என் தமிழாசிரியர் சொல்லியதுண்டு, "தமிழில் உள்ள அனைத்து அறநூல்களையும் படிக்க முடியாவிட்டாலும் சரி, திருக்குறளை மட்டுமாவது படி. திருக்குறளை முழுமையாக படிக்க முடியாவிட்டாலும் சரி, முதல் அதிகாரத்தை மட்டுமாவது படித்து, அதன் படி வாழக் கற்றுக் கொள், அது உன்னை உயர்த்தும்" என்று. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது முதல் அதிகாரம். அதனை கவிதை வடிவில் இங்கே விரித்தெழுதுகிறேன்.
குறள் #1
அகரம் - உந்தியில் தோன்றும் முதல் ஒலி
உதட்டைப் பிரித்து சொல்லாய் மாறி எழுத்துக்கெல்லாம் முதலாய் அமைந்தது போல
ஆதியில் பகவன் அணுவைப் பிளந்து
இரண்டாய்ப் பகுத்து அமைத்தான் அனைத்தும்
நியூட்ரானும் புரோட்டானும், ஹைட்ரஜனும் ஹீலியமும் எனத் தொடங்கி
ஆணும் பெண்ணும், நன்மையும் தீமையும், இருளும் ஒளியுமாய்
மனிதர் நம் அகத்தும் புறத்தும்
அமைகிறது உலகு
குறள் #2
வாழ்க்கையே உனக்கான கல்வி,
உன் ஒழுக்கமே உனக்கான பரீட்சை,
கற்றதன் ஆய பயன் தொழுதல்
தொழுதலினால் ஆய பயன் உய்வு
உன்னால் முடியாதது ஒன்றும் இல்லை,
ஆனால் உனக்குத் தெரியாதவை என்றும் உண்டு,
இதனை உணர்ந்து கொள், அறிவைப் பெருக்கு!
அறிவின் குறையை நிறை செய்,
கறையை தூய்மை செய்,
வாலறிவனாக மாறு.
குறள் #3
இறைவனை வெளியே மட்டும் தேடாதே
அவன் உன் மனமெனும் மலர்மிசை ஏகினான்
நீ பிறக்கும் முன்பே...
உன்
முயற்சிகளின் முதல் படியே
அவன் பெருமைமிக்க அடி...
அதன்மிசை உழைப்பைச் செலுத்து,
நிலமிசை நீடு வாழ்
மரணம் உடலுக்கன்றி உயிருக்கல்ல...
உடலிருக்கும் போதே உயர்ந்து விடு
குறள் #4
விருப்பென்றும் வெறுப்பென்றும்
மனதைப் பிளக்காதிரு...
வேண்டுமென்று நிலையில்லாத பொருளைக் கேட்காதே..
வேண்டாமென்று அனுபவங்களைத் தள்ளாதே...
இவ்விரண்டுக்கும் அப்பாலுள்ள உண்மையைத் தேடு,
என்றும் துன்பமிலா நிலையின் சாவி,
இன்பத்தை விழையாத மனத்திடம் உண்டு
குறள் #5
இறைவனைக் கண்டு அஞ்சாதே,
உன் வினைகளைக் கண்டு அஞ்சு...
நல்வினை உன் கைகளுக்கு பொன்விலங்கு
தீவினையோ முள் விலங்கு...
எதுவும் செய்யாமல் இருப்பதல்ல தீர்வு,
எதைச் செய்தாலும் அதில் உன் விருப்பும் வெறுப்பும்
ஆதிக்கம் செலுத்தாமல் செய்
இந்தப் பொருளைப் புரிந்து கொள்
வினைகள் உன்னைக் கண்டு அஞ்சும்!
குறள் #6
உன் வினைகளின் தோற்றுவாய்,
உன்னிடம் இருக்கும் பொறிகளே...
அவற்றை நெறிப்படுத்து...
