top of page
Writer's pictureJohneh Shankar

அகம் குளிரும் கோடை



நான் பள்ளியில் படித்த நாட்களில் கோடை விடுமுறை என்பது திலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள காரியாண்டி எனும் கிராமத்தின் புழுதிக் காடுகளிலும், எல்லைக் கோவிலிலும், மதில் சுவர் இடிந்த அரசுப் பள்ளி மைதானத்திலும் சுற்றித் திரிந்த சுதந்திர நாட்களால் நிறைந்திருந்தது.


வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின் கோடை விடுமுறை என்ற ஒன்று அலுவலகங்களில் கடைபிடிக்கப்படாத காரணத்தால் கொளுத்தும் வெயிலிலும் அந்த ஏசி அறையில் மனம் புழுங்கி அவிய வேலை பார்க்க நேரிட்டது. அந்த நாட்களில் எல்லாம் எங்கள் வீட்டைச் சுற்றி இருந்த வாண்டுகள் எல்லாம் "உங்களுக்கு ஆபிஸ் லீவு இல்லையா, எங்களுக்கு ஸ்கூல் லீவு, இன்னும் 2 மாசம்" என்று என்னை வெறுப்பேத்த, மிகச்சரியாக அவர்களுக்கு பள்ளிக்கூடம் திறக்கும் அன்று, ஆபிஸ் லீவ் போட்டு, "என்னடா, ஸ்கூல் திறந்தாச்சா? எனக்கு இன்னிக்கி ஆபீஸ் லீவு... போயிட்டு வாங்க"-என்று பழி வாங்கும் வரை மனசு ஆறாது.


வேலையை விட்டுவிட்டு freelance வாழ்க்கை தொடங்கிய பிறகு பர்சும் வங்கிக் கணக்கும் திண்டாட்டமாக இருந்தாலும், வாழ்க்கை கொண்டாட்டமாக இருந்தது. கோடை முதல் வாடை வரை அனைத்தும் விடுமுறையாகவே இருக்கும். ஆனால் இப்போது அந்த பழிவாங்கும் சுவாரசியம் மிஸ்ஸிங். சில சமயம் பசங்க ஸ்கூலுக்குப் போவதைப் பார்த்து ஏக்கமாக இருந்ததும் உண்டு.


பள்ளிப் பருவத்தில் அறிவுக்கும் அறியாமைக்கும் தொடர்ந்து ஒரு உராய்வு இயக்கம் friction இருந்து கொண்டே இருக்கும். மாசச்சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்து விட்டால் அது கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கி, நம்மை சராசரி மனிதனாக, இந்தப் பொருளாதாரக் குப்பை மேட்டில் ஏறியும் இறங்கியும் காற்றில் அலைந்து திரியும் ஒரு வண்ணக் காகிதமாக மாற்றி விடும்.


வளர்ந்து விட்டோம் என்ற எண்ணமே நம் வளர்ந்ததில் பாதியை வெட்டித் தள்ளிவிடும், மீண்டும் நாம் வளர்வதைப் பற்றி யோசிக்கவும் மாட்டோம்.


சரி, விசயத்துக்கு வருவோம். இத்தனை ஆண்டுகளில், இந்த ஆண்டு கோடை விடுமுறை என் அகம் குளிர அமைந்த கதையைச் சொல்கிறேன். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, டிவி, ஊடகம், விளம்பரம், சினிமா, இணையம் இவற்றிலெல்லாம் ஒரு வித சலிப்பு ஏற்பட்டு, அமைதியாக, நிம்மதியாக 90-களில் வாழ்ந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஒரு எண்ணம் மேலிட்டது. அதன் விளைவாக பெருந்தொற்றுக் காலத்தின் சூழல் எங்களை கிராமத்திற்கு அழைத்து வந்தது. இங்கே என் மனைவியுடன் புதிதாக தொடங்கிய வாழ்க்கையில் சில கொள்கைகளை வகுத்துக் கொண்டோம்.




அதில் தலையாயது, வீட்டில் டிவி இருக்கக்கூடாது என்பது. ஊரின் மொத்தக் கழிவுகளும் சாக்கடையாக ஆற்றிலோ கடலிலோ கொட்டும் இடத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களின் கற்பனை வக்கிரங்களும், பொருளாதாரக் குப்பைகளும், தேவையே இல்லாத எண்ணங்களும் கலந்த சாக்கடையை எம் வீட்டிற்குள் dump செய்யும் ஒரு குழாய் வாயாகவே கண்ணில் பட்டது இந்த டிவி. எனவே டிவி இல்லாமல் வாழத் தீர்மானித்தோம்.


