top of page
Writer's pictureJohneh Shankar

கல்லுக்கு எதுக்கு பாலும், சோறும்?

1993-இன் ஒரு காகிதக் குறிப்பில் இருந்து...


ஒரு சிறு மக்கள் கூட்டம், கப்பலில் புறப்பட்டது. கடல் நடுவே ஒரு மின்னல் தாக்கியதில் கப்பல் இரண்டாகப் பிளந்தது. நல்ல காலமாக, ஒரு சிறு தீவு அருகாமையில் இருந்தது, கப்பலின் உடைந்த பாகங்களில் மிதந்து கரை சேர்ந்தது அந்தக் கூட்டம்.


அந்தத் தீவோ மிகவும் வெறிச்சோடி, மனித நடமாட்டமே இன்றி இருந்தது.


அங்கே இருந்த ஒரு வினோதமான செடி இந்த மக்கள்கூட்டத்தின் கண்களைக் கவர்ந்தது, அதன் மணம் நாசியை ஈர்த்தது, அதன் பொன்னிற இலைகளில் ஏற்பட்ட மெல்லிய சலசலப்பு இசை போல அவர்கள் செவிகளை மயக்கியது. அதன் மலரின் மென்மை தீண்டத் தீண்ட இன்பமாக, மென்மையாக இருந்தது. அதன் கருமையான கனிகள் நாவில் பட்ட உடன் போதை அளித்தது. சற்று நேரத்தில் அந்தக் கூட்டத்தினர் அனைவரும் இந்த வினோத செடியின் அழகில் தொலைந்து, நினைவுகளை இழக்கத் தொடங்கினார்கள்.

தான் யார் என்பது மறந்தது, மொழி மறந்தது, எங்கிருந்து வந்தோம், எங்கே சென்று கொண்டிருந்தோம், அனைத்தும் மறந்தது. அந்தக் கூட்டமே கற்கால மனிதர்களைப் போல அலையத் தொடங்கியது. அக்கூட்டத்தில் வயதான ஒரு கிழவன், ஏற்கனவே பல முறை இந்தத் தீவைக் கடந்து சென்ற அநுபவம் இருந்ததாலும், அந்த செடியின் விநோதத் தன்மையைப் பற்றி கேள்வி அறிவு இருந்ததாலும் சற்றே கவனமாக அதன் அருகில் செல்வதைத் தவிர்த்து இங்கிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி என்று யோசித்தான். ஒரு சிறு மரக்கலம் ஒன்றை தயாரித்தால் அனைவரும் தப்பித்து விடலாம் என்று முடிவு செய்தான்.


அந்தோ, பிறர் தான் அனைத்தையும் மறந்துவிட்டிருந்தார்களே! இருந்தாலும் அவர்களுக்குள் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவ்வப்போது எட்டிப்பார்த்தது, அதனை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் மறந்து விட்டிருந்தது.

இவன், அவர்களுடன் மொழி பேசி ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்தான். எனவே சைகையில் தனது யோசனையைக் கூற முற்பட்டான். பிறகு, ஒரு சின்ன மூங்கில் குச்சியை உடைத்து, படகு போன்ற ஒரு பொம்மையைச் செய்தான், அது நம்மைக் காப்பாற்றும் என்பதை மிகைப் படுத்திக் காட்ட, அதன் மீது வெட்சி மலர்களை வைத்தான், அதனை தண்ணீரில் மிதக்க வைத்துக் காட்டினான், அதற்கு முன் நின்று ஆடினான், பாடினான்.


எல்லாரும் மிக வேகமாக மண்டையை ஆட்டினார்கள். அப்பாடா, இவர்களுக்குப் புரிந்து விட்டது என பெருமூச்சு விட்டான். பொழுது சாய்ந்தது.


அடுத்த நாள் காலை, சூரியன் உதித்ததும் அனைவரும் சுறுசுறுப்பாக எழுந்து இயங்கத் தொடங்கினார்கள். இவனுக்கு ஒரே மகிழ்ச்சி, நிச்சயம் இன்று அனைவரும் சேர்ந்து உழைத்தால் இந்தத் தீவில் இருந்து விரைவில் தப்பி விடலாம். பெரிய அளவிலான மூங்கில் கழிகள் கிடைக்கின்றனவா என பார்த்துவிட்டு வரலாம் என அந்தக் கூட்டத்தில் ஓரளவிற்குத் தெளிவாக இருந்த சிலரைக் கையோடு கூட்டிச் சென்றான். திரும்பி வந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி...



கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும், கையில் ஒரு கப்பல் பொம்மையைச் செய்து வைத்துக் கொண்டு, அதன் முன் ஆடுவதும், பாடுவதும், அதற்கு பூ வைத்து அலங்காரம் செய்வதும், அதற்காக ஒருவருக்கொருவர் சண்டை போடுவதுமாக இருந்தனர்.

