top of page
Writer's pictureJohneh Shankar

உறக்கமும் கடமையும் - சிவராத்திரிச் சிந்தனை

சிவராத்திரி - இராவெல்லாம் கண் விழித்து இறையைச் சிந்தித்திருக்க ஒரு இராத்திரி. உறங்காமல் இருப்பதற்கும், விழித்திருப்பதற்கும் உண்டான வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள அமைந்ததே சிவராத்திரி என்பது எனது சமீபத்திய புரிதல். நான் இரவில் உறங்கவே செய்தேன். 10:45-க்கு உறங்கி, பின் 12 மணிக்கு எழுந்து, குழந்தைக்குச் சோறு ஊட்டிவிட்டு, 1 மணி வரை விளையாடி விட்டு, மீண்டும் ஒரு உறக்கம். விழித்திருக்கலாமா என்று எண்ணம் தான், ஆனால் ஏனோ வைராக்கியம் இல்லை. உறக்கம், காலை 7 மணி வரை நீடித்தது.


எழுந்த உடன் ஒரு பெரிய குற்ற உணர்ச்சி. அடடா, ஒரு சிவராத்திரிப் பொழுதை உறங்கிக் கழித்து விட்டோமே என்று. இங்கே no obligations. கடவுள் என்னை விழித்திரு என்று நிர்ப்பந்திக்கவில்லை, உறங்கி விட்டதால் என்னைத் தண்டிக்கப் போவதும் இல்லை. ஆனாலும் நஷ்டம் எனக்குத் தான். ஒரு புனிதமான இரவில், ஆரோக்கியமும், போதுமான பொருளும், நல்ல குடும்பமும், சஞ்சலமில்லா மனமும் இவை அனைத்தும் இருந்தும், இறைவனுக்காக உறக்கத்தைத் துறக்க மறுத்ததே என் உடலும், மனமும்!


உறங்காமல் இருப்பதற்கு, அந்நாட்களில் குடும்பத்தில் பெரியவர்கள் டெக் ((VCR) கேசட்டில் பக்திப் படங்களைப் போட்டுவிட்டு, குடும்பக்கதையும், ஊர்க்கதையும் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்நாட்களில் அது மிகவும் sophisticated ஆக வளர்ந்து, கேசட்டில் இருந்து கான்செர்ட்டாக(concert) உருமாறி, ஒரு மெகா பார்ட்டியாக மாறியிருக்கிறது. பக்திப் படங்கள், பக்திப் பாடல்களாக மாறியிருக்கிறது. அறிவியல் வளர்ச்சி, அறிவின் தளர்ச்சி.


இந்தச் சிவராத்திரியில், இரவு முழுதும் சிவாலயங்களில் தங்கி, திருவாசகமும் தேவாரமும் ஓதக் கேட்டு, கால பூசைகளைக் கண்ணுற்று வீடு திரும்பிய எளிய அடியவர்களுக்கு என் வணக்கங்கள். ஆனால், சிவராத்திரியை பெருங்கூட்டமும் பேரிரைச்சலுமாக "கொண்டாடுவது" எங்கிருந்து வந்த வழக்கமோ, அறிகிலேன். சிவனை Brand-ஆக வைத்து ஏதோ நல்ல வியாபாரம் நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.


சரி நம்ம விசயத்துக்கு வருவோம்:


விழித்திருப்பது வேறு, உறங்காமல் இருப்பது வேறு. உறங்காமல் இருக்க புறச்செயல்கள் அனைத்தும் உதவும். அது பக்திப் படமாகவும் இருக்கலாம், டிஸ்கோ பார்ட்டியாகவும் இருக்கலாம். உறங்காமல் இருப்பது நவீன மனிதர்களுக்குக் கடினமான ஒரு முயற்சி தேவையில்லை, அதற்கான ambience-ஐ உருவாக்க அனைத்து வழிகளும் இங்கே உண்டு. ஆனால் விழித்திருப்பது என்பது தனி மனிதனாக, அகத்தில் இயங்கிக் கொண்டிருப்பது.

