை அணுக்கள் தான் கூட்டம் கூட்டமா மர்கயா ஆகும்: மேற்சொன்ன அறிகுறிகள் எதுவுமே இல்லாம உடம்பு கம்முன்னு ஜம்முன்னு இருக்கும். ஆனா வைரசுப் படை அமைதியா ஆக்கிரமிப்பை நடத்திகிட்டிருக்கும். எல்லாத்துக்கும் மேல இந்த பாராசிடமால் ஆயுதம் destructive, முக்கியமா நம்ம கிட்னி பிராந்தியத்தை ரொம்ப பாதிக்கும். அப்புறம் உங்க இஷ்டம்"
"..."
"இதுக்கு ஒரே தீர்வு, அமைதியா ஒரு இடத்துல படுத்துகிட்டு, எங்களை எங்க வேலையை செய்ய விடுறது தான், பிரெசிடெண்ட். நடுவுல தயவு செஞ்சு பிரெட், பன் பட்டர் ஜாம், இட்லி சாம்பார்னு உள்ள இறக்கிடப் போறீங்க, வயித்தைக் காயப் போட உத்தரவு போடுங்க. இல்லன்னா ஆர்மில பாதி அங்க ஆஜர் ஆயிடும், எல்லாம் இன்னும் குழப்பமாயிடும்"
"நிச்சயமா அப்படியே பண்ணுறேன். கூடிய சீக்கிரம் இந்த வைரசை விரட்டிருவீங்கன்னு நம்புறேன்"
இப்படி எல்லாம் மூளையும் வெள்ளை அணுக்கள் மேஜரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து, உடம்பை ஒரு 3-4 நாளைக்கு நல்லா detox பண்ணி, drain பண்ணி, flush பண்ணி, நல்லா பிழிந்து துவைத்து காயப்போட்டுக் கொடுப்பதால், காய்ச்சல், காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
காய்ச்சலை இரசிப்பது எப்படி?
ஆமாம். காய்ச்சலை இரசிக்க வேண்டும். அது ஒன்றே அதனோடு பயணித்து, அதனை முழுதாய் அனுபவித்து, பின் அதனைக் கழட்டி விட்டுக் கடந்து விடச் செய்யும் ஒரே வழி.
பசி பொறுத்தலும் பிணி பொறுத்தலும் தவம் எனக் கொள்க
காலை எழுந்த உடன் ஏதாச்சும் உள்ளே தள்ளக் கூடாது. குறைந்தது ஒரு 2 மணி நேரமாவது, இயங்கிகிட்டே, உடற்பயிற்சி, அன்றாட பணிகள், வழிபாடு இப்படி ஏதாச்சும் செஞ்சுகிட்டு, பசியைப் பொறுத்துக் கொள்ளப் பழக வேண்டும். அல்சர் வந்துடுமேன்னு பயப்படக்கூடாது. வரும்னு பயந்தா வரும். பசியை இரசிக்கப் பயில்வது, பின் கிடைக்கும் உணவின் அருமையை இன்னமும் இரசிக்கச் செய்யும்.
போலவே, காய்ச்சல் எனும் பிணியும். அதனை உள்வாங்கி அனுபவித்து, அதன் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டு, எதிர்வினையாற்றுதல் நம் கட்டுப்பாட்டில் இல்லை, அது உடலின் நோயெதிர்ப்பாற்றலின் கடமை என்று அமைதியாக இருத்தல் தவம். அந்த நேரத்தில், இந்த உலகை மறக்க வேண்டும். பெரும்பாலும் மறந்து விடுவோம். காய்ச்சல் உடலுக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்க இயற்கையே கொடுத்திருக்கும் ஒரு educative reset அமைப்பு.
காய்ச்சலில் நான் எப்போதும் கற்றுக் கொள்ளும் பாடங்கள்:
1. உயிர் வளரவே உடல் - உடல் வளர்க்க உயிர் இல்லை. எனவே உணவின் அருமை உணர்த்த காய்ச்சல் நாட்களின் பட்டினி ஒரு சிறந்த பாடம். சில சமயம், ஒரு வேளை உணவு உண்ணாமல் இருந்து விட்டால் கூட, பசி வயிற்றைக் கிள்ளி, மயக்கம் வருவது போல் எல்லாம் தோன்றும், ஆனால் காய்ச்சல் நாட்களில், தொடர்ந்து 3 தினங்களுக்கு எந்த உணவும் இல்லாமல், கசாயமும், மிகச் சிறிய அளவில் இரச சாதமோ, கஞ்சியோ மட்டும் குடித்து விட்டு உடல் எப்படி இயங்குகிறது என்று நினைத்து வியப்பேன்.
2. முதுமையின் தள்ளாட்டமும், இயலாமையும் மிகக் கொடியது - அதனை தவிர்க்க முடியாவிட்டாலும் பழகிக் கொள்ள காய்ச்சல் ஒரு முன்னோட்டம். வாழ்க்கை என்பதன் சுருக்கத்தை காய்ச்சல் உணர்த்தவல்லது.
3. மருந்து உடலில் உற்பத்தி ஆகிறது. வெளியில் இருந்து நாம் உட்கொள்ளும் மருந்தாவன, உடல் உற்பத்தி செய்யும் மருந்தின் இயக்கத்திற்கு ஏதுவாக உடலை தகவமைக்க உதவ வேண்டும், மாறாக உடலின் எதிர்வினைக்கு எதிர்வினையாக செயல்படக்கூடாது. மாத்திரைகள் செய்வது இதைத் தான்.