இதனால் எங்கள் வாழ்வில் நிகழ்ந்த நல்ல மாற்றங்கள்:


  1. வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது "வந்துட்டா சண்டாளி" "இவன் நல்லாவே இருக்க மாட்டான்" "அவனைக் கொல்லாம விடமாட்டேன்" போன்ற இனிய சொற்கள் எங்கள் வீட்டில் கேட்பதே இல்லை. வந்த விருந்தினர்களோடு தடையின்றி உரையாட . எந்தத் தொந்தரவும், கவனச் சிதறலும் இல்லை.

  2. காலை, மாலை வழிபாடு என்பது என் வாழ்வில் என்றுமே இல்லாத அளவுக்கு டிவி இல்லாத வாழ்க்கையில் சாத்தியமாகிறது. 60 நிமிடங்கள் வெப் சீரீஸ் பார்க்கவோ, இரண்டரை மணி நேரம் சினிமா பார்க்கவோ சலியாத மனம், 5 நிமிடங்கள் இறைவழிபாட்டில் லயிக்க பாடு படும். டிவி இல்லாததால், குறைந்தது 45 நிமிடங்கள், இறை வழிபாட்டுக்கு செலவிட வாழ்வில் நேரம் எப்போதுமே இருந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.

  3. எப்போதும் எண்ணங்கள் சிதறாமல், மனம் பதறாமல், இயல்பாக, தண்ணீரின் போக்கைப் போல நாட்கள் மிக எதார்த்தமாக நகரத் தொடங்கியது. குறிப்பாக breaking-news என்ற வார்த்தை எங்கள் subconscious memory power-ஐ விட்டே மறைந்து விட்டது.

சரி இதுக்கும் கோடை விடுமுறைக்கும் என்னப்பா சம்பந்தம்? வருகிறேன். இந்தக் கோடை விடுமுறைக்கு அண்ணனுடைய மக்கள் 7 வயது மகள், 8 வயது மகன் - வீட்டிற்கு வந்திருந்தார்கள். 15 நாட்களாக டிவி இல்லாமல் குழந்தைகளோடு விடுமுறையைக் கழிப்பது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கிறது.


விடுமுறை என்றாலே அன்றாட (routine) வழக்கு என்பதில்லாத நாட்கள். ஓரளவிற்கு வளர்ந்த பிறகு, தாத்தா வீடு, எங்கள் வீடு என டிவி ஒவ்வொரு வீடாக முளைத்திருந்த நாட்களில் தான் எங்களது otherwise chaotic நாட்கள் ஏதோ ஒரு order - க்கு வரத் தொடங்கியது.

  • காலை 10 மணி தொடங்கி 1130 கார்ட்டுன் நெட்வொர்க் சேனலில் என்னென்ன நிகழ்ச்சி என்பதை மனப்பாடம் செய்யத் தொடங்கியிருந்தோம்.

  • பின் 1130 முதல் 0130 வரை அலைகள், சொந்தம், சொர்க்கம் என நாடகங்கள்,

  • 0230 மணிக்கு மேல் நகைச்சுவை திங்கள் > காதல் செவ்வாய் > காவிய புதன் > அதிரடி வியாழன் > சூப்பர் ஹிட் வெள்ளி

  • 0600 மணிக்கு மைடியர் பூதம் தொடங்கி 0900 மணி வரை நாடகங்கள் என...

பொது முடக்கம் தொடங்கியது கொரோனா காலத்தில் அல்ல, அதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே என்பது புரிய பல வருடங்கள் ஆகி விட்டது.


வெயிலை வெறுக்க ஆரம்பித்தோம், பேன் காற்றில் டிவி முன் முடங்கிக் கிடக்கத் தொடங்கினோம். இதெல்லாம் நல்லதொரு nostalgia-வாகவும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றது தான் சாபக்கேடு.

நாம் இதனால் என்ன இழந்திருக்கிறோம் என்பதை சிந்திக்கவும் தோன்றுவதில்லை நமக்கு. வாழ்க்கையின் சாரமாகிய அன்பு, அறம் இரண்டையும் தனி மனிதர்களாகவும், சமூகமாகவும் மறந்து விட்டிருக்கிறோம். டிவி, சினிமா இவற்றால் எல்லாம் நன்மையே இல்லையா? ரொம்ப pessimistic-ஆக இருக்கிறதே என்று கேட்கலாம். நான் புரிந்து கொண்ட வரை, டிவியும் சினிமாவும் சமூகத்திற்கு செய்த பல சீர்கேடுகளோடு ஒப்பிடும் போது, அவை மெனக்கெட்டு செய்யும் சில சிறு நன்மைகள் hardly remarkable.