நான் யார், எங்கிருந்து வந்தேன், எங்கே செல்கிறேன், என் கடமைகள் என்ன, என தன்னைத்தானே கேள்விகளால் செதுக்கிக் கொள்வது. அது எப்போதும் நடந்தாலும், இந்த சிவராத்திரிப் பொழுதில் புறச் செயல் மயக்கங்களுக்கு ஆளாகாமல், அகத்தில் தெளிவைத் தேட முயற்சிப்பதே இதன் உண்மையான நோக்கம் என்பது என் எண்ணம். இதற்காகத் தான் திருமுறைகளும், திருவாசகமும், திருக்குறளும், திருவருட்பாவும், திருப்பாவும் என ஒரு நிகரற்ற அனுபவக் களஞ்சியத்தை நமது முன்னோர்கள் படைத்திருக்கிறார்கள். இவற்றைச் சிந்திக்கவோ, ஓதவோ, கேட்கவோ செய்வது மட்டுமே இந்த நாளின் உன்னதமான, பயனாக இருக்கும்.


நான் தான் உறங்கி விட்டேனே, எதற்கு வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்கிறேன்? எல்லாம் ஒரு மன சாந்திக்குத் தான். அடுத்த சிவராத்திரிக்குள்ளாவது மனத்தைப் பக்குவப்படுத்தி, கடிவாளம் போட்டு, உடலை ஒழுங்கு செய்து உறக்கத்தை வெல்ல வேண்டும் என்பதற்குத் தான் இவ்வளவும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

8 மணி நேர உறக்கம் உடலுக்கு அவசியம் என அறிவியல் சொல்கிறது. உலகின் பெரும் சாதனையாளர்கள் 4 மணி நேரத்துக்கும் குறைவாகவே உறங்குகிறார்கள் என வரலாறும், செய்திகளும் சொல்கின்றன. இறைவனை அடைய, தூக்கத்தை முற்றிலுமாக வெல்ல வேண்டும் என வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை அனைவரும் சொல்கிறார்கள். எதை கேட்பது, எதை விடுவது? இந்தக் குழப்பம் தான் சிவராத்திரி அன்று எப்படியாவது உறங்காமல் இருக்க வேண்டும் என்ற போக்கில், எதை எதையோ செய்ய நம்மைத் தூண்டுகிறது.


  • 8 மணி நேர உறக்கம் - உலகியலில், யதார்த்தமான உழைப்பில் இருப்பவர்களுக்கு அவசியமே. இந்த நிலையில் இயங்கிக் கொண்டே,

  • 4 மணி நேர உறக்கம் - நமது குறிக்கோள்களை செம்மைப் படுத்திக் கொண்டு, வாழ்வியலை எளிமைப் படுத்தி, சாதனைகள் புரியவோ அல்லது பிறருக்குப் பயன்படுமாறு எதையாவது செய்யவோ, உறக்கத்தைக் குறைத்துக் கொண்டே வந்தால்

  • 1 மணி நேர உறக்கம் - என்பது வாழ்க்கையின் பிடிகளில் இருந்து நாம் ஒவ்வொரு வளையமாக வெளியேறும் போது சாத்தியமாகலாம்


இது தான் படிநிலை என்பது எனது புரிதல். உறக்கத்தை வெறுக்கக் கூடாது, அதே சமயம், அதனை நேசிக்கவும் கூடாது. இந்த நடுநிலையை அடைவதற்கான பயிற்சியாக சிவராத்திரியைச் சிந்தித்துப் பாருங்களேன். பல விசயங்கள் இதனால் மாறும். விருப்பு வெறுப்புக்களைக் கடக்க, ஒவ்வொரு வருடமும் ஒரு பெரும் சிவராத்திரி, பின் மாதத்திற்கு ஒரு சிவராத்திரி. Practice, Practice and Practice, to get there my friend.

ஆமா இதை யாருக்கு சொல்கிறேன், முதல்ல எனக்கு நானே சொல்லிக்கிறேன், படிக்கிறவங்களுக்கு இது சரின்னு பட்டா அவங்களுக்கும் சொல்வதாக நினைத்துக் கொள்கிறேன்.

வள்ளுவர் உறக்கத்தைப் பற்றி ஒரு குறளில் ஆழமாக வரைகிறார்: (தமிழர் வழிபாட்டு முறைகளும் வரலாறும் வள்ளுவத்தைத் தொடாமல் எங்கும் நகராது)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு


துறவறவியல் - துறவு நிலை பற்றிப் பேசும் போது இந்தக் குறளைச் சொல்கிறார். அதனால இது சாமியார்களுக்கு டோவ், நமக்கில்லை என்று புறந்தள்ளி விடக்கூடாது. எந்த மனிதரும், தன் வாழ்நாளில் இந்த நிலைக்கு வர முயற்சி செய்யலாம் என்பது கருத்து.