நன்றல்லாத எதையும் காணாதே,
தீயவற்றைக் கேளாதே,
வாசம் விரும்பி மயங்காதே,
இன்னா சொல்லைப் பேசாதே,
இல்லறமல்லாத எதையும் தீண்டாதே...
இந்த ஒழுக்கம், உனக்கு உண்மையைத் தரும்,
உண்மை உன்னை அன்பு மயமாக்கும்,
அன்பு உன்னை மரணத்தை வெல்லச் செய்யும்
குறள் #7
மனக்கவலை மாற்றும் வித்தை
பொன்செய்யும் வித்தையை விட அரிது.
குளிருக்கு வெந்நீர் போர்வை ஆகாது,
உன் கவலைகளுக்கு வெறும் மயக்கங்கள் தீர்வாகாது.
உலகின் கலைகள் எல்லாம் உன்னை மயக்கும்...
உண்மை மட்டுமே உன்னைத் தெளிவாக்கும்...
மெய்க்கு எதிராக பொய்யிருக்கும், இதுவே உலகம்...
ஆனால் உண்மைக்கு உவமையும் இல்லை, எதிரும் இல்லை..
உண்மையாக இருக்கத் தொடங்கு,
மனக்கவலை மாற்றும் வித்தை எளிதாகும் உனக்கு.
குறள் #8
அறமென்னும் பெருங்கடலே இறைவன்,
பெரும் கடலை நீந்திக் கடந்து பயின்றால்,
நீதான் அந்தணன்! உனக்கு...
சிறு குளம் போன்ற பிற ஆழியை நீந்துவது
எளிதினும் எளிதன்றோ? எனவே,
கசந்தாலும், வலித்தாலும், உயிரே போனாலும்,
அறத்துடன் வாழ்வதில் உறுதியாய் இரு,
இந்தப் பிறப்பே உனக்கு இறுதியாய் இருக்கும்...
குறள் #9
கோளிலும் இல்லை, உன் பொறியிலும் இல்லை
அது எது? குணமெனும் நிலை...
அது உன் மனத்தில் இருக்கிறது...
எளிமையே குணமான இறைவனை
அடைவதன் இரகசியம், நீ எளிமையைப் பழகுவதே...
வாழத்தொடங்கு, அவன் தாளை உன்
தலை வணங்கும், குணமெனும் குன்றை
உன் கால்கள் அளந்து விடும்!
குறள் #10
பிறப்பின் தொல்லை இறப்பில்
நீங்கும் என்று நினைக்கிறாய்...
பிறவி கடலென்றால் அதன் கரை
இருப்பதோ வெகு தொலைவில்,
மரணம் என்பது உன் உயிர் அஞ்சி ஒடுங்கும்
ஒரு சிறு தீவுதான், அந்தத் தீவும்
இருளும் கொடுமையும் நிறைந்த
இயக்கமில்லா நிலை...
பிறப்பு உன் உயிருக்கொரு வாய்ப்பு,
அந்த வாய்ப்பில் இறைவனின்
அடி சேர்தலே உனக்கான பயணம்!
அடி சேர்தல் என்றால் உடலால் வணங்குதல் அல்ல,
அது ஒரு அடையாளம்...
உன் உடலால் இறை வழி வாழ்தலே அடி சேர்தல்.
முடிவு:
இது கடவுள் வாழ்த்து அல்லவே அல்ல...
மனிதராய்ப் பிறந்து அறிவால் தெளிந்து
ஆற்றலைப் பெருக்கி இச்சையை அடக்கி
ஈகையைப் பழகி உடலினை உறுதி செய்து
ஊனம் களைந்து எளிமையாய் வாழ்ந்து
ஏழ்மையை அழித்து ஐம்புலன் வென்று
ஒருமையை உணர்ந்து ஓராது அன்பு செய்து
உண்மையை அடைய முயற்சிக்கும்
மனித உயிருக்கான வாழ்த்து...
உனக்கும் எனக்குமான வாழ்த்து!
Comments