தலையில் அடித்துக் கொண்டான் இவன், ஓரளவிற்குத் தெளிந்த சிலரை இவர்களோடு விட்டால் என்ன ஆவது என அவர்களைத் தனியாக அழைத்துப் போய், தானே பெரும்பாடு பட்டு ஒரு சிறு படகு ஒன்றை செய்து, முதலில் இவர்களோடு தப்பிப்போம், பின் வேறு உதவி அழைத்துக் கொண்டு வந்து இந்த மக்களை மீட்கலாம் என்று முடிவு செய்து, தீவில் இருந்து தப்பித்தான், வெகு சிலரோடு.


  • இந்தத் தீவு தான் நாம் வாழ வந்த வாழ்க்கை.

  • கப்பல் உடைந்து நாம் இங்கு வந்தது தான் வினைப்பயன்

  • அந்த வினோத செடியும் மலரும் தான், புலனின்பங்களும், செல்வ போகங்களும்

  • ஆரம்பத்திலேயே அதனைப் பற்றி சற்று அறிந்து, அதில் மயங்காத அந்தக் கிழவன் தான் ஞானி

  • ஓரளவிற்குத் தெளிந்தவர், மனிதருள் சிலர், ஞானியரை மதிப்பவர் (போலிச் சாமியார்கள் முன் கூழைக் கும்பிடு போடுபவர்கள் அல்ல)

  • அவர்கள் மறந்து போன மொழியே, நாம் மறந்து கொண்டிருக்கும் தமிழ் மொழி

  • அந்தக் கிழவன் செய்து காட்டிய கப்பல் பொம்மையே, கோயில்களும், சடங்குகளும் (விளக்கங்கள் கீழே)

  • அதைப் பார்த்து எல்லாரும் சேர்ந்து கப்பல் உருவாக்க வேண்டும் என புரிந்து கொள்ளாமல், தனித்தனியே கப்பல் பொம்மைகள் உருவாக்கி, அவற்றிற்கு உரிமை கொண்டாடி, சண்டையிட்டுக் கொண்டிருந்தது தான், தற்போது புதிது புதிதாக முளைத்து வரும் கோயில்களும், விநோத பரிகாரங்களும், மக்களின் அறியாமையும் ஆகும்.


கோயில்கள் என்பது, குறிப்பாக ஆகம விதிப்படி கட்டிய கோயில்களாவன, ஆதாரக் கல்வி. புராணங்களும், அக்கோயில் வரலாற்றை ஒட்டி நிலவி வரும் கதைகளும் எல்லாம் குறியீடுகளாக, சில கருத்துக்களை தலைமுறைகளுக்குக் கடத்தும் முறை. உடல் எப்படி இயங்குகிறது, உடலில் உள்ள நமது யோக சக்தி எப்படி ஏற வேண்டும், முதுகெலும்பு வாயிலாக அது எழும்பும் விதம், இதெல்லாம் தான் கொடிமரம், பலி பீடம், கருவறை, உள்ளே இருக்கும் ஜோதி எல்லாம். (இதனைப் பற்றி மேலும் விரிவாக வரும் நாட்களில் எழுதுகிறேன்.)

கோயில்களை கல்லால் எழுப்பியது வெறுமனே பேரும் புகழும் சம்பாதிப்பதற்கோ, அவை அழியாமல் நமது மதப்பெருமையை பறை சாற்ற வேண்டும் என்பதற்காக அல்ல, இதுவே போதும், இதற்கு மேலும் வரும் தலைமுறையினர் வேறு ஒன்றைப் புதிதாகச் செய்து இந்த விசயத்தில் பணத்தையும், காலத்தையும், உழைப்பையும் வீணாக்க வேண்டாம் என்பதற்காகவே.

கோயில்களின் அடிப்படை நோக்கம், அதில் நடைபெறும் சடங்குகளின் உட்பொருள், இவை அனைத்தும் ஒரு குறியீடாக இருந்தால் தலைமுறைகளுக்குக் கடத்துவது பழக்க வழக்கங்களில் பதிவாகி எளிதாகும், வெறுமனே ஏட்டுக் கல்வியாக இருந்தால் ஓரிரு தலைமுறைகளில் அவை காணாமல் போயிருக்கும். மேலும், ஏடுகளிலும் இவற்றிற்கான விளக்கங்களும், தெளிவுகளும் நமக்கு ஓரளவிற்குக் கிடைக்கின்றன, படித்துத் தெளியவோ, தெளிந்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளவோ நமக்குத் தான் நேரமும் காலமும் இல்லை.


உதாரணமாக,

அன்னாபிடேகம் என்று ஒரு பூசை உண்டு, சிவன் கோயில்களில். சாதத்தை வடித்து இறைவன் திருமேனியில் அபிடேகம் செய்வார்கள். செய்பவருக்கும் அதன் உட்பொருள் தெரியாது, அதற்கு அன்னம் அளித்தவரும் பெருமைக்காகவோ, புண்ணியத்திற்காகவோ செய்திருப்பார். நாத்திகருக்கு இது முட்டாள் தனமாக தெரிவதில் வியப்பேதும் இல்லை.