ஒரு சமூகத்தில் பல வகை மனிதர்களுக்கானதல்ல திருக்குறள், ஒரு வாழ்க்கையில் பல நிலைகளைக் கடக்கும் தனி மனிதனுக்கானது என்பதை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

இந்தக் குறளுக்கான விளக்கம்: மரணம் என்பது தூங்கறா மாதிரி, தூங்கி எழுந்துக்கற மாதிரிதான் இன்னொரு பிறப்பு பிறந்து வர்றது அப்படின்னு மேம்போக்கா சொல்லிடலாம். பரவால்லியே, ஈசியா இருக்கறது, அப்படின்னு நெனைச்சிராதீங்க. வள்ளுவர் குசும்புக்காரர், ஒண்ணே முக்கால் அடிக்குள்ள ஒரு கடல் ஆழத்தை சுருக்கி வெச்சிருப்பார். So, let's dive deeper.


இந்தக் குறளுக்கான விளக்கத்தை ஆராய இன்னொரு மேலை நாட்டு அறிஞரோட ஒரு தத்துவம் எனக்கு வழிகாட்டியாக இருந்தது.


I slept and dreamt that life was beauty; I woke and found that life was duty. - பைரன் கவி

அதாவது மக்களே, இந்த ஆங்கிலக் கவிஞன் என்ன சொல்றாருன்னா, "நான் தூங்கிக்கினே கனா கண்டேன், வாழ்க்கை எவ்வளோ அழகாக்கீதுன்னு , ஆனா முழிச்சிகினு பாத்தாதான் தெரியுது வாழ்க்கைங்கறது கடமைன்னு."


வள்ளுவர் பிறப்பு இறப்பை simplify செய்ய இந்தக் குறளை வைக்கவில்லை. மேற்சொன்ன பைரனின் கருத்தைத் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்னாக உறுதி செய்திருக்கிறார். அதாவது, உறக்கத்தை சாவுக்கு உதாரணமா சொல்லவில்லை, சாவைத் தான் உறக்கத்திற்கு உதாரணமா சொல்லிருக்கார்.


உறங்காதேடா, நீ செத்துக் கிடப்பதற்குச் சமம். விழித்துக் கொள், சீக்கிரம் பிறந்து வா, கடமைகள் காத்திருக்கின்றன என்பதே இந்தக் குறள் நமக்குச் சொல்ல வந்த சேதி, கனம் வாசகப் பெருமக்களே.


சிலர் இந்தக் குறளுக்கு, வள்ளுவர் செத்துக் கிடப்பதைப் போல் நன்றாக உறங்கு, (Deep sleep vs Dead Sleep) அதில் கிடைக்கும் புத்துணர்ச்சி உன்னை புதிதாகப் பிறந்தவனைப் போல் அடுத்த நாள் எழச்செய்யும் என்றும் எழுதுகிறார்கள். அதில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. இந்தக் குறள் நிலையாமை பற்றிய அதிகாரத்தில் வருகிறது. உடலுக்கும் உயிருக்குமான தொடர்பை வலியுறுத்தும் குறள்களுள் ஒன்று இந்தக் குறள். இதில் நல்ல உறக்கம் பற்றி பேசியிருப்பாராயின், திருவள்ளுவரை ஒரு therapist என சுருக்குவது போல் ஆகும்.




மேலும், துறவறவியலில் வரும் அதிகாரம் என்பதால், துறவு நிலைக்குப் பக்குவப்பட்ட ஒருவனின் கடமைகளை வலியுறுத்துவதை விடுத்து நல்லா தூங்குடா மவனே, அப்ப தான் நாளைக்கு மீட்டிங் நல்லா போகும் என்பதாக உலகியலில் இருப்பவனுக்கு ஆரோக்கியக் குறிப்பு எழுதுவது வள்ளுவரின் நோக்கமாக இருந்திராது.

எனவே மக்களே, அடுத்த சிவராத்திரிக்கு உறங்காமல் இருக்க செயல்படுவதை விடுத்து, விழித்திருக்க வழி காண்போம். நிறைய படிப்போம், நல்ல உண்மைகளைக் கேட்போம், உய்வு பெறுவோம். காலை வணக்கம்! திருச்சிற்றம்பலம்.


சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் சிவனிரவுச் சிந்தனைக் கருத்தரங்கம் - பார்க்க இங்கே சொடுக்கவும்











Comments


bottom of page