ஒரு நாள் என்பது என்ன
ஒரு நாள் என்பது வெறும் 24 மணி நேரங்கள் மட்டுமல்ல
ஒரு நாள் என்பது வெறும் இரவும் பகலும் மட்டுமல்ல
ஒரு நாள் என்பது கிழிந்து போகும் நாட்காட்டியின் தாள் அல்ல
ஒரு நாள் என்பது நேற்றுக்கும் நாளைக்கும் நடுவே பிழைத்திருக்கும் நிகழ்காலம் மட்டுமல்ல
ஒரு நாள் என்பது விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடையே தோன்றும் காட்சி மட்டுமல்ல
----
ஒரு நாள் - அது உனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு
ஒரு நாள் - அது உன்னை ஏற்றி விடும் நெடிய ஏணியின் ஒரு படி
ஒரு நாள் - அது உன் எதிர்காலத்தின் திறவு கோல்
ஒரு நாள் - அது உன்னை செதுக்க வந்த உளி
ஒரு நாள் - அது நீ பிறருக்குப் பயன்பட ஒரு கலம்
ஒரு நாள் - அது உன் முயற்சிகளின் ஆட்டமேடை
ஒரு நாள் - அதுவே உன் விடுதலைக்கான தோற்றுவாய்
ஒரு நாளில் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை - ஆனால் மாறிக்கொண்டிருக்கும் எல்லாமே ஏதோ ஒரு நாளில் தான் மாறத் தொடங்கியிருக்கும்
ஒரு நாளில் ஒன்றும் கெட்டுப் போய்விடுவதில்லை - ஆனால் கெட்டுப் போன எல்லாமும் ஏதோ ஒரு நாளின் மயக்கத்தில் தான் கெடத் தொடங்கியிருக்கும்
ஒரே நாளில் நீ உயர்ந்து விடுவாயா? எனக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளையும் நேசித்து இரசித்து மதித்து வாழத் தொடங்குவாயானால், நிச்சயம் ஒரு நாள் நீ உயர்ந்து விடுவாய். எனக்கு உறுதியாய்த் தெரியும்.
ஒரு நாளை கடந்து செல்ல நீ முயற்சிக்கிறாயா? பொழுதுபோக்கிப் புறக்கணிக்கிறாயா? ஆபத்து, விழித்துக் கொள்.
ஒரு நாள் உன் கையில் சிக்காமல் பறந்து செல்லும் அளவுக்கு உழைக்கத் தொடங்கு.
நீளத்துயில் கொள்ளும் நேரம் நிம்மதியாய்ச் சாயலாம்!
Comments