அன்னம், அல்லது சோறு என்பது பக்குவத்தைக் குறிக்கும், ஞானம் என்பதற்கும் அன்னம் என்று ஒரு பொருள் தொடர்பு உண்டு. இறைவனை நமக்கிருக்கும் ஞானத்தால் வழிபடவேண்டும், அர்ச்சிக்க வேண்டும், என்பது உட்பொருள். அந்த நிலைக்கு வராதவர்களுக்கு செய்து காட்டப்படும் ஆதாரக் கல்வி அன்னாபிடேகம். அதற்கு ஒரு உருண்டைச் சோறு போதுமானது. ஆனால் என்ன நிகழ்கிறது?

தெருவுக்குத் தெரு ஒரு தனியார் கோயில், அங்கெல்லாம் பணக்காரர்களின் புண்ணிய வேட்டைக்காக சோறு அண்டா அண்டாவாக வடித்து சிலைகளின் மீது கவிழ்க்கப் படுகிறது. சர்வ நிச்சயமாக இதில் பாவமே வந்து சேரும். ஆன்மாவிற்கு ஒரு பயனும் இல்லை.

இந்த விசயங்கள் முட்டாள்தனம் என்று ஒரேயடியாக விலக்கிக் கொண்டே போவதில் பயன் ஒன்றும் இராது. இதில் ஒரு அறிவுப் புரட்சி செய்து, மறைந்திருக்கும், அல்லது மறைக்கப்பட்டிருக்கும் தத்துவ உண்மைகள் பொது மக்களுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும், அதுவே பகுத்தறிவு. சடங்குகளில் உழைப்பையும், நேரத்தையும் செலவிடுவதைத் தவிர்த்து, மக்கள் ஒருவருக்கொருவர் அன்பு செய்து அறம் பழக, நாம் மெய்ப்பொருட்கல்வியை பொதுவாக்க வேண்டும். அதற்கான நூல்கள், பாடத்திட்டம்(Syllabus) எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருவள்ளுவர், திருமூலர், காரைக்கால் அம்மை தொடங்கி, கடந்த நூற்றாண்டில் வள்ளலார், பாம்பன் சுவாமிகள் வரை அனைவரும் செய்து தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.

நாம் செய்ய வேண்டிய கடமை, மெய்ப்பொருட்கல்வியின் மீது மதச்சாயம் பூசப்படாமல் காத்து, அதனை பாட்டாளிக்கும், முதலாளிக்கும் சமமாக கொண்டு செல்ல ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே. We need a philosophical renaissance and time has never been perfect than now.


ஒவ்வொரு காலத்திலும், ஆதாரக் கல்வி தேவைப்படும் மக்களும் இருப்பார்கள், தெளிவடைந்து உயரும் மக்களும் இருப்பார்கள். மனிதர்களுள் ஒரு தலைமுறை கல்லூரியில் படிக்கும் போது, இன்னொரு தலைமுறை பால்வாடியில் பொம்மைகளை வைத்து அடிப்படைக் கல்வி பயில்வது போல. சடங்குகள் தேவை, ஆனால் அவற்றைப் பற்றிய சரியான புரிதல், சுரண்டலுக்கு வழியில்லாத தெளிவு மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். சம்பிரதாயங்கள் அவசியம், ஆனால் அவை ஏற்றத்தாழ்வுகளுக்கோ, பிரிவினைக்கோ, வழியில்லாமல் செய்ய கல்வியில் நாம் தத்துவத்தைக் கொண்டு வர வேண்டும்.


ஒட்டுமொத்த மனித இனத்தின் அறிவு வளர்ச்சியை அளவுகோலாகக் கொண்டு ஒரு தனிமனிதனின் அறிவு வளர்ச்சியையோ, ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சியையோ அளத்தல் கூடாது. இரண்டிற்கும் நடுவே இடைவெளி எப்போதும் இருக்கும், அதனை இணைக்கவே கல்வி அமைப்பு தேவைப்படுகிறது. ஆனால் கல்வி அமைப்பில் மெய்ப்பொருளியலும், தத்துவமும் சேர்க்கப்பட வேண்டும். அப்போது தான் சமூகத்தில் உள்ள முட்டாள்தனங்களை வேரறுக்க முடியும்.


இந்தப் பதிவை எழுத எனக்குள் நின்று இயங்கியருளிய தில்லைப் பெருமானுக்கும், தெய்வத்திரு தேமொழியார் சுவாமிகளுக்கும், சித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவர், பேராசிரியர் நல்லூர் சா. சரவணன் அவர்களுக்கும், இவர்களோடு என்னை இணைத்த பிரபஞ்சத்தின் அனைத்து சத்திகளுக்கும், என்றும் நன்றியுடன் பணிந்தவனாவேன்.



Comments


bottom of page