அனைவருக்கும் உலக தாய்மொழி தின வாழ்த்துகள். இந்த உலகில் 6000-க்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக தகவல். 800 கோடிக்கும் மேலாக பல்கிப் பெருகிப் பரவிக் கிடக்கும் மனித இனத்தின் பல லட்சம் ஆண்டுகளின் மன முதிர்ச்சியின் விளைவாக தாய்மொழிகள் இருக்கின்றன.
மொழி என்பது பிறருடன் கருத்தைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே என்று நாம் குறுகச் சிந்திக்கலாகாது. மொழி, மனம் எனும் அருவப் பொருளின் செயலோடு, மூளை எனும் உருவப் பொருளை இணைத்து, கண், வாய், செவி எனும் கருவிகளின் வாயிலாக உலகோடு ஒரு உயிரை இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. மனித இனத்தின் எல்லையில்லா அறிவுத் தேடலின் தொடர்நிகழ் பதிவாக மொழி நம்மோடு பயணிக்கிறது.
தனி மனித அறிவுத் தேடலுக்கு துணை செய்யும் தாய்மொழிக்கு, பல தலைமுறைகளில், பல தனி மனிதர்கள் அறிவையும் அனுபவங்களையும் கொண்டு சேர்த்துத் துணை செய்திருக்கிறார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.
தாய்மொழி என்பது சற்றே உயர்ந்ததாகக் கருதப்பட வேண்டியது. அதனால் பிற மொழிகளைத் தாழ நோக்குதலும் ஆகாது. தாய்மொழி என்பது, நமது பெற்றோர், நமது உடல், நமது பூமி இவற்றைப் போல, நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம் உயிரின் உய்வுக்காக அமையப் பெறுகிறது.
தாய்மொழியை நாம் தேர்ந்தெடுப்பதில்லை, ஒரு விதத்தில் அம்மொழி நம்மைத் தேர்ந்தெடுக்கிறது. காலத்தின் ஓட்டத்தில் நாம் தாய்மொழிக்கான மரியாதையையும், அது பற்றிய புரிதலையும், அதற்கான முயற்சிகளையும் வெகுவாக மறந்து விட்டோம்.
தமிழைத் தாய்மொழியாகப் பெறுவதற்கு நாம் 8 ஆயிரத்தில் ஒருவராகப் பிறந்திருக்க வேண்டும். ஆம், 800 கோடி மக்களில், வெறும் 8 கோடிக்கும் குறைவான மக்களுக்குத் தானே தமிழ் தாய்மொழியாகக் கிடைத்திருக்கிறது? இந்த advantage-ஐ நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது?
உலகில் உள்ள சொற்பமான செம்மொழிகளுள் தமிழ் மொழியில் மட்டுமே மிகவும் ஆழமான தத்துவச் செறிவும், இயல்பான மென்மைத் தன்மையும், உயிரோடு ஒன்றும் தன்மையும் இருக்கிறது என்பதனை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். தமிழின் 6 சிறப்புக்களைக் காண்போம்.
1. உலகில் உள்ள 7 செம்மொழிகளுள் ஒன்று
2. அவற்றுள் இலக்கணத் தெளிவு, இலக்கியச் செறிவு இரண்டும் சமமாகக் கொண்ட ஒரே மொழி
3. சராசரியாக ஒரு மனித இனக்குழு நாகரிக வளர்ச்சி (வாழ்விடம் மற்றும் அரசியல் ரீதியாக மட்டும்) அடைய பல நூற்றாண்டுகள் ஆகலாம். திருக்குறள் - இந்த உலகிற்கான நீதிகளை, சற்றும் தற்குறிப்பேதுமின்றி, பொதுத் தன்மையில், அனைவரையும் அரவணைத்துச் சொன்ன 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல். ஒரு இனம், எத்தனை நூற்றாண்டுகள் வாழ்ந்திருந்தால் இப்படியான ஒரு documented civilization நிலைக்கு வர முடியும்? சிந்திக்க.
4. உலகிற்குத் தேவையான நவீனங்களோடும் தன்னைப் புதுக்கிக் கொள்ளும் ஒரு மொழியாகவும், அதே சமயம் தனது தொன்மைக்கு பங்கமேற்படாமல் தற்காத்துக் கொள்ளும் இயல்பு பொருந்திய ஒரே மொழி, எனது கருத்தில்.
உதாரணமாக, இணையம் (internet) இன்றைய நவீன உலகின் உச்சகட்ட தொழில்நுட்பம். இதற்கான நிகர் மொழிபெயர்ப்பை உலகின் பல மொழிகளிலும் தேடினால், தமிழில் மட்டுமே (இணைப்பதால்) இணையம் எனும் காரணப் பெயர்ச் சொல் கிடைக்கும். பிற மொழிகளில் இண்டர்நெட்எனும் ஒலி வடிவ மொழிபெயர்ப்பு மட்டுமே கிடைக்கும், இந்தி, சமஸ்கிருதம், அரபி மொழி உட்பட.
இது தமிழின் தகவமைப்புத் திறனை நிறுவுகிறது.
5. மெய்ப்பொருள் அறிவு: தத்துவம் என்பது ஏறக்குறைய எல்லா மொழிகளிலுமே உண்டு. தத்துவம் ஒரு கட்டமைப்புக்குள் வரும் போது, சமயங்களாக, மதங்களாக அவற்றின் அடிப்படையாக உருமாறுகிறது. பின் அந்த மதம்/சமயத்தின் அடையாளமாகவே ஒரு தத்துவம் மாறிவிடுகிறது. தமிழிலோ, எந்த விதமான மதச் சாயமும் இல்லாத, சமய சார்பும் இல்லாத மெய்ப்பொருள் பற்றிய ஞானக் களஞ்சியம் கிடைக்கப் பெறுகிறது. திருக்குறள் அதற்கு நிகரற்ற ஒரு சான்று. திருக்குறளின் அடிப்படையில் தான் தமிழின் பல இறை வழிபாட்டுக் கொள்கைகளும், சமய நூல்களும் நிறுவப்பெற்றிருக்கின்றன. இது உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு. வரலாற்றில் பல்வேறு காலங்களில் தமிழ்நிலத்தில் இருந்த அனைத்து சமயங்களின் நல்ல தத்துவங்களும் திருக்குறளில் பேசப்பட்டிருப்பதைக் காணலாம்.
6. மொழியின் இலக்கண அமைப்பிலேயே தத்துவ அடிப்படைகள் உள்ள ஒரே மொழி: உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் கண்ணுக்குத் தெரியாது, மெய்(உடல்) கண்ணுக்குத் தெரியும் ஆனால் உயிர் இன்றி இயங்காது. இது தமிழின் எழுத்திலக்கணத்திலேயே புதைந்திருக்கும் ஒரு தத்துவ நுட்பம். இது பிற மொழிகளில் காணப்பெற மாட்டா.
உங்களுக்குத் தெரிந்த தமிழ் மொழியின் வேறு சிறப்புகள் என்ன? தாய்மொழிக் கல்வியை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கிறீர்களா? கருத்துகளைப் பகிர்க.
Commentaires