காய்ச்சலின் போது கசப்பு சேர்ப்பது அகவெப்பத்தைத் தூண்டி, நோய்க்கிருமிகளை அழிக்க உடலினை
போர்க்கள பீரங்கியா மாத்திடும். அதனால கொஞ்சம் உடம்பு அதிரத்தான் செய்யும். நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் இரண்டும் எப்பவும் கைவசம் இருக்க வேண்டும். வைரசு தொடர்பான காய்ச்சலா, நிலவேம்பு. காய்ச்சலின் ஆரம்ப நிலையா, கபசுர குடிநீர்.
முடிஞ்சா அப்பப்ப இரண்டு, வேப்பிலைக் கொழுந்தைக் கிள்ளி வாயில் போட்டு மென்று சாறு விழுங்க வேண்டும். இதெல்லாம் காய்ச்சலின் போது நான் செய்யும் புற நடவடிக்கைகள்.
அகத்தில், இறைவனை நினைத்திருத்தல் மட்டுமே நாம் செய்யக்கூடிய காரியம். தெரிந்தும் தெரியாமலும், நாம் செய்த வினைகள் எல்லாம் காய்ச்சல் நேரத்தில் தான் நினைவுக்கு வரும். இறைவா, இந்தக் காய்ச்சலின் வெம்மை வினைகள் கழியவோ, என்று நினைத்துக் கொள்வேன். காய்ச்சல் நேரத்தில் மனதுக்குத் தெம்பு தரும் சில பாராயண பாடல்கள் உண்டு.
இவை இரண்டும், கேட்டாலோ அல்லது பாடினாலோ மனதுக்குத் தெம்பு தந்து, உடலை எழுப்பி உட்கார வைக்கும் ஆற்றல் உடையன. அனுபவத்தில் உணர்ந்தது. இது சம்பந்தமாக ஒரு அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும், இது வெறுமனே placebo விளைவு கிடையாது என்பது திண்ணம்.
இவை தவிர்த்து, பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முக கவசமும், குமாரஸ்தவமும் காய்ச்சல் மட்டுமின்றி பொதுவாக எந்த வகையான பிணிகளின் தொந்தரவின் போதும் உடலை தேற்றும் என்பதும் யாம் அனுபவித்த உண்மை.
சண்முக கவசம், தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18 என 30 எழுத்துக்களின் அடிப்படையில் உடலுக்கு நேரும் அகம் மற்றும் புற ஊறுகள் பலவற்றில் இருந்தும் முருகனின் வேல் காக்க வேண்டும் எனக் கோருமாறு அமைக்கப்பட்ட செய்யுள் ஆகும். தமிழின் தனிச் சிறப்புகளுள் ஒன்று, அதன் உயிர் மெய் பகுப்பு, உயிர்மெய் இணைப்பு அமைப்பாகும். உடலைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தமிழைத் தோற்றுவித்தவர்களின் ஆழமான புரிதல் போற்றத்தக்கது.
இதெல்லாம் வெறும் பாட்டுத் தானே, இது எப்படி உடலைக் காக்கும், காய்ச்சலை குணமாக்கும் என்றெல்லாம் பகுத்தறிவுக் கேள்விகளை ஒரு காலத்தில் நானும் கேட்டிருக்கிறேன். பதில் வார்த்தைகளுக்குள் அடங்காது, உணர்வு சம்பந்தப்பட்டது என்பது எனது புரிதல். பொதுவாகவே மொழி என்பது, மனதை உடலோடு இணைத்து, உடலை உலகோடு தொடர்பு கொள்ளப் பயன்படும் ஒரு கருவி ஆகும். அந்த மொழியின் உச்சரிப்பு, உடலின் காற்றுச் சுழற்சி, இரத்த ஓட்டம் இவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழின் வல்லின, மெல்லின இடையின எழுத்துக்கள், செய்யுள் அமைப்பு இவை நிச்சயமாக உடலில் ஒரு நேர்மறை விளைவை ஏற்படுத்தும் வல்லமை உடையன. இதற்கு நேரடியான சான்றுகள் கிடையாது, அல்லது இன்னமும் ஆராய்ந்து ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் நியூட்டன் கண்டுபிடித்து, ஆவணப்படுத்தும் வரை புவியீர்ப்பு விசை இயங்காமல் இல்லை.
இப்படியாக, கசாயம் குடித்தும், பாடல்கள் படித்தும், இறைவனை நினைத்தும் என் உடலோடு ஒத்துழைப்பு நல்கி, நான் சாதாரண காய்ச்சல் தொடங்கி, கொரோனா, டெங்கு, H1N1 வரைக் கடந்து வந்திருக்கிறேன். நிச்சயமாக என்னுடைய திறமையோ அல்லது அதிர்ஷ்டமோ இதில் இல்லை. முருகன் அருள், முருகன் அருள், முருகன் அருள் மட்டுமே, என் உயிரைக் காக்கிறது, என் வினைப்பயன் கழியும் வரை இந்த உடலையும் காக்கிறது என்பதே தெளிந்த உண்மை. அவனருள் இறைஞ்சுவோம், அவன் மொழியாம் தமிழைப் போற்றி ஏற்றுவோம்.
முக்கியக் குறிப்பு: இந்தக் கட்டுரை மருத்துவக் குறிப்பு அல்ல. பரிந்துரையும் அல்ல. என்னுடைய சொந்த அனுபவங்கள், மற்றும் சிந்தனைகள் மட்டுமே. ஒவ்வொருவர் உடலும், மனமும் கைரேகையைப் போன்றே தனித்துவமானவை. அவரவர்க்கான மருத்துவ முறைகள், உடலை அணுகும் விதம் இவை நிச்சயம் மாறுபடும். உள்ளிருந்து உணர்ந்து செய்ல்படவும்.
Kommentarer