சரி, அது வேறு தலைப்பில் பார்ப்போம்.


இந்தப் பிள்ளைகள் விடுமுறைக்கு முதன் முதலாக எங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். சித்தப்பா என்ற முறையில், என் மீது இருவருக்குமே அன்பு உண்டு. ஆனால் டிவி இல்லாத வீட்டில் குழந்தைகள் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார்கள்? இது என்னைப் பார்த்து சிலர் கேட்ட கேள்வி. அதற்கான பதிலாக இந்த special report.


  1. இன்றோடு 15 நாட்கள் ஆகி விட்டது. குழந்தைகள் டிவியையோ அன்றாடம் பார்த்து மனதில் ஊறிப் போன கார்ட்டூன் பாத்திரங்களையோ மறந்தும் நினைக்கவில்லை.

  2. காலை மாலை விளக்கேற்றி திருப்புகழ், தேவாரம், திருவாசகம் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள், முழு ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும்.

  3. கார்ட்டூன் வசனங்களும், சினிமா பாடல்களும், விளம்பர ஸ்லோகன்-களும் என அர்த்தம் தெரியாமல் பேசுவது நின்று இப்போது திருப்புகழ் வரிகளும், தமிழ்ச் செய்யுள் வரிகளும் நாவில் தங்கி விட்டது.

  4. கந்தர் கலி வெண்பா மனனம் செய்யத் தொடங்கி 3 பத்திகள் மனப்பாடம் செய்திருக்கிறார்கள். மொத்தம் 61 பத்திகள்.

  5. ஓரிரு நாட்களில் செஸ் விளையாடக் கற்றுக் கொண்டு விட்டார்கள். டிவி இருக்கும் வீடுகளிலும் செஸ் விளையாடும் குழந்தைகள் இருக்கலாம், விதி விலக்கு. மனம் அலைபாயாமல், பொறுமையாக, செஸ் கற்றுக் கொள்வதற்கு டிவி மிகப்பெரிய தடை.

  6. தினமும் அவ்வப்போது, நல்ல விசயங்களைப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்கிறார்கள். நடைமுறைப் படுத்தவும் செய்கிறார்கள். டிவி குறுக்கே இருந்தால், என்ன அறிவுரை சொன்னாலும் அரை மணி நேரத்தில் மறந்து விடுவது உறுதி.

  7. இருவர் சேர்ந்து ஒரு பெட்டியைப் பார்த்து மெய்மறந்து உட்கார்ந்திருக்காமல் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள்.

  8. புத்தகங்களைக் கையில் எடுத்துப் படிக்க நினைக்கிறார்கள்.

  9. மண் பானை சொப்புச் சாமானில் சமையல் செய்வது தொடங்கி, மண்ணில் வீடு கட்டுவது, சிரட்டையில் கேக் செய்வது, செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, வெயிலில் விளையாடுவது என...

90-களில் டிவியின் வரவால் நான் இழந்த ஒரு எதார்த்தமான, இயல்பான குழந்தைப் பருவத்தை இவர்களோடு மீண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வெளியே வெயில் கொளுத்தினாலும், உள்ளே மனம் குளிர்ந்திருக்கிறது.

பாடம்: குழந்தைகளுக்கு டிவியோ செல்போனோ தேவைப்படுவதில்லை. அவர்களை சமாளிக்கவோ, நல்ல முறையில் வளர்க்கும் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவோ பெற்றோர்களாகிய நமக்குத்தான் தேவைப்படுகிறது.


எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் கேரளாவில் இருக்கும் படியால், பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. எனவே தமிழ் எழுத்துகளும், எண்களும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பேறு கிடைத்திருக்கிறது. 4 வாரங்களில் அவர்களை வாசிக்க வைத்துவிட்டால், என்னிடம் இருக்கும் புத்தகக் குவியல் அவர்களுக்குப் புதையலாகத் தெரிந்து விடும். அதுவே எமது குறிக்கோள்.


உங்கள் வீட்டில் கோடை விடுமுறை எப்படிச் செல்கிறது? கருத்தைத் தெரிவிக்கலாமே!

9 views0 comments

Comments


bottom of page