ஒரு மகளுக்குத் தந்தையாகும் வயதில் தான் எனக்குத் தெரிய வந்தது, வாழ்வில் எவ்வளவு பிழைகள் செய்திருக்கிறோம் என்று. தாய்மொழி தமிழ் என்று வெறுங்கூச்சல் போட்டே முப்பது அகவைகள் தாண்டிய பின்னர் தான் புரிகிறது, தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல, இறைவன் உயிர்களுக்கு உய்யக் கொடுத்த ஏணி என்பது.
இப்போது புரிந்து என்ன பயன் என்று காலத்தை வீணாக்க மனம் வரவில்லை. தமிழுக்காகவும், தமிழ் இலக்கண, இலக்கிய, பத்திப் பாடல்களுக்காகவும் ஒவ்வொரு தலைமுறையிலும் சில மனிதர்கள் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யக் காரணம், வெறுமனே மொழிப் பற்றோ அல்லது மொழி வெறியோ அல்ல. இந்த மொழியில் உயிர்கள் உயர்வடையும் சரக்கு இருக்கின்றது, அது என்னோடு அழிந்து விடக் கூடாதே என்ற தன்னலமற்ற ஏக்கத்தின் வெளிப்பாடு.
அப்படி, என் தலைமுறையில், பொருளாதாரமும், தொழில்நுட்பமும், பொழுதுபோக்கும் மலிந்து கிடக்கும் இந்த 21-ம் நூற்றாண்டில் நாட்களை அசுர வேகத்தில் கடந்து கொண்டிருக்கும் காலத்தில், நான் தமிழுக்குச் செய்யக்கூடிய கடமை என்ன என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை, ஆனால் ஆர்வம் மீதூர்கிறது. கண்ணுக்கு முன் செய்ய வேண்டிய, செய்ய முடிந்த ஒரு பணி, என் அடுத்த தலைமுறையை தமிழை மறவாத, தமிழை நேசிக்கத் தெரிந்த, ஒரு தலைமுறையாக வளர்த்தெடுக்கும் பணியே அது.
கடந்த மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக நாம் காலனிய ஆதிக்கம், பிற மொழியினர் ஆதிக்கம் ஆகியவற்றால் மழுங்கச் சிரைக்கப்பட்டிருக்கிறோம். ஒரே இரவில் திருத்தக்கூடிய பிழை அல்ல இது. எனவே அடுத்த சில தலைமுறைகள் சரியான பாதையில் செல்ல என்னால் இயன்ற மீச்சிறு மடைமாற்றம் - இந்த வலைப்பூ எழுதுவதன் நோக்கமும் அதுவே. பெற்றோர்களாகிய நாம் செய்ய வேண்டிய பணிகளில் தலையாயது, நம் குழந்தைகளுக்குத் தமிழைச் சிந்தாமல், சிதறாமல் ஊட்ட வேண்டியது.
இதனை எப்படிச் செய்யலாம் என்பதனை, மூத்தோர் சிலரது கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு சிறு முயற்சியாக, தமிழர் தலைமுறை மீட்பு எனும் சிற்றிதழ் - மின்னூலாக:
Comments