top of page
Writer's pictureJohneh Shankar

நம் கடமை - இன்று ஒரு சிந்தனை 04

கோயிலிக்குச் செல்கிறோம், சாமி கும்பிடுகிறோம், பிரசாதம் வாங்குகிறோம், நிம்மதியாய் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து அதை ருசித்து விட்டு ஊர்க்கதை பேசிவிட்டு வீடு திரும்புகிறோம். வழிபாட்டில் தெளிவு இல்லை. ஏன் இல்லை? குழப்பம் இருப்பதால் தெளிவு இல்லை. அறிவின் இயல்பு நிலை என்ன? தெளிவா குழப்பமா? இரண்டில் ஒன்றாகத் தான் இருக்க முடியும். அல்ல, மூன்றாவதாக ஒரு நிலை உண்டு அதுவே அறியாமை. அறியாமையில் இயங்கும் போது வரும் விளைவுகளைக் கொண்டு அறிவு விளங்குகிறது. விளங்கும் அறிவில் அனுபவங்கள் தெளிவையும், தகவல்கள் குழப்பத்தையும் உண்டு பண்ணுகின்றன.


நமது வழிபாட்டு முறையில் இருந்து, வாழ்வியலின் இறுதிக் கட்டமான மரணம் வரை, நமக்கு எதிலுமே தெளிவு இல்லை என்பது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.

இதனை எப்படி நிறுவுவது? எத்தனையோ பகுத்தறிவு புரட்சிகள் வெடித்த பின்னும் இந்நாட்டில் சாதி, மத, சமய பேதங்களும், அதனால் வரும் பூசல்களூம், அவற்றுள் நடக்கும் சுரண்டல்களும், பித்தலாட்டங்களும் குறையவே இல்லை என்பதே இதற்கான சான்று. தமிழகத்தில் பூசல்கள் இல்லை என்றாலும், தத்துவம் மற்றும் கடவுள் சார்ந்த, போலிகள், சுரண்டல்கள் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இதனால் நேரடியாக நமது வாழ்க்கை பாதிக்கப்படாதது போலத் தோன்றினாலும், மறைமுக விளைவுகள், தலைமுறைகள் கடந்து பாதிக்கக் கூடிய அரசியல் பிழைகள், நமது பிறவியின் இறுதிக் கட்டத்தில் நாமே சந்திக்க வேண்டிய பின் விளைவுகள் நிச்சயம் உண்டு.


இந்தக் குழப்பத்திற்கு தீர்வு என்ன?


  • அறிவிற்சிறந்த, விவரமான மூத்த தலைமுறையின் மிச்சமாக இருந்தவர்களை அணுக வேண்டும். விவரம் அறிந்து தெளிவான மனிதர்களை நாம் மதிக்கத் தவறி விட்டோம், அவர்களை கூட்டு அறியாமையினால் புறக்கணித்து விட்டோம்.

  • கலாச்சார மோதல்கள், அரைவேக்காட்டுக் கல்வியினால் நாமும் விவரம் அறிந்தவர்களாக இல்லை.

இனி நமக்கிருக்கும் ஒரே கடமையும், வழியும், நாம் விவரம் அறிந்தவர்களாக, தெளிவடைய முயற்சி செய்வது மட்டுமே.

இந்த முயற்சி சித்திக்க ஒரே வழி, படிப்பதும், அறிந்து கொள்வதும். யாரிடம் அறிந்து கொள்வது? யாரை நம்புவது? யாரையும் நம்பவும் வேண்டாம், சந்தேகிக்கவும் வேண்டாம். நமது தாய்மொழியில் இருக்கிறது நம் கேள்விகளுக்கான விடைகள். படிக்கத் தொடங்குவோம். நமது மொழியின் இலக்கணத்திலேயே தத்துவ உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. நமது வழிபாட்டு நூல்களாகிய தேவாரம், திருவாசகம் போன்றவற்றில் இல்லாத பகுத்தறிவு வேறெங்கும் இரா. இதற்கான செயல் திட்டம் எவ்வாறெனின்:


  1. நாம் (வயதிற்பெரியவர்கள்) சற்றேனும், வாசிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். புத்தகங்கள் இன்று எளிதிற் கிடைக்கின்றன. பஞ்ச காலத்தில் உணவைப் பதுக்குவது போல அவற்றை வாங்கிப் பதுக்குங்கள் உம் வீடுகளில். பின்னால் வரவிருக்கும் அறிவுப்பசியை போக்க அவை தக்க சமயத்தில் கை கொடுக்கும், சத்தியம்.

  2. நமது குழந்தைகளை (அடுத்த தலைமுறை) வாசிக்கப் பழக்குங்கள். வாசிப்பு என்பது ஒரு சிலருக்கான கலை எனும் மாயையை உடையுங்கள். தமிழைப் பிழையின்றி எழுத, படிக்க, பேச கற்றுக் கொடுங்கள். இன்று Youtube-ல் அதற்கான வழிகள் மலிந்து கிடக்கின்றன. அறிவிற்சிறந்தோர் பலர் தமிழை இணையம் மூலமாகக் கற்றுக் கொடுப்பதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவு வளர்ச்சி என்பது நிச்சயம் ஒரு மனிதன் ஒரு ஆயுளில் அடையும் தனிப்பாதை அல்ல. Only material knowledge grows in individuals, while wisdom grows collectively across generations. நாம் புத்திசாலிகளை வளர்த்து விடுவது எளிது. ஆனால் ஞானிகளை வளர்ப்பது தலைமுறைகளால் பிணைந்தது. அது தலைமுறைகளால் இணைந்து வளரும் ஒரு சங்கிலித்தொடர் நிகழ்வு.

அதில் ஒரு கண்ணியில் விழுந்த விரிசல் தான் நாம் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் தத்துவ, மத, சமய குழப்பங்கள், அதனால் விளையும் அரசியல் பிரச்சினைகள், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும். இந்த ஒரு கண்ணி முழுதாக உடையும் முன்பாக விழித்துக் கொண்டு செப்பனிடுவோம்.







1 view0 comments

Comments


bottom of page