தமிழ் மொழி ஒரு வணிக மொழியாகவோ, உலகளாவிய மொழியாகவோ இல்லை என்பதில் தான் வெளிநாட்டு மொழி மோகம் வேரூன்றுகிறது. தமிழ் மொழி மனிதத்திற்கு அளிக்கும் பயன் உலகியல் கவர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பது தமிழ் மக்களுக்கு புரிந்து விட்டால், அதன் அருமையை கொண்டாடத் துவங்குவார்கள்.
விமானம் சாலையில் செல்வதில்லை என்பதால் அது ஒரு மாட்டு வண்டியை விடத் தாழ்ந்தது என்று சொல்வதற்கில்லை. அது போன்ற வேடிக்கைதான் தமிழை உலக மொழிகளோடு ஒப்பிட்டுத் தாழ்த்திக் கொள்வது.
தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று உலகம் அங்கீகரிப்பது இருக்கட்டும், தமிழ் மொழியின் மீதான நமது உரிமை நம்மவர்களால் மனதார அங்கீகரிக்கப்படுவது எப்போது? தமிழை தாய்மொழியாகக் கொண்டு தமிழ்வழிக் கல்வி பயின்று கலைத் துறையிலும் அறிவியல் துறையிலும் சாதித்த அறிஞர் பலருண்டு. அவர்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
தமிழின் உண்மையான நோக்கம், ஒரு வணிக மொழியாவதோ, உலகளாவிய ஒரு எளிய மொழியாகவோ இருக்க வேண்டும் என்பதல்ல. அதற்குத் தான் ஆங்கிலம் இருக்கிறதே? எளிய வணிக மொழியாக இருப்பதற்கு தனிச் செம்மொழி தேவையில்லை. பல மொழிகளிடம் இருந்து கடன்வாங்கி, எளிமைப்படுத்தப் பட்ட ஒரு மொழி போதும். அதுவே ஆங்கிலம்; இது எந்த வகையிலும் ஆங்கிலத்தைச் சிறுமைப்படுத்துவதாக கருதி விடக்கூடாது. மாட்டு வண்டியின் பயன் ஒன்று, விமானத்தின் பயன் ஒன்று. மாட்டு வண்டியின் கட்டமைப்பு எளிமையானது, எவராலும் சில நொடிகளில் புரிந்து கொள்ளத்தக்கது, விமானத்தின் கட்டமைப்பு நுணுக்கமானதும், பிரம்மாண்டமானதும், அதனை முழுமையாகப் புரிந்து கொள்ள வாழ்க்கையின் பாதி ஆனாலும் மிகையில்லை. இங்கே இந்த உவமையை நான் கூறுவதன் அடிப்படை, தமிழ் விமானம் போன்றது, பிற மொழிகள் மாட்டு வண்டி போன்றது என்று மேம்போக்காக புரிந்து கொள்ளக்கூடாது.
மாட்டு வண்டியும், விமானமும் அதன் பயனாளர்களுக்கு பயனை நிறைவு செய்யும் வகையில் சமமானவையே. ஆனால் அவற்றின் தொழில்நுட்பச் செறிவின் அடிப்படையில் விமானம் பெரியது, மாட்டு வண்டி எளியது. அவ்வளவே.
இந்த அடிப்படையில், தமிழ் தனது தத்துவச் செறிவினாலும், மெய்யறிவு குறித்த புரிதல்களினாலும் விமானம் போன்று மிகவும் நுட்பமானதாகவும், புரிந்துகொள்ளக் கடினமானதாகவும் இருக்கிறது. ஆங்கிலம் மட்டுமல்ல, பிற உயர்தனிச் செம்மொழிகளைக் காட்டிலும் தமிழ் மிக ஆழமானதொரு தத்துவக் கடல் என்பதை பன்மொழி பயின்ற வித்தகச் சான்றோர் மறுப்பதில்லை.
பயன்பாட்டு அடிப்படையில் தமிழும் பிறமொழியும்
இப்போது பயன்பாட்டு அடிப்படையிலான ஒப்புமையைப் பார்ப்போம். மாட்டு வண்டியில் ஏறி இரண்டு கிலோமீட்டர் தூரம் சாவகாசமாக சென்று வரலாம். அதே தூரத்தைக் கடக்க விமானத்தை யாரும் பயன்படுத்துவது நகைத்தலுக்கு உரியது. ஆங்கிலத்தை உலகியல் வணிகத்திற்கும், எளிமையான தொடர்புக்கும் பயன்படுத்துகிறோம். இதே பயன்பாட்டிற்கு தமிழ் மொழி தேவை இல்லை.
பணம் படைத்தவர்கள் விமானத்தில் ஏறி சொகுசாகச் செல்லலாம், ஆனால் அவர்களுக்கு விமானம் பற்றிய விஞ்ஞானமோ, இயக்க விதிகளோ தெரிய வேண்டிய அவசியம் இல்லை. போலவே, பல பிறவிகளின் நற்றவப் பயனைப் பணமாக கொடுத்து தமிழ் கூறும் நல்லுலகில் பிறந்து, தமிழ் பேசி வாழ்கிறோம் நாம். விமானத்தைப் பற்றி அறிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று வெறுமனே வாழ்ந்து மறைந்து போகிறோம், பயணிகளாக.
2000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு நகருக்கு மாட்டு வண்டியில் செல்ல பல வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் விமானத்திலோ ஒரே நாளில் சென்று விடலாம். மெய்யறிவு குறித்த புரிதல்களைப் பெற மாட்டு வண்டியில் உலகைச் சுற்றுவது போன்ற திட்டம் பிற மொழிகளைப் பயன்படுத்துவது, விமானத்தில் செல்வது போன்றது தமிழைப் பிழையறப் பயின்று தமிழ் கூறும் நன்னெறிகளின் படி வாழ்வது. இது வெறுமனே தமிழை மிகைப் படுத்துவதாகக்கொள்ளலாகாது.
உயிர் எழுத்து, மெய் எழுத்து என்று எழுத்துகளை வகை பிரிப்பதில் தொடங்குகிறது தமிழின் தத்துவ பால பாடம். உயிரும் மெய்யும் கலந்து உயிர்மெய் எழுத்து இயக்கம் பெறுகிறது, உயிர் இன்றி மெய் எந்தப் பொருளும் தராது, மெய்யோடு கலந்து இயங்கும் ஆனால் உயிர் கண்ணுக்குத் தெரியாது. இது போன்ற Elementary level தத்துவச் செறிவு உலகில் வேறு எந்த மொழிக்கும் கிடையாது.
சொல்லும் பொருளும் வாழ்வியலோடு ஒன்றி அமைக்கப்பட்ட இலக்கணமும் கொண்ட மொழி தமிழ் என்பதை மறுக்க முடியாது.
பிற மொழிகளில் பல பிறவிகளாய் நம் உயிரின் மெய்யறிவுத் தேடலின் இறுதியாய் தமிழ் பேசும் உலகில் பிறந்து, வாழ்வது நமக்குக் கிடைத்த வரம் என்றாலும் அது மிகையாகா.
தமிழ் மொழியை அதன் உண்மைப் பயனை அறிந்து பயின்றால், சமத்துவம் மனிதர்களிடம் மட்டுமல்ல, அவர்தம் மொழிகள் மீதும், பிற உயிர்கள் மீதும் கூட படர்ந்து உலகை செம்மைப் படுத்தும் என்பது திண்ணம்.
Comentarios