முதலில், ஆறு முகமும், ஆறு படை வீடும், ஆறு ஆதாரங்கள் எனும் குருநாதர் கிருபானந்த வாரியார் அவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் சிந்திக்க முயன்றேன்.
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! - ஆக்ஞை - புருவ மத்தி
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! - விசுக்தி - தொண்டை
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! - அநாகதம் - நடு நெஞ்சு
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! - மணிப்பூரகம் - தொப்புள்
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! - - சுவாதிட்டானம் - தொப்புளின் கீழே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! - மூலாதாரம் - முதுகுத் தண்டு முடியும் இடம்
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
ஆனால் இப்படி கருதும் போது முழுமையாக பொருள் கிடைத்த திருப்தி ஏற்படவில்லை. இப்படியும் இருக்கலாம், அடியேன் அறியாமையின் மொத்த உருவம் ஆதலின், இது பற்றிய தெளிவான சிந்தனை என்னுடையது எனத் துணியேன். எனினும், என் சிந்தனையில் தோன்றிய இன்னொரு பார்வை சற்று திருப்திகரமாக இருந்தது...
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! - குழந்தைப் பருவம்
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! - தந்தைக்கு தோள் கொடுத்து வாழ்வை கற்றுக் கொள்ளும் இளமைப்பருவம்
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! - பொருள் சேர்க்கவும், கரவாது இடவும் நல்லோர், அறவோர், எளியோர் துயர் தீர உழைக்கும் பருவம்.
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! - ஞானத்தை வேண்டி பயணம் தொடங்கும் பருவம், அஞ்ஞானத்தை உணரத்தொடங்கும் பருவம்
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! - தன்னில் மாறான அகந்தை, ஆணவம், அறியாமை சூரர்களை ஒழிக்கும் பருவம்
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! - இல்லறம் புகுந்து இல்லாளொடு இன்பம் எய்தி, இல்லை என்று சொல்லாமல் அறம் புரியும் பருவம்
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! - இவ்வனைத்தையும் ஒரு வாழ்க்கையில் செய்தால், ஆறுமுகமாகிய இறை எனும் பொருள், அருளப்படும்.
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
இந்த விளக்கம், என்னளவில், எனக்கு புதுமையாகவும் திருப்தியாகவும் இருந்தது. இது சரியோ, தவறோ, பெரும் பிழையோ - ஆறுமுகனடியார்கள் ஏற்றியோ, மன்னித்தோ அருள வேண்டும்.
நன்றி